Tuesday, 7 January 2014

இணைந்தது இந்தியா!

இந்தியாவின் நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கு இருக்கலாம். ஆனால், அது நடைபெறும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ஆனால், சில நாட்களுக்கு முன் நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய ஒரு தேசிய இணைப்பு நடந்திருக்கிறது. ‘பவர்க்ரிட்’ நிறுவனத்தினர் ராய்ச்சூர் - ஷோலாப்பூர் 765 கிலோவோல்ட் மின் பாதை (ட்ரான்ஸ்மிஷன் லைன்ஸ்) அமைத்ததன் மூலம், நமது நாட்டின் மற்றைய பிராந்தியங்களைத் தென் பிராந்தியங்களுடன் இணைத்திருக்கிறார்கள்.
இந்தச் சாதனையால் தமிழகத்துக்கு மட்டுமின்றி, தென் மாநிலங்கள் அனைத்துக்கும் மற்றைய பிராந்தியங்களிலிருந்து மின்சாரம் வாங்கக்கூடிய வசதி ஏற்பட்டிருக்கிறது. இது நாளையே நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், எதிர்காலத்தை நோக்கி நமது மின்துறை செல்லும் பயணத்தில் இதை முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதலாம். உதாரணமாக, அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் நீர் மின்சாரம் இன்று 100 மெகா வாட்டுகளுக்கும் குறைவாக எடுக்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் அணைகள் கட்டப்பட்டால் சுமார் 40,000 மெகா வாட்டுகள் எடுக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படிக் கிடைக்கும் அதிக மின்சாரத்தைத் தமிழகம் வாங்க நினைத்தால், வருவதற்கு வழி தயாராகிவிட்டது.
குறித்தகாலத்துக்கு ஐந்து மாதங்கள் முன்பே ‘பவர்க்ரிட்’ நிறுவனத்தார் இந்தப் பாதையை முடித்துக் கொடுத்துவிட்டனர். இரவு பகல் பார்க்காமல், அதிக வசதிகள் ஏதும் இல்லாத இடங்களில் நிறுவனத்தின் பொறியியல் வல்லுநர்களும் தொழிலாளர்களும் முனைப்போடு வேலை செய்ததாக பவர்க்ரிட் நண்பர்கள் கூறுகிறார்கள். அவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள்.
மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
2013-ம் ஆண்டு செப்டம்பர் வரை நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2.30 லட்சம் மெகா வாட்டுகள். 2012-ம் ஆண்டு 2. 07 லட்சம். 2011-ம் ஆண்டு 1.81 லட்சம். எனவே, நமது மின் உற்பத்தித் திறன் இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 மெகா வாட்டுகள் அதிகரித்திருக்கிறது. இதேபோன்று 11 திட்டங்களின் முடிவில் (மார்ச் 2012) 2.69 லட்சம் கி.மீ. ஆக இருந்த மொத்த மின் பாதைகள், இந்த ஆண்டு நவம்பர் இறுதி வரை 2.82 லட்சம் கி.மீ. ஆக உயர்ந்திருக்கின்றன. இவையெல்லாம் மெச்சத் தகுந்த சாதனைகள்.
சீனாவுடன் ஓர் ஒப்பீடு
ஆனால், சீனாவுடன் இந்தப் புள்ளிவிவரங்களை ஒப்புநோக்கிப் பார்த்தால், இந்தியா எங்கே இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்தியாவை விட ஐந்து மடங்குகள் மின் உற்பத்தித் திறனை சீனா கொண்டிருக்கிறது. 2012 இறுதிவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி அதன் மின் உற்பத்தித் திறன், 1.14 மில்லியன் மெகா வாட்டுகள். மின் பாதைகளின் நீளம் 2012-ல் 7 லட்சம் கி.மீ. ஆண்டுக்கு சுமார் 70,000 கி.மீ. மின்பாதைகள் அங்கு அமைக்கப்படுகின்றன.
சீனாவின் ‘மூன்று பள்ளங்கள்’ என்று பெயரிடப்பட்ட அணை, யாங்ட்ஸே நதியைத் தடுத்து அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணையினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 22,500 மெகா வாட்டுகள். இது இந்தியாவில் எல்லா நீர்மின் திட்டங்களிலிருந்தும் பெறப்படும் மின்சாரத்தில் பாதி பங்குக்கும் மேல். தமிழ்நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் எல்லா மின் உற்பத்தி நிலையங்களும் கொடுக்கும் மின்சாரத்தைவிட இது அதிகம். உலகில் மிகப் பெரிய நீர்மின் திட்டம் இது.
எதிர்நோக்கும் தடைகள் என்ன?
மேற்கூறிய புள்ளிவிவரங்கள் நமது நாட்டின் மின் உற்பத்தித் திறனைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், உண்மையாகவே உற்பத்தி நடக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஒரு மின் உற்பத்தி நிலையம் திறமையாக இயங்குகிறதா இல்லையா என்பதைக் கணிக்க, ப்ளாண்ட் லோட் ஃபாக்டர் எனப்படும் இயந்திரப் பளுக் காரணி என்ற அளவீடு கையாளப்படுகிறது. இதன்படி, நமது நாட்டில் நிலக்கரி கொண்டு இயங்கும் மின் நிலையங்களின் இயந்திரப் பளுக் காரணி கடந்த ஆறு மாதங்களில் சுமார் 61.5 சதவீதம். டீசல் மற்றும் எரிவாயு கொண்டு இயங்கும் மின் நிலையங்களில் 26%.
எனவே, திறமையாக இயங்கும்பட்சத்தில், நமக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் நிலக்கரித் தட்டுப்பாட்டால் கிடைக்காமல் போகிறது. இவ்வளவுக்கும் இந்தியாவில் நிலக்கரி மட்டும் 92,000 மில்லியன் டன்கள் பூமிக்கு அடியில் புதைந்துகிடக்கின்றன. தோண்டியெடுப்பதில்தான் பல சிக்கல்கள். அதனாலேயே நிலக்கரியை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம். இதே போன்று எரிவாயு கிடைக்காததால் சுமார் 15,000 மெகா வாட்டுகள் உற்பத்தி செய்ய வேண்டிய மின் உற்பத்தி நிலையங்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றன.
மின் இழப்பு
உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமும் சேர வேண்டிய இடத்துக்குச் செல்லாமல் இடையிலேயே இழந்துபோகக்கூடிய அபாயமும் இருக்கிறது. இதை மின் செலுத்தீட்டு மற்றும் பங்கீட்டு இழப்பு என்று கூறுவார்கள். இந்த இழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், மின் திருட்டு. இந்த இழப்பு இந்தியா முழுவதும் 24 சதவீதம். மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 80 சதவீதம். காஷ்மீரில் 60 சதவீதத்துக்கும் மேல். தமிழ்நாட்டில் இது 2012-13-ம் ஆண்டுகளில் 16.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இந்த இழப்பு 6 சதவீதத்துக்கும் மேல் இருப்பதில்லை. எனவே, மின் திருட்டை ஒழிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் இருக்கிறது.
தமிழகத்தின் நிலைமை
தமிழகம், மின் உற்பத்தித் திறனில் மகாராஷ்டிரத்துக்கும் குஜராத்துக்கும் பின்னால் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நமது முதல்வர் தமிழ்நாடு இன்னும் ஆறு மாதங்களில் மின் உற்பத்தியைப் பொறுத்த அளவில் உபரி மாநிலமாக மாறும் என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதன் மின் உற்பத்தித் திறன் சுமார் 20,000 மெகா வாட்டுகளாக இருந்தாலும், அதில் சுமார் 7,400 மெகா வாட்டுகள் காற்றாலைகளிலிருந்து வருகின்றன. எனவே, காற்றில்லாத நேரங்களில் நமக்குக் கிடைக்கும் மின்சாரம் கணிசமாகக் குறைந்துவிடுகிறது.
போன மாதம் மட்டும் தமிழகத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகா வாட்டுகளாக இருந்ததாக ஒரு செய்தி சொல்கிறது. மின்சாரத்துக்கான தேவை, ஆண்டுக்கு 10 சதவீதமாவது அதிகரித்துவருகிறது. எனவே, தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் இருக்கிறது. ஆனால் 4,000 மெகாவாட்டுகள் உற்பத்திசெய்யக்கூடிய செய்யூர் மின்உற்பத்தி நிலையம் போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. சமீபத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் இருப்பதைத் திறமையாக இயக்கினாலே அதிக மின்சாரத்துக்குத் தேவையிருக்காது என்று கூறப்பட்டது. இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும், ராய்ச்சூர் - ஷோலாப்பூர் இணைப்பு ஒரு புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. தமிழகத்தால் மின்சாரத்தை நியாயமான விலையில் இப்போது வாங்க முடியும். நம்மிடம் உபரி மின்சாரம் இருந்தால் விற்கவும் முடியும். என்ன தடுமாற்றங்கள் இருந்தாலும், நாம் முன்னோக்கியே பயணிக்கிறோம் என்பதை இந்தச் சாதனை காட்டுகிறது.
- பி.ஏ.கிருஷ்ணன், ஆங்கிலம் - தமிழ் நாவலாசிரியர், பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி

No comments:

Post a Comment