Thursday, 30 January 2014

அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் செறிவூட்டம் சர்ச்சையில் சிக்கிய ஈரான்

யுரேனியத்தை எரிசக்தியாக மாற்றுவதில் உள்ள அடுத்த கட்ட முக்கிய பணி, செறிவூட்டம் (Enrichment). அணுசக்தி ஆயுள் சுழற்சியில் செறிவூட்டத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. செறிவூட்டம்தான் யுரேனியத்தை எரிசக்தியாக தயார் செய்கிறது.
இன்று உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் அல்லது இயங்கத் தயாராகிக்கொண்டிருக்கும் சுமார் 500 அணு உலைகளுக்கும் யு-235 ஓரிடமியாக செறிவூட்டப்பட்ட யுரேனியம்தான் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும். இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தில் யூ-235 மற்றும் யூ-238 என இரண்டு விதமான ஓரிடமிகள் உள்ளன. யூ-235 அணுக்களை பிளப்பதன் மூலம்தான் அணு உலைகளில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தில் 0.7 சதவிகிதம் யூ-235 ஓரிடமி உள்ளது. மீதமிருக்கும் 99.3 சதவிகிதம் யூ-238 ஓரிடமி நேரடியாக அணுப்பிளவிற்கு உதவுவதில்லை. எனவே ஓரிடமிகளை யூ-235 ஓரிடமியாக செறிவூட்டும் பணி நடைபெற வேண்டும்.
செறிவூட்டப் பணிக்கு பல செயல்முறைகள் கையாளப்படுகிறது. செறிவூட்டத்திற்கு யுரேனியம் குறைந்த தட்பவெட்ப நிலையில் வாயுவாக இருக்க வேண்டியது அவசியம். அதனால் சுரங்கத்தில் கிடைக்கும் யுரேனியம் ஆக்ஸைட் வேறொரு செயல்முறை மூலம் யுரேனியம் ஹெக்சாஃப்ளோரைடாக மாற்றப்படும். பரவலாக செண்ட்ரிஃபூஜ் எனப்படும் மைய விலக்கு முறையும் இந்த செறிவூட்டத்திற்கு பயன்படுகிறது. வாயு வடிவில் இருக்கும் யுரேனியத்தை சிலிண்டர்கள் போல இருக்கும் செண்டிரிஃப்யூஜில் போட்டு சுழற்றும் போது அது புவியீர்ப்பை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிக ஆற்றலை உருவாக்கும். இது தவிர செறிவூட்டத்திற்கு பல செயல்முறைகள் உள்ளன.
ஒரு சில ஆலைகளில் இயற்கை யுரேனியமே எரிசக்தியாக பயன்படுத்தபடுகிறது. உதாரணமாக, கனடாவால் வடிவமைக்கப்பட்ட கண்டுவிலும் ஆங்கிலேய வடிவமைப்பான மக்நொக்ஸிலும் இயற்கை யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது.
அணு ஆயுதங்களும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல். அணு ஆயுதங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் யுரேனியம் குறைந்தது 90 சதவிகிதம் யூ-235 உற்பத்தி செய்யும் ஆலைகளில் செறிவூட்டப்பட வேண்டும்.
அணு ஆயுதங்களிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பதாலேயே இது மிகவும் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒரு தொழில்நுட்பமாகிறது. அணு ஆயுத பரவலை தடுக்கும் பார்வையில் பார்த்தால்,செறிவூட்டம் என்பது கடுமையான சர்வதேச நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு தொழில்நுட்பம்.
உலக அளவில் செறிவூட்டம் தொழில்நுட்ப வசதி கொண்ட நாடுகள் ஒரு சிலதான். அவை அர்ஜண்டைனா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஈரான், ஜப்பான், நெதர்லாண்ட்ஸ், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, இங்கிலாந்த் மற்றும் அமெரிக்கா. பிரான்சிலுள்ள யூரோடிஃப் செறிவூட்டம் ஆலையில் ஈரான், இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு முதலீடுகள் உள்ளன.
சமீபத்தில் செறிவூட்ட தொழில்நுட்பத்தையொட்டி ஈரான் ஒரு சர்ச்சையில் சிக்கியது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் எண்ணத்துடன் ஈரான் செறிவூட்டத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபை செறிவூட்டத்தை நிறுத்தும்படி ஈரானுக்கு அழுத்தம் தந்தன. தனது அணுசக்தி கொள்கை பற்றி ஈரான் சர்வதேச அரங்கில் தெளிவாகவும் நேர்மையாகவும் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மாதம்தான் இந்த சர்ச்சை ஒரு முடிவை எட்டியது. ஈரான் சர்ச்சையின் பின்புலத்தையும் இந்தியாவின் செறிவூட்ட திட்டத்தையும் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment