Monday, 27 January 2014

நாடு முழுவதும் 81 கோடி வாக்காளர்கள்: 2009-ம் ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்

வரும் மக்களவைத் தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். இதில், 18 வயதை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 கோடி பேர் இம்முறை புதிதாக வாக்களிக்க உள்ளனர்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தேர்தல் ஆணைய தலைமை இயக்குநர் அக்சய் ரவுத் கூறியதாவது:
“2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, 2009-ம் ஆண்டு தேர்தலின்போது இருந்தவர்களை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் திருத்தும் நடவடிக்கையின் காரணமாக 3.91 கோடி புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 1.27 கோடி வாக்காளர்கள், 18 முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்கள். இந்த மாத இறுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் புதிய வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை குறித்து துல்லியமாக தெரியவரும்” என்றார்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதில், வாக்காளர்கள் பட்டியலில் பெயரை பதிவு செய்து கொள்வதன் அவசியம், வாக்குப் பதிவில் பங்கேற்பது குடிமக்களின் கடமை ஆகியவை தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: “வாக்களிக்க தகுதியுள்ள அனைவரின் பெயரும் பட்டியலில் இடம்பெற வேண்டும். அவ்வாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் தேர்தலின்போது வாக்குப் பதிவில் பங்கேற்று தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது” என்றார்.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய மாநிலங்கள், அதிகாரிகள், அமைப்புகளுக்கு 16 விருதுகள் வழங்கப்பட்டன. சுமுகமாக தேர்தலை நடத்திய ராஜஸ்தான், திரிபுரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும், வாக்காளர்களிடையே சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திய ராஜஸ்தான் பத்திரிகா நாளிதழுக்கும், தூர்தர்ஷனின் குஜராத்தி மொழி தொலைக்காட்சிக்கும் (டிடி கிர்னர்) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment