நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், விளையாட்டு வீரர்கள் லியாண்டர் பயஸ், யுவராஜ் சிங், நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இந்திய அரசுப் பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 127 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருது 2 பேருக்கும், பத்ம பூஷண் விருது 24 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 101 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 27 பேர் பெண்கள். 10 பேர் வெளிநாட்டினர்.
தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கடம் கலைஞர் டி.எச்.விநாயக் ராம், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும், திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன், யுனானி மருத்துவர் ஹக்கீம் சையது கலிபுல்லா, ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா ரெபேகா பல்லிக்கல், டாபே குழுமத்தின் மல்லிகா சீனிவாசன், விஞ்ஞானி அஜய்குமார் பாரிடா, டாக்டர் தேனுங்கள் பாலோஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன.
பத்ம விபூஷண்:
பிரபல விஞ்ஞானி ரகுநாத் ஏ. மஷெல்கர், யோகா குரு ஐயங்கார் ஆகியோர் பத்ம விபூஷண் விருது பெறுகின்றனர்.
பத்ம பூஷண்:
இஸ்ரோ தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலைத் துறைக்காக பேகர் பர்வீண் சுல்தானா, ரஸ்கின் பாண்ட், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பேட்மிட்டன் பயிற்சியாளர் கோபிசந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா, நீதிபதி தல்வீர் பண்டாரி, உள்பட 24 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ:
மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், கலைத் துறையைச் சேர்ந்த பாரேஷ் ராவல், பாலிவுட் நடிகை வித்யா பாலன், அறிவியல் துறை சார்ந்த ராமசாமி அய்யர், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிரபல நரம்பியல் நிபுணர் சுனில் பரதன், மத்திய அமைச்சர் சரத் பவாரின் சகோதரர் பிரதாப் கோவிந்த்ராவ் பவார் உள்பட 101 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுத்தறிவாளர் என்.ஏ.தபோல்கர் உள்பட 3 பேருக்கு, அவர்களது இறப்புக்குப் பிறகு பத்ம விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment