பொருட்பால்: கேள்வி
411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
பொருள்: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
412. செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பொருள்: செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
பொருள்: கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
414. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
பொருள்: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
பொருள்: கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
பொருள்: எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
பொருள்: நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
பொருள்: கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
பொருள்: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
பொருள்: செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
பொருட்பால்: அறிவுடைமை
421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
பொருள்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
பொருள்: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பொருள்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
பொருள்: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
425. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
பொருள்: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
426. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
பொருள்: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
427. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்: அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
429. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
430. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
பொருள்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
பொருட்பால்: பெரியாரைத் துணைக்கோடல்
441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
பொருள்: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
442. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பொருள்: எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
443. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பொருள்: பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
பொருள்: அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
பொருள்: கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.
446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
பொருள்: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
447. இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
பொருள்: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
பொருள்: கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
449. முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
பொருள்: கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.
450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பொருள்: நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
பொருட்பால்: வலியறிதல்
471. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
பொருள்: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.
472. ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
பொருள்: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
474. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
பொருள்: மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
475. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
பொருள்: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
பொருள்: தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.
477. ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
பொருள்: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.
478. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
பொருள்: எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.
479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருள்: இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.
480. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
பொருள்: தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.
பொருட்பால்: காலமறிதல்
481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
பொருள்: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
பொருள்: காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
483. அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
பொருள்: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
484. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
பொருள்: உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.
485. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
பொருள்: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
486. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
பொருள்: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பொருள்: பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.
488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பொருள்: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
489. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
பொருள்: கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.
490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
பொருள்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
பொருட்பால்: வினைத்திட்பம்
661. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
பொருள்: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
பொருள்: இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.
663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
பொருள்: செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
பொருள்: இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
பொருள்: செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.
666. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
பொருள்: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
பொருள்: உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
பொருள்: மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
669. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
பொருள்: இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
பொருள்: எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.
பொருட்பால்: பொருள்செயல்வகை
751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
பொருள்: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
பொருள்: பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
753. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பொருள்: பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.
754. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
பொருள்: சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
பொருள்: அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
756. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
பொருள்: இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
757. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
பொருள்: அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.
758. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
பொருள்: தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.
759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
பொருள்: செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
பொருள்: அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.
பொருட்பால்: நட்பு
781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
பொருள்: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
பொருள்: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.
783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பொருள்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
பொருள்: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
பொருள்: நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
பொருள்: முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
பொருள்: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பொருள்: உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
பொருள்: நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பொருள்: இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
பொருட்பால்: சான்றாண்மை
981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
பொருள்: ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
பொருள்: சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
பொருள்: அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
பொருள்: தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
பொருள்: ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
பொருள்: சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
பொருள்: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
988. இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
பொருள்: சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
பொருள்: சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
பொருள்: சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
பொருட்பால்: பண்புடைமை
991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பொருள்: பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பொருள்: அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
993. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
பொருள்: உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
பொருள்: நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
பொருள்: ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
996. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பொருள்: பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
பொருள்: மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறி
வுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
998. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
பொருள்: நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
பொருள்: பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பொருள்: பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.