தாக்கல் செய்யப்படும் மனுக்கள் தொடர்பான எஸ்.ஆர்.நம்பர், வழக்கு எண் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் வழக்கறிஞர்களுக்கு அனுப்பும் திட்டம் சென்னை உயர் நீதி மன்றத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றப் பணிகளை கணினிமயப்படுத்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்களின் நிலை குறித்து வழக்கறிஞர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் திட்டம் கடந்த 23-ம் தேதி (வியாழக் கிழமை) அமலுக்கு வந்துள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு ஒதுக்கப்படும் எஸ்.ஆர்.நம்பர் தொடர்பான தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் வழக்கறிஞர்களுக்கு முதலில் தெரிவிக்கப்படும். மனுவில் குறை பாடுகள் இருந்தால் அதுகுறித்தும் வழக்கறிஞருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு, குறைகளை சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்படும். வழக்கு எண் ஒதுக்கப்பட்ட பிறகு, அந்த தகவலும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.
திட்டம் அமலுக்கு வந்த 3 நாட்களில் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி
இத்திட்டத்துக்கு வழக்கறிஞர் கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி கேட்டபோது வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது:
வழக்கறிஞர் எஸ்.ராஜேஷ்: மனுவை தாக்கல் செய்த பிறகு, எஸ்.ஆர்.நம்பர் ஒதுக்கப்பட்டுவிட்டதா? அந்த எண் என்ன? வழக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளதா என்று அறிந்துகொள்ள மனு தாக்கல் பிரிவுக்கு பலமுறை அலைய வேண்டி இருந்தது. எங்களுக்கு எஸ்.எம்.எஸ். திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. வியாழக்கிழமை மனு தாக்கல் செய்த ஒன்றரை மணி நேரத்துக்குள் எஸ்.ஆர்.நம்பர் ஒதுக்கீடு குறித்து என் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துவிட்டது.
வழக்கறிஞர் ஜோசப் பிரபாகர்: என்னிடம் 4 ஜூனியர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் தினமும் புதிய மனுக்கள் தாக்கல் செய்கிறேன். எஸ்.ஆர்.நம்பர், வழக்கு எண் குறித்து அறிய ஒவ்வொரு முறையும் அவர்களை மனு தாக்கல் பிரிவுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. வியாழக்கிழமை எஸ்.எம்.எஸ்.சில் தகவல்களைப் பார்த்ததும் வியப்படைந்தேன். இனி, உச்ச நீதிமன்ற வழக்குக்காக டெல்லி சென்றாலும்கூட அங்கிருந்தபடியே இங்குள்ள மனுக்கள் நிலை பற்றி அறிந்துகொள்ள முடியும்.
வழக்கறிஞர் எஸ்.சந்திரசேகரன்: வியாழக்கிழமை 2 மனு தாக்கல் செய்தேன். ஒரு மனுவுக்கு எஸ்.ஆர்.
நம்பர் ஒதுக்கப்பட்ட தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் வந்தது. அது எந்த மனுவுக்கான எண் என்பது புரியவில்லை.
எஸ்.ஆர்.நம்பர், வழக்கு எண் அறிய வழக்கறிஞர்கள் அடிக்கடி அலையவேண்டியிருந்த நிலைக்கு எஸ்.எம்.எஸ். திட்டம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பல வழக்கறிஞர்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment