Thursday, 2 January 2014

அபாயத்தில் நிதிநிலைமை

அபாயத்தில் நிதிநிலைமை

நிதி நிலைமைகுறித்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் சமீபத்திய தரவுகள் அச்சமூட்டுகின்றன. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் இலக்குக்கு அபாய சங்காக இந்தத் தரவுகள் அமைந்திருக்கின்றன.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தியப் பொருளாதாரம் நிதிப் பற்றாக்குறையாலும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதியைப் பார்த்தால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கைமீறிப் போனதும் அதைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் பலனின்றிப்போனதும் தெரியவரும். இதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்திய பாதிப்பைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ரூபாய் மதிப்பு சரிந்தது; பணவீக்கம் தொடர்ந்து உச்சாணிக்கொம்பிலேயே நின்றது.

எனினும், ஏற்றுமதியாலும், வெளிக்கணக்கைப் பலப்படுத்தும் வண்ணம் தங்க இறக்குமதியில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையாலும் ஆச்சரியப்படும் வகையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஓரளவு வரம்புக்குள் நின்றது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பால் ஏற்பட்ட அச்சம் சற்றே தணிந்திருந்தாலும், அபாயம் முற்றிலும் நீங்கிவிடவில்லை. இந்த நிலையில் அரசின் நிதிப் பற்றாக்குறை பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4.8% என்பது நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான ‘அபாய எல்லை’ என்றும் இந்த எல்லை எக்காரணத்தைக் கொண்டும் மீறப்படக் கூடாது என்றும் அடிக்கடி சொல்வார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். தணிக்கையாளரின் அறிக்கை வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக மிகக் கடினமான காரியமாக இருக்கப்போகிறது.

இந்த அறிக்கையின்படி நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல்- நவம்பர்) நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது முழு ஆண்டு அளவில் 94%-ஐ எட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட ‘அபாய எல்லை’யை மீறும் அளவு இது. ஒட்டுமொத்த ஆண்டின் பட்ஜெட்டில் கடந்த எட்டு மாதங்கள் ஆகியிருக்கும் செலவினங்கள் 61.3%. இதுவே போன ஆண்டு 58.2% ஆக இருந்தது. வருமானம் திரட்டுதல் என்பது தொடர்ந்து 47%-க்கும் சற்று அதிகமாகவே இருந்துவருகிறது.

செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுதான் உடனடியாக மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை. அதே நேரத்தில், அரசுக்கு வருமானம் வரும் வழிவகைகளையும் மேலும் உறுதிப்படுத்த வேண்டும்; வரி வருவாய்கள் இதில் முக்கியமானது. செலவினங்களைக் கட்டுப்படுத்துவது என்பது எப்போதுமே மிகவும் சிரமமான காரியம்தான், அதுவும் தேர்தல் நடக்கும் ஆண்டில் என்றால் சொல்லவே தேவையில்லை. எனவே, திட்ட ஒதுக்கீடுகள் மேல்தான் இப்போது கைவைக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் கைவைப்பதால் வளர்ச்சி வேகத்தில் கடும் பாதிப்பு இருக்கும். வரி வருவாய்கள் நேரடியாக மொத்த உற்பத்தி மதிப்பைச் சார்ந்திருக்கின்றன. ஆனால், நிகழாண்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஐந்து சதவீதத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்பில்லாத சூழலில், அதிக அளவில் வரிவிதிப்பது என்பதும் அவற்றின் மூலம் நிதிப் பற்றாக்குறையைத் தணிப்பது என்பதும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை.

No comments:

Post a Comment