தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.37 கோடி ஆக உயர்ந்துள்ளது. இதில், புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.5 லட்சம்.
தமிழகம் முழுவதும் 2014–ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழகத்தில் புதிதாக 29.38 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தனர் என்றும், அதில் சுமார் 27.53 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களால் 4.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 49 ஆயிரம் என்றார்.
சென்னையில் 2.32 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை 36,36,199 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான பட்டியலை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறும்போது, "ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு கடந்த அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்க 2,49,777 படிவங்களும், நீக்கம் செய்ய 3,414 படிவங்களும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட 2014-ம் ஆண்டுக்கான துணைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2,32,199 பேர். பெயர் நீக்கம் கோரிய படிவங்கள் மற்றும் தகுதியின்மை அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் 45,735 பேர்.
சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகம், மாநகராட்சி மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தில் துணைப் பட்டியல்களை பொதுமக்கள் பார்வையிடலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப் பட்டியலின்படி சென்னை மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
சென்னையில் 12 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்
சென்னை மாவட்டத்தில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 12-ல் பெண் வாக்காளர்களே அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 36,36,199. இதில் ஆண் வாக்காளர்கள் 18,13,076. பெண் வாக்காளர்கள் 18,22,461. ஆண்களைவிட பெண்கள் 9,385 பேர் அதிகம்.
துறைமுகம், விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளைத் தவிர மற்ற 12 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநங்கைகளின் எண்ணிக்கை 662. பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 25,344.
சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி வேளச்சேரி. இங்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி துறைமுகம். இதன் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 645 ஆகும்.
No comments:
Post a Comment