Friday, 17 January 2014

உலகைச் சூழ்ந்து நிற்கும் ஆழி

பூமிப் பந்தில் 71 சதவீதத்துக்குக் கடல் சூழ்ந்திருக்கிறது. அதாவது 100 கோடியே 3,610 லட்சம் கியூபிக் கிலோமீட்டர் அளவுடையது. பெருவெடிப்பில் சூரியனில் இருந்து பூமிப் பந்து பிரிந்துவந்தபோது, வளிமண்டலத்தில் இருந்து வந்த நீராவி, பாறைகளில் இருந்து வெளியான தண்ணீர் மூலம்தான் பெருங்கடல்கள் உருவாகின.
கடலின் நிறம் நீலம் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை, உண்மையில் கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களைச் சூரியஒளியில் இருந்து கிரகித்துக் கொள்கிறது. நிறமாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள் பிரதிபலிக்கின்றன.
மேலும் எல்லாக் கடல்களுமே நீல நிறத்தில் இருப்பதில்லை. செங்கடல் என்ற பெயர், அதனுடைய தண்ணீரின் நிறம் காரணமாகவே உருவானது. செங்கடல் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல்பாசிகள் அதன் மேல்மட்ட நீரில் அதிகம் இருப்பதே.
தென்கிழக்கு ஐரோப்பாவில் கருங்கடல் என்றொரு கடல் இருக் கிறது. அந்தத் தண்ணீரில் உயிர் வளியான ஆக்சிஜன் இல்லாத தால், அந்தத் தண்ணீர் உயிர்வளம் இழந்து கருப்பாகிவிட்டது.
கிழக்குச் சீனப் பகுதியில் இருக்கும் மஞ்சள் கடலுக்கு வரும் நதிகள் மஞ்சள் நிற சேற்றைக் கொண்டு வருவதால், அந்தக் கடல் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிட்டது.
வேதியியல் தொழிற்சாலை
உலகத்தில் இருப்பதிலேயே மிகப் பெரிய இயற்கை வேதியியல் தொழிற்சாலை கடல்தான். கடலில் உள்ள முக்கிய வேதிப்பொருள்கள் சோடியம் குளோரைடு என்றழைக் கப்படும் சாதாரண உப்பும் கால்சியம் கார்பனேட் என்றழைக்கப் படும் சுண்ணாம்பும். பவளத்திட்டு கள் (Coral reef) உருவாகக் கால்சியம் கார்பனேட்டே காரணம்.
உலகிலுள்ள வேதிப்பொருள் களில் பெரும்பாலானவை கடலில் இருக்கின்றன. ஏன் தங்கமும் கூட இருக்கிறது. கடல் பரந்தது என்பதால் அங்கு இருக்கும் தங்கத்தின் மொத்த அளவைக் கொண்டு, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 4 கிலோ தங்கத்தைக் கொடுக்கலாம். ஆனால், கடலில் இருக்கும் தங்கத் தைப் பிரித்தெடுப்பது, அப்படி ஒன்றும் சாதாரணக் காரியமல்ல.
சரி, மற்ற வேதிப்பொருள்கள் இருக்கட்டும். கடல்தண்ணீர் ஏன் உப்புக் கரிக்கிறது? பூமியில் இருக்கும் பாறைகள், மண்ணில் உள்ள உப்பு, நீர் சுழற்சி மூலம் கடலைச் சென்றடைவதால்தான்.
மண், நீர் நிலைகள் மூலமாகத்தான் உப்பு கடலுக்குச் செல்கிறது என்றால் அவை ஏன் உப்பு கரிக்காமல், கடல்தண்ணீர் மட்டும் உப்பு கரிக்கிறது?
அதற்குக் காரணம் இருக்கிறது. நீர் சுழற்சி (மழை) நடைபெறுகையில், நிலப் பகுதியில் பெய்த மழை நதியாகப் பாயும்போது, இடைப்பட்ட பகுதிகளில் இருக்கும் உப்பையும் தாதுப் பொருட்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறது. இந்தத் தண்ணீர் கடலை அடைந்ததும், கடல்நீரில் உப்பு சேர்கிறது. ஆனால், கடல்நீர் ஆவியாகும்போது கனமான உப்புகளும் தாதுப்பொருள்களும் கடலிலேயே தங்கிவிடுகின்றன. எடை குறைந்த நீர் மூலக்கூறுகள் மட்டும் ஆவியாகி மேகமாகின்றன.
பெருமளவு தாதுப்பொருள்களும் உப்பும் கடலின் ஆழத்தில் வண்டல், மணலுடன் படிந்துவிடுகின்றன. இருந்தபோதும், கடல்நீரை உப்பு கரிக்கச் செய்யும் அளவுக்கு மேல் மட்டத்திலும் உப்பு அதிக அளவில் இருக்கிறது.
மிதக்கலாம்
ஒரு திரவம் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஈடாக அதில் பொருள்கள் மிதக்க ஆரம்பிக்கும் (Buoyancy). ஏற்கெனவே சொன்னது போல, தாதுப்பொருள்கள் போன்றவை கடல்நீரின் அடர்த்தியை அதிகரிப்பதால், கடல்நீரில் பொருள்கள் அதிக மிதக்கும் தன்மையுடன் உள்ளன.
இதன் காரணமாக நன்னீரைக் கொண்ட குளத்தைவிட, கடலில் உங்கள் உடல் எளிதாக மிதக்கும். அதற்காக படகைப் போல மிதக்க முடியாது. கடல்நீரில் அழுத்தமும் உண்டு. ஆழத்துக்குச் செல்லச்செல்ல இந்த அழுத்தம் அதிகரிக்கும். கடலின் கடைசி ஆழப் புள்ளியில் இந்த அழுத்தம் எப்படியிருக்கும் என்றால், 45 கிலோ எடையுள்ள ஒரு தனிமனிதன் 50 ஜம்போ ஜெட்களைத் தூக்குவதற்கு இணையாக இருக்கும்.

No comments:

Post a Comment