குரூப்-2 தேர்வில் நேர்காணல் பதவிகளுக்கான 4-வது கட்ட கலந்தாய்வும், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5. 6-ம் தேதிகளில் நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜய குமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
4-வது கட்ட கலந்தாய்வு
2009-2011ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நிய மனம் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு-1 (குரூப்-2 தேர்வு) கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான நேர்முகத்தேர்வு 2012-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடந்தது.
அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்காணல் பதவிகளுக்கு 3 கட்ட கலந்தாய்வுகளும், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 4-வது கட்ட கலந்தாய்வும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், எஞ்சியுள்ள நேர்காணல் பதவிகளுக்கு 4-வது கட்ட கலந்தாய்வும், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 5-வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5, 6-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மறுவாய்ப்பு கிடையாது
கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நாளில் வராவிட்டால் ஒருங்கிணைந்த தரவரிசையையும், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையையும் இழக்கவேண்டி வரும். மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிப்ரவரி 6-ம் தேதி தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள், முந்தைய தினம் நடைபெறும் கலந்தாய்வு முடிவில் எஞ்சியுள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வுக்கு அனுமதிக்கப் படுவர்.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment