Friday, 24 January 2014

புலியைக் கொன்றது சரியா?- ஆராய்ச்சியாளர் சவுந்தரராஜன் பேட்டி

உதகையில் மனிதரைக் கொல்லும் புலி, இரண்டு மாடு, மூன்று மனிதர்களை அடித்துக் கொன்ற நிலையில், வனத்துறையினர் உயிருடன் அதைப் பிடிக்க எடுக்கப் பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்ததால், வேறு வழியின்றி சுட்டுக் கொல்ல வேண்டியநிலை ஏற்பட்டது என்று சுற்றுச்சூழல் நலச்சங்க உறுப்பினர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உதகையில் அதிரடிப்படை புலியை சுட்டுக் கொன்றது சரியா... தவறா? என்பது குறித்து, வனஉயிரின ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சவுந்தரராஜன் கூறியதாவது:
4 வயதில் ராஜ்ஜியத்தை பிடிக்கும் புலிகள் 6 ஆண்டுகளில் தளர்வடையும். ராஜ்ஜியத்தை இழந்த புலி, பிற புலிகளின் ராஜ்ஜியத்தில் சுதந்திரமாக உலாவ முடியாது. உயிர் அச்சம் ஒரு புறம், பசி மறுபுறம் வாட்டும். இந்த நிலையை அடைந்த புலிதான், காட்டை ஒட்டியிருக்கும் கிராமப்பகுதியில் ஊடுருவியுள்ளது. முதலில் மாட்டை பதம் பார்த்த புலி, அதனினும் எளிதாக தாக்கி சாப்பிடக் கூடிய மனிதர்களை கொன்று தின்றுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு புலி மனிதரை கொல்கிறது என்றால், அதன் மூதாதையர்கள் மனிதரைக் கொன்று தின்னும் பழக்கம் உள்ளதாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர். மனிதரைக் கொன்று சாப்பிடும் புலியை உயிருடன் பிடித்தாலும், அதனை மிருகக் காட்சி சாலையில் பாதுகாக்க முடியாது. இரையைக் கொண்டுவரும் ஊழியர் மீதுதான், அந்த புலிக்குக் கண் இருக்கும். அஜாக்கிரதையால் கூண்டு திறந்தால், பல உயிர்கள் பலியாக வாய்ப்பாக அமையும். எனவே, மனிதரைக் கொன்ற புலிகள் ஆபத்தானவை.
வனத்துறை அதிகாரிகள் உயிருடன் இப்புலியை பிடிக்க, முதலில் கூண்டுகள் வைத்துப் பார்த்தனர். கூண்டுக்குள் மயக்க ஊசியுடன் அமர்ந்து புலியை எதிர்பார்த்திருந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. ஆடு, நாய்களை வைத்து புலியைப் பிடிக்கும் முயற்சியும் தோல்வி கண்டது.
மூன்று மனிதரையும், இரண்டு மாடுகளையும் புலி கொன்ற நிலையில், உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை, இரவில் எங்கிருந்து புலி தாக்குமோ என்ற உயிர் அச்சம். இதுபோன்ற சூழ்நிலையிலும் பத்து நாள்களுக்கு மேலாக புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை எடுத்த முயற்சி தோல்வி கண்டது.
இக்கட்டான சூழ்நிலையில்தான் அதிரடிப்படை வீரர்கள் நவீன ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த புலிக்கு வயதாகிவிட்டதால், உயிருடன் பிடித்து வனத்துக்குள் விட்டாலும் மீண்டும் வேட்டையாட வழியின்றி நகர பகுதிக்குள்தான் வரும். அதனால் மனித உயிர்களைக் காக்கும்பொருட்டு புலியைக் கொன்றது சரிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment