Sunday, 5 January 2014

ஜிஎஸ்எல்வி - டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தி இந்திய விஞ்ஞானிகள் சாதனை

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி - டி5 ராக்கெட், ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விஞ்ஞானிகள் 20 ஆண்டுகளாக முயற்சி செய்து, இங்கேயே உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜினைக் கொண்டு ஏவப்பட்டு வெற்றிபெற்ற முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணிக்கு ஏவப்பட்ட இந்த ராக்கெட், 17 நிமிடங்களில் விண்ணில் 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் உயரம் சென்று 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது.
குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளைத்தான் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடியும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் தேவை.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரண்டு வாயுக்களையும் முறையே மைனஸ் 183 டிகிரி, மைனஸ் 253 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு குளிர்வித்து தனித்தனி திரவமாக்கி, பின்னர் இரண்டும் சேர்ந்து எரியும்படி செய்தால் அது அதிக உந்து திறனை அளிக்கும். கடும் குளிரில் இருக்கும் இந்த திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் இன்ஜின்தான் கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் எனப்படுகிறது.
இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட, திரவ, கிரையோஜெனிக் என்ற 3 அடுக்குகளைக் கொண்டதாகும். 3-வது அடுக்கில் பொருத்துவதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கப்பட்டது.
மூன்று முயற்சிகளுக்கு பிறகு கிரையோஜெனிக் இன்ஜினில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன.
49.13 மீட்டர் நீளமும், 414.75 டன் எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட், 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை காலை 11.18 மணிக்கு தொடங்கியது.
குறித்த நேரத்தில் ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சீறிப்பாய்ந்த ராக்கெட் 17 நிமிடங்களில் 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் உயரத்துக்கு விண்ணில் சென்று ஜிசாட்-14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும், விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பாராட்டுத் தெரிவித்தார். விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இஸ்ரோவின் இந்த சாதனை மூலம், இந்திய கிரையோஜெனிக் இன்ஜின் திறன் உலக அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் துறையில் நமது முன்னேற்றம் இனி வேகமெடுப்பது திண்ணம்.

No comments:

Post a Comment