Friday, 31 January 2014

குரூப்-2 தேர்வுக்கு 4-வது கட்ட கலந்தாய்வு- பிப்ரவரி 5, 6-ல் நடக்கிறது

குரூப்-2 தேர்வில் நேர்காணல் பதவிகளுக்கான 4-வது கட்ட கலந்தாய்வும், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5. 6-ம் தேதிகளில் நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜய குமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
4-வது கட்ட கலந்தாய்வு
2009-2011ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நிய மனம் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு-1 (குரூப்-2 தேர்வு) கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான நேர்முகத்தேர்வு 2012-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடந்தது.
அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்காணல் பதவிகளுக்கு 3 கட்ட கலந்தாய்வுகளும், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 4-வது கட்ட கலந்தாய்வும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், எஞ்சியுள்ள நேர்காணல் பதவிகளுக்கு 4-வது கட்ட கலந்தாய்வும், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 5-வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5, 6-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மறுவாய்ப்பு கிடையாது
கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நாளில் வராவிட்டால் ஒருங்கிணைந்த தரவரிசையையும், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையையும் இழக்கவேண்டி வரும். மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிப்ரவரி 6-ம் தேதி தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள், முந்தைய தினம் நடைபெறும் கலந்தாய்வு முடிவில் எஞ்சியுள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வுக்கு அனுமதிக்கப் படுவர்.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்களின் வரலாறு: பாவேந்தர் பாரதிதாசன்

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பல.  
பிறப்பு: பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், புதுவையில், 1891 - ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி (புதன்) இரவு பத்தேகால் மணிக்கு புதுவையில் வணிகராக இருந்த கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.
கல்வி: பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார்.
1908 ஆண்டில் புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார்.
ஆசிரியர் பணி: 1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றார். மிகச்சிறிய வயதிலேயே தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார். அப்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.
1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
இல்லற வாழ்க்கை: பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920 ஆம் ஆண்டில் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டில் தலைமகள் சரசுவதி பிறந்தார். இவருக்கு பிறகு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928 ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
1922 ஆம் ஆண்டு கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதி வந்தார்.
பாரதியார் சந்திப்பு: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
நண்பனின் திருமண நிகழ்வின் போது பாரதியாரை நேரில் சந்தித்த பாரதிதாசன், பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை: பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தவர், தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
அச்சமயங்களில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்டது (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.
தந்தை மறைவு: 23.1.1916 ஆம் ஆண்டு கனகசபை முதலியார் இயற்கை எய்தினார்.
நாளிதழ் ஆசிரியர் பணி: 1930 டிசம்பர் 10 இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.
படைப்புகள்:  எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
இறப்பு: எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், 1964 ஆண் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மறுநாள் புதுவைக் கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விருதுகள்: பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், 1946 சூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு அவரது மரணத்திற்குப் பின், 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.
1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.
1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாரதிதாசனின் படைப்புகள்:
பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
• பாண்டியன் பரிசு (காப்பியம்)
• எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
• குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
• குடும்ப விளக்கு (கவிதை நூல்)
• இருண்ட வீடு (கவிதை நூல்)
• அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
• தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
• இசையமுது (கவிதை நூல்)
• அகத்தியன் விட்ட புதுக்கரடி
• பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
• செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
• பாரதசக்தி நிலையம் (1944)
• இசையமுதம் (இரண்டாம் பாகம்)
• பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
• குடியரசுப் பதிப்பகம் (1939)
• இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
• பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
• குயில் (1948) எதிர்பாராத முத்தம்
• வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
• எது பழிப்பு
• குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
• குயில் (1948)
• கண்ணகி புரட்சிக் காப்பியம்
• அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
• காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
• கற்புக் காப்பியம்
• குயில் (1960)
• காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
• காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
• காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
• குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
• குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
• முல்லைப் பதிப்பகம் (1944)
• குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
• பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
• குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
• சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
• சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
• தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
• தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
• திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
• தேனருவி இசைப் பாடல்கள்
• பாரதிதாசன் பதிப்பகம் (1955)
• நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
• நீலவண்ணன் புறப்பாடு
• பாண்டியன் பரிசு
• முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
• பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
• பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
• பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
• குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
• பாரதிதாசன் பதிப்பகம் (1952)
• பாரதிதாசன் நாடகங்கள்
• பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
• முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
• பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
• புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
• பெண்கள் விடுதலை
• பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
• மணிமேகலை வெண்பா
• அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
• முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
• கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
• உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
• வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
• தமிழுக்கு அமுதென்று பேர்
• வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
• புகழ் மலர்கள் நாள் மலர்கள்
• தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பட்டதாரிகளுக்கான பொது எழுத்துத் தேர்வு

நமது நாட்டின் மத்திய அரசு தொடர்புடைய காலி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பிரிவுகள்?: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வின் மூலம் சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, வெளியுறவுத்துறை அமைச்சகம், சி.பி.டி.டி., சி.பி.இ.சி., டைரக்டரேட் ஆப் என்போர்ஸ்மெண்ட் அண்டு ரெவின்யூ, அஞ்சல் துறை, சென்ட்ரல் பீரோ ஆப் நர்காடிக்ஸ் உள்ளிட்ட மத்திய அரசுத் துறை பலவற்றில் உள்ள அப்பர் டிவிஷன் கிளார்க், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் மற்றும் அஸிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
வயது : மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது 18ஆகவும், அதிகபட்ச வயது விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 26 அல்லது 27 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து தகுதி மாறுபடுகிறது. இருந்த போதும் குறைந்த பட்ச தகுதி பட்டப் படிப்பு ஆகும். பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை : ரூ.100/-ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீஸ் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்த வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் உரிய மண்டல அலுவலக்த்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu-600006
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.02.2014
இணையதள முகவரி : <http://ssc.nic.in/notice/examnotice/CGLE-2014%20Notice.pdf>
Click Here

இந்திய ஆட்சிப் பணிக்கு இணையான பணி!

இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்தேர்வில், எழுத்துத் தேர்வில் 1,000 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 200 மதிப்பெண்களும் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. மொத்தம் 5 தாள்கள். இத்தேர்வை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயர்களும் எழுதலாம்.
முதல் தாள் பொது ஆங்கிலம், பொது அறிவு என இரு பகுதிகளைக் கொண்டது. இது 2 மணி நேரம் நடக்கும். பொது அறிவுத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாலானது. இரண்டு மற்றும் மூன்றாம் தாள்கள் விருப்பப் பாடங்கள். இதுவும் 2 மணி நேரம்தான். தலா 200 மதிப்பெண்கள். நான்கு மற்றும் ஐந்தாம்தாளில் கேள்விக்கான பதிலை விரிவாக எழுதவேண்டும். இத்தேர்வு 3 மணிநேரம் கொண்டது. தலா 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஐந்து தாள்களுக்கு மொத்தம் 1,000 மதிப்பெண்கள். கையெழுத்து சரியாக இல்லை எனில் 5 சதவீதம் மதிப்பெண் குறைக்கப்படும்.
இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்திய அரசின் இந்தியன் ரயில்வே சர்வீஸ், இந்தியன் ரயில் ஸ்டோர் சர்வீஸ், சென்ட்ரல் வாட்டர் இன்ஜினீயர் டிபார்ட்மென்ட், சர்வே ஆஃப் இந்தியன் சர்வீஸ் துறைகளில் உயர் பதவிக்கு செல்லலாம். மெக்கானிக்கல் இன்ஜினீயர்கள், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ், இந்தியன் ஆர்டனன்ஸ் ஃபேக்டரி சர்வீஸ், சென்ட்ரல் எலக்ட்ரிக்கல் அண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயர் சர்வீஸ் ஆகிய துறைகளிலும், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்கள், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், சென்ட்ரல் எலக்ட்ரிக்கல் அண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயர் சர்வீஸ் உள்ளிட்ட துறைகளிலும் பணி புரியலாம்.
பொறியியல் இரண்டாம் ஆண்டின்போதே இத்தேர்வுக்கு தயாராக வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்கள் கிடைக்கும். வரும் ஜூன் 20, 21, 22ம் தேதிகளில் இத்தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை வழங்கப்படுகிறது. 1,200 மதிப்பெண்களில் தரவரிசை அடிப்படையில் பணியிடம் ஒதுக்கப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு நடக்கும்.
இதில் தேர்ச்சி பெற்றவுடன் அரசின் சகல வசதிகளுடனும், ரூ.40 ஆயிரம் சம்பளத்தை பெற முடியும். பணியிடங்களில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் அரசின் கொள்கை முடிவின்படி, இத்தேர்வுகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு முறை உண்டு என்பதால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் பலன் அடைய வாய்ப்பு அதிகம்.

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டி- ஆ.ராசாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த முடிவு

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.
அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. டெல்லி முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தலைமை வகித்தார்.
கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரையும் பொதுமக்கள் வேறு வழியின்றி ஊழல் மற்றும் கிரிமினல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து வந்தார்கள். இப்போது அவர்கள் முன் நாம் ஒரு நல்ல மாற்று வழி ஏற்படுத்தி தந்து இருக்கிறோம். இனி சுத்தமான அரசியலை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடும். குறிப்பாக பல்வேறு கட்சிகளில் ஊழல் மற்றும் கிரிமினல்களின் சின்னமாக இருக்கும் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவோம். இந்தவகையில், 162 எம்பிக்கள் மீது கிரிமினல் வழக்குகளும் 73 எம்பிக்கள் மீது மிகக் கொடுமையான குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன. இவர்கள் அனைவரையும் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்த கட்சி முயலும்
2ஜி ஊழல் வழக்கில் சிக்கிய ஆ.ராசா உட்பட 15 மத்திய அமைச்சர்களையும் எதிர்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றார், அரவிந்த் கேஜ்ரிவால்.

வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்குகிறது தமிழக அரசு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பின் கீழ், வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையின் ஆளுநர் ரோசய்யா இன்று உரையாற்றும்போது, தமிழகத்தில் மனிதவள மேம்பாடு தொடர்பாக வெளியிட்ட தகவல்:
"மக்கள் தொகை விகிதாச்சாரத்தில், உழைக்கும் வயதுடையவர்கள் அதிக அளவில் உள்ள சாதகமான சூழலை நமது மாநிலம் தற்போது பெற்றுள்ளது என்பதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சாதகமான சூழல் வெகுகாலம் நிலைத்திருக்காது. எனவே, இச்சூழல் மாறுவதற்கு முன்பே, இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான, சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு முதலீடுகளை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவது இதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். நமது இளைஞர்களை வேலைவாய்ப்பு பெறத் தகுதியுடைவர்களாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, அவர்களது திறன் அளவை மேம்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற தனிச்சிறப்புடைய முன்முயற்சி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும்.
வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் இது வழங்கும். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நமது மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் ஆளுநர் ரோசய்யா.

சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு நூறு வயது- விழாவில் 100 ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகின்றன

சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தொடங்கப்பட்டு இந்த ஆண்டு நூறாண்டு ஆகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையில் 100 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட உள்ளன.
தாய் பல்கலைக்கழகம்
தென்னிந்தியாவில் உள்ள பழமை யான பல்கலைக்கழகங்களுக்கு தாய் பல்கலைக்கழகமாக விளங்குவது சென்னை பல்கலைக்கழகம் தான். 1857-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.
156 ஆண்டு பழமைவாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையானது இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை என்ற பெயரில் 1914-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துறையின் தலைவராக எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் நியமிக்கப்பட்டார்.
4 துணைவேந்தர்கள்
அவருக்குப் பின்னர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர், கே.கே.பிள்ளை என அடுத்தடுத்து துறைத் தலைவர்களாக பணியாற்றினர். ஆரம்பத்தில் பி.எச்டி., எம்.லிட். ஆகிய படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. 1976-ம் ஆண்டிலிருந்துதான் எம்.ஏ., எம்.பில். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சர் வில்லியம் மேயர், கே.ஏ.நீல கண்ட சாஸ்திரி, நீதிபதி பி.ராஜ கோபாலன் உள்பட 8 புகழ்பெற்ற நினைவு அறக்கட்டளைகள் ஏற்படுத் தப்பட்டு ஆண்டுதோறும் சொற் பொழிவுகள் நடத்தப்படுகின்றன. 4 பல்கலைக்கழகத் துணைவேந்தர் களை உருவாக்கிய பெருமையையும் பெற்றிருக்கிறது வரலாற்றுத்துறை. தற்போதைய துணைவேந்தர் பி.தாண்டவன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன், கொடைக் கானல் அன்னை தெரசா மகளிர் பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.ஜானகி, திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோர் வரலாற்றுத் துறையின் முன்னாள் மாணவர்களே.
100 ஆய்வுக்கட்டுரைகள்
மேலும், தற்போது இங்கிலாந்தில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணியாற்றும் மெகபூப் பாட்சா, குஜராத் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரியும் நெடுஞ்செழியன் ஆகியோர் சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வழங்கிய முத்துக்கள்.
நூற்றாண்டு கொண்டாட்டத்துக் கான நிகழ்ச்சிகளைப்பற்றி வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன் கூறியதாவது:
நூறாண்டு விழாவை முன்னிட்டு 100 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் உதவியுடன் 3 நாள் தேசிய மாநாடும் நடத்தப்பட இருக் கிறது. அதுமட்டுமின்றி, வரலாற்றுத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் கள், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.
வினாடி-வினா
மேலும், சென்னை கல்லூரிகளுக்கு இடையே வரலாறு தொடர்பான வினாடி-வினா போட்டி ஒன்றை நடத்த இருக்கிறோம். ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதுவரை வர லாற்றுத்துறையில் சமர்ப்பிக்கப்பட்ட எம்.பில்., பி.எச்டி. ஆய்வுக்கட்டுரை விவரங்களை மாணவர் பெயர், ஆய்வு தலைப்பு, வெளியான ஆண்டு ஆகியவற்றுடன் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

குடும்ப செலவுத் திட்டம் - என்றால் என்ன?

விலைக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு weight தரவேண்டும். ஒரு பொருள் நம் மொத்த நுகர்வில் எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதைப் பொறுத்து அப்பொருளின் weight இருக்கும். இதனைக் குடும்பச் செலவு திட்டம் என்ற புள்ளிவிபரக் கணக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ள வீட்டில் நுகரப்படும் பொருட்களின் தன்மைகளுக்கும் மற்ற குடும்பங்களில் உள்ள நுகர்வுத் தன்மைக்கும் நல்ல வேறுபாடு இருக்கும். அதே போல் வெவ்வேறு பொருளாதார நிலைகளில் உள்ள குடும்பங்களுக்கிடையே நுகர்வுத் தன்மை மாறுபடும். எனவே நுகர்வுத் தன்மை மாறுவதற்கு குடும்ப நபர்களின் வயது, எண்ணிக்கை, பொருளாதார நிலை, இயற்கைச் சூழல், நகரம் அல்லது கிராமம் என்ற பல அம்சங்கள் உள்ளன.
இதை எல்லாம் கவனத்தில் வைத்து ஒரு மாதிரி கணக்கெடுப்பு (Sample Survey) நடத்தப்பட வேண்டும். மேலும், நமது நுகர்வு அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதால், குடும்பச் செலவு திட்ட மாதிரி கணக்கெடுப்பும் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். ஆனால், நாம் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை குடும்பச் செலவு திட்ட மாதிரி கணக்கெடுப்பை நடத்துகிறோம்.
எந்த ஒரு வருடத்தில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதோ அந்த வருடமே விலைக் குறியீட்டின் அடிப்படை வருடமாகிறது (base year). கடைசியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்புப்படி 2004-05 இப்போது உள்ள விலைக் குறியீட்டு எண்ணுக்கு அடிப்படையாக உள்ளது.
அடிப்படை வருடத்தை மாற்றுவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர மத்திய திட்டக் குழு உறுப்பினர் சௌமித்ர சௌத்ரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக்கொண்டால், விலைக் குறியீடு கணக்கில் சில மாற்றங்கள் ஏற்படும்.
இந்தியாவில் இரண்டு முக்கியமான விலைக் குறியீட்டு எண்கள் பயன்பாட்டில் உண்டு. ஒன்று மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index WPI) மற்றொன்று நுகர்வு விலைக் குறியீடு (Consumer Price Index-CPI). கிராம CPI, நகர CPI, மற்றும் இவை இரண்டும் இணைந்த CPI என்று மூன்று வகை CPI உண்டு; ஆனால், WPIயில் இவ்வாறான வேறுபாடுகள் கிடையாது.
CPIயை மத்திய புள்ளியல் மையம் கணக்கிடுகிறது, WPIயை மத்திய வணிப மற்றும் தொழில் அமைச்சகம் கணக்கிடுகிறது. இவை மட்டுமல்லாமல், விவசாயத் தொழிலார்களுக்கான CPI, தொழிற்சாலை தொழிலார்களுக்கான CPI என்ற விலைக் குறியீட்டு எண்களும் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் கணக்கிடப்படுகிறது.
இந்த வெவ்வேறு விலைக் குறியீட்டு எண்களின் கணக்கீட்டில் பொருட்களின் சேர்க்கை, weights என்பவை மாறுபடுவதால் குறியீட்டு அளவும் மாறுபடும். அடுத்ததாக WPI, CPI கணக்கிடுவதைப்பற்றி பார்ப்போம்.

Thursday, 30 January 2014

தேசிய நீர்மின் கழகத்தில் கணக்காளர் பணி

தேசிய நீர்மின் கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Chemist Trainee(ACT) (E1)
காலியிடங்கள்: 09
வயதுவரம்பு: 10.02.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: பயிற்சி காலத்தில் ரூ.20,600 உதவித்தொகையாகவும், 3 வருட பயிற்சிக்குப்பிறகு ரூ.20,600 - 46,500 என்ற சம்பள விகிதத்தில் பணி அமர்த்தப்படுவர்.
பணி: Accountant (W7)
காலியிடங்கள்: 38
வயதுவரம்பு: 10.02.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: CA/ICWA முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,000 -34,500 + கிரேடு சம்பளம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதலாம். தவறான பதில்களுக்கு கழிவு மதிப்பெண்கள் உண்டு.
தேர்வு மையங்கள்: தில்லி-NCR, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா, போபால், பாட்னா, லக்னோ மற்றும் புவனேஸ்வர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை CAG Branch, New Delhi (Code: 09996)- ல் A/C No. 30987919993) என்ற வங்கி கணக்கில் ஏதாவதொரு எஸ்பிஐ கிளையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpccareers.net என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 13.04.2014

பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ கழகத்தில் பணி

மாநில பணியாளர் காப்பீட்டு கழகத்தில் (Employee's State Insurance Corporation) காலியாக உள்ள சமூக பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Social Security Officers(SSos)
மொத்த காலியிடங்கள்: 267
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
வயதுவரம்பு: 20.02.2014 தேதியின்படி 21 - 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். Commerce/Law/Management போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கம்ப்யூட்டரில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
அரசு, அரசுசார் நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் 3 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், கல்கத்தா உள்பட 22 மையங்களில் நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.275. இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கிடைக்கும் செல்லானை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.
 SC/ST/PWD/ESIC பணியாளர்கள், முன்னாள் இராணனுவத்தினர் மற்றும் பெண்கள் பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.02.2014
ஆன்லைன் பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய ரயில்வேயில் 26,570 பணியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:  Centralised Employment Notice No.01/2014
மொத்த காலியிடங்கள்: 26.570. இதில் தமிழகத்துக்கு மட்டும் 1666 பணியிடங்கள், மொத்த பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 13,464, ஓபிசி பரிவினருக்கு 262, எஸ்சி பிரிவினருக்கு4122, எஸ்டி பிரிவினருக்கு 2464 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி) மற்றும் டெக்னீசியன்
சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டி.வி மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திகருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2014
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 15.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrbchennai.gov.in, www.rrbbnc.gov.in, www.rrbthiruvananthapuram.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள் (ஜன. 30, 1933)

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய அடால்ப் ஹிட்லர் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார்.

பின்பு 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவர் ஆனார். அன்றுமுதல் தன்னுடைய இறப்பு வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஹிட்லர் ஜெர்மனியின் பியூரர் என்று அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினின் ஹிட்லரின் நாசிக் படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார். 

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

1882 - 32-வது அமெரிக்க குடியரசு தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிறந்த தினம்
1874 - ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் மறைந்த தினம்
1889 - ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: பால்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
1976 - தமிழ்நாட்டில் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.

அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் செறிவூட்டம் சர்ச்சையில் சிக்கிய ஈரான்

யுரேனியத்தை எரிசக்தியாக மாற்றுவதில் உள்ள அடுத்த கட்ட முக்கிய பணி, செறிவூட்டம் (Enrichment). அணுசக்தி ஆயுள் சுழற்சியில் செறிவூட்டத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. செறிவூட்டம்தான் யுரேனியத்தை எரிசக்தியாக தயார் செய்கிறது.
இன்று உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் அல்லது இயங்கத் தயாராகிக்கொண்டிருக்கும் சுமார் 500 அணு உலைகளுக்கும் யு-235 ஓரிடமியாக செறிவூட்டப்பட்ட யுரேனியம்தான் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும். இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தில் யூ-235 மற்றும் யூ-238 என இரண்டு விதமான ஓரிடமிகள் உள்ளன. யூ-235 அணுக்களை பிளப்பதன் மூலம்தான் அணு உலைகளில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தில் 0.7 சதவிகிதம் யூ-235 ஓரிடமி உள்ளது. மீதமிருக்கும் 99.3 சதவிகிதம் யூ-238 ஓரிடமி நேரடியாக அணுப்பிளவிற்கு உதவுவதில்லை. எனவே ஓரிடமிகளை யூ-235 ஓரிடமியாக செறிவூட்டும் பணி நடைபெற வேண்டும்.
செறிவூட்டப் பணிக்கு பல செயல்முறைகள் கையாளப்படுகிறது. செறிவூட்டத்திற்கு யுரேனியம் குறைந்த தட்பவெட்ப நிலையில் வாயுவாக இருக்க வேண்டியது அவசியம். அதனால் சுரங்கத்தில் கிடைக்கும் யுரேனியம் ஆக்ஸைட் வேறொரு செயல்முறை மூலம் யுரேனியம் ஹெக்சாஃப்ளோரைடாக மாற்றப்படும். பரவலாக செண்ட்ரிஃபூஜ் எனப்படும் மைய விலக்கு முறையும் இந்த செறிவூட்டத்திற்கு பயன்படுகிறது. வாயு வடிவில் இருக்கும் யுரேனியத்தை சிலிண்டர்கள் போல இருக்கும் செண்டிரிஃப்யூஜில் போட்டு சுழற்றும் போது அது புவியீர்ப்பை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிக ஆற்றலை உருவாக்கும். இது தவிர செறிவூட்டத்திற்கு பல செயல்முறைகள் உள்ளன.
ஒரு சில ஆலைகளில் இயற்கை யுரேனியமே எரிசக்தியாக பயன்படுத்தபடுகிறது. உதாரணமாக, கனடாவால் வடிவமைக்கப்பட்ட கண்டுவிலும் ஆங்கிலேய வடிவமைப்பான மக்நொக்ஸிலும் இயற்கை யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது.
அணு ஆயுதங்களும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல். அணு ஆயுதங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் யுரேனியம் குறைந்தது 90 சதவிகிதம் யூ-235 உற்பத்தி செய்யும் ஆலைகளில் செறிவூட்டப்பட வேண்டும்.
அணு ஆயுதங்களிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பதாலேயே இது மிகவும் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒரு தொழில்நுட்பமாகிறது. அணு ஆயுத பரவலை தடுக்கும் பார்வையில் பார்த்தால்,செறிவூட்டம் என்பது கடுமையான சர்வதேச நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு தொழில்நுட்பம்.
உலக அளவில் செறிவூட்டம் தொழில்நுட்ப வசதி கொண்ட நாடுகள் ஒரு சிலதான். அவை அர்ஜண்டைனா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஈரான், ஜப்பான், நெதர்லாண்ட்ஸ், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, இங்கிலாந்த் மற்றும் அமெரிக்கா. பிரான்சிலுள்ள யூரோடிஃப் செறிவூட்டம் ஆலையில் ஈரான், இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு முதலீடுகள் உள்ளன.
சமீபத்தில் செறிவூட்ட தொழில்நுட்பத்தையொட்டி ஈரான் ஒரு சர்ச்சையில் சிக்கியது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் எண்ணத்துடன் ஈரான் செறிவூட்டத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபை செறிவூட்டத்தை நிறுத்தும்படி ஈரானுக்கு அழுத்தம் தந்தன. தனது அணுசக்தி கொள்கை பற்றி ஈரான் சர்வதேச அரங்கில் தெளிவாகவும் நேர்மையாகவும் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மாதம்தான் இந்த சர்ச்சை ஒரு முடிவை எட்டியது. ஈரான் சர்ச்சையின் பின்புலத்தையும் இந்தியாவின் செறிவூட்ட திட்டத்தையும் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் யுரேனியம் ஆலைகளும் ஆபத்துகளும்

மில்லிங் எனப்படும் ஆலையிடுதல் பற்றிதான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் யுரேனியத்தை அப்படியே மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது. அதைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனில், அதை யுரேனியம் மஞ்சள் கேக் என்று அழைக்கப்படும் ஒரு பொருளாக மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றுவதற்கு முதல் படியாக யுரேனியத்தை பொடிப்பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லா துகள்களும் ஒரே அளவில் இருப்பது முக்கியம். இந்த செயல்பாட்டின் போது அவ்வபோது தண்ணீர் சேர்க்கப்படும். கழுவிப் பிரிப்பதற்கான திரவமும் சேர்க்கப்படும். இதன் பிறகு அமிலக்கழுவல் நடைபெறும்.
சல்ப்யூரிக் ஆசிட் கொண்டு யுரேனியம் பிரிக்கப்படும். கனிமத்தில் சுண்னாம்புக்கல் அதிகமாக இருந்தால் அல்கலைன் லீச்சிங் எனப்படும் செயல்முறை பின்பற்றப்படும். காரணம், சுண்னாம்புக்கல் அதிகமிருந்தால் அமிலக்கழுவலில் அதிக அளவிலான ஆசிட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இரண்டு விதமான லீச்சிங்கிலும் ஒரே மாதிரியான சூழல் மற்றும் சுகாதார பிரச்னைகள் இருப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்களும் யுரேனியம் எதிர்ப்பாளர்களும் சொல்கிறார்கள்.
ஆலையிடுதலின்போது உருவாகும் கழிவுகள்தாம் இந்தப் பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணம் என்று சொல்லப்படுகிறது. சுமார் 90 சதவிகிதம் யுரேனியம் கனிமத்திலிருந்து பிரிக்கப்படுவதால் மிஞ்சியிருக்கும் தோரியம், ரேடியம், ரேடான் மற்றும் ஈயம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கதிரியக்கம்தான் கவலைக்குரியது என்கிறார்கள் அவர்கள். அங்கு மெற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த எச்சங்களின் தன்மைகளும் மாறலாம். ஆலையிடுதலில் ஆபத்தை விளைவிக்கும் சில அம்சங்களைப் பார்க்கலாம்.
ஆலையிடுதல் போதும் ரேடன் 222 வாயு வெளியேறும் என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இது நுரையீரலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. யுரேனியம் தூசு ஏற்றுதலின் போது காற்று நிலையில் மாற்றம் இருந்தால் ஆபத்தான தூசுக்கள் காற்றில் கலக்கலாம். ஆனால் இது பருவ நிலையை பொருத்தது. நேரடியான காம்மா கதிர்வீச்சு மில்லிங்கில் இருக்கும் இன்னொரு பிரச்னை. மில்லிங் செயல்பாடுகளின் போது 90 சதவிகிதம் யுரேனியம் பிரிக்கப்பட்டுவிட்டாலும், மிச்சமிருக்கும் கழிவுகளில் 86 சதவிகிதம் கதிரியக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மில்லிங்கின் இன்னொரு முக்கிய பிரச்னை நிலத்தடி நீர் மாசு என்று சொல்லப்படுகிறது. மில்லிங் கழிவு சேமிப்பில் உள்ள திரவக் கழிவுகள் வெளியேறி நிலத்தடி நீரோடு கலந்துவிடும் என்பது முக்கியமான ஒரு பிரச்சினை. குறிப்பாக அமில கழுவல் முறையை பயன்படுத்தும் மில்களில் இது கவலையளிக்கும் ஒன்று. காரணம், அல்கலைன் லீச்சிங் முறையை விட ஆசிட் லீச்சிங் (அமிலக்கழுவல்) முறையில் தண்ணீரோடு எளிதில் கலக்கும் கழிவுகள் வெளியேறும். 1980ல் வெளியான அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் (Nuclear Regulatory Commission) ஓர் ஆய்வின் படி ஆலை செயல்படும்போது 95 சதவிகிதம் நிலத்தடி நீர் மாசு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
யுரேனியம் ஆலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. ஆனால் அடிப்படையில் கதிரியக்க அபாயங்கள் இருப்பதை எல்லா ஆய்வுகளும் ஏற்றுக்கொள்வதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். தவிர, ஆலையில் வேலை செய்பவர்களுக்கு கூடுதலான ஆபத்துகள் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஆலையிடுதலில் பயன்படும் சல்ப்யூரிக் ஆசிட் (Sulphuric acid) கண்களுக்கும் தோலிற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால், இன்னொரு பக்கம் அணுசக்தி ஆதரவாளர்கள் மில்லிங்கில் வெளியேறும் கதிரியக்கம் மிகவும் குறைந்தவை என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 2010ல் கனடாவில் மேற்கொண்ட ஆய்வில் யுரேனியம் சுரங்கங்கள் அல்லது ஆலைகளின் அருகில் வாழும் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
யுரேனியத்தைப் பொருத்தவரையில் இன்னொரு பெரிய சிக்கல், சுரங்கம் மற்றும் ஆலையை மூடுதல். ஆலை மற்றும் சுரங்கத்தை decommission செய்த பிறகும் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது முக்கியம்.

யுரேனியத்துக்கு எதிர்ப்பு

அமெரிக்காவின் தலைசிறந்த சுற்றுசூழல் ஆர்வலர்களில் ஒருவர் பாரி காமனர் (Barry Commoner). அரசியலிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. இடதுசாரி சிந்தனை ஓட்டம் கொண்ட காமனர் அணுசக்திக்கு எதிராக சொன்ன ஒரு கருத்துதான் தொடர்ந்து அதன் எதிர்ப்பாளர்களால் பல இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. "அணுசக்தி என்பது தண்ணீரை கொதிக்க வைக்க மிகவும் சிக்கலான வழி" என்றார் அவர்.
அணுசக்திக்கு ஆதரவானவர்கள் போலவே எதிரானவர்களும் வலிமையான வாதங்களை முன் வைக்கிறார்கள். அணுசக்தி ஆதரவாளர்கள் சொல்வது போல அது தூய்மையான, பசுமையான சக்தி அல்ல என்பதை பல வருடங்களாகவே அணுசக்தி எதிர்ப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். அதனாலேயே 'தூய்மை வளர்ச்சி' முறையில் அணுசக்தியை சேர்க்கக் கூடாது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே பசுமையில்ல வாயுக்களை வெளிப்படுத்தும் அணுசக்தி எப்படி தூய்மையில்லாத சக்தி என்று இவர்கள் சொல்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன?
அணுசக்தியைப் பொருத்தவரையில் மின்சார உற்பத்தியின்போது மட்டுமே பசுமையில்ல வாயுக்களின் வெளியீடு இருக்காது. ஆனால் அணுசக்தியின் முழுமையான ஆயுள் வட்டம் அத்தனை தூய்மையானதும் அல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்கிறார்கள் அணுசக்தி எதிர்பாளர்கள்.
அணுசக்தியின் முழுமையான ஆயுள் சுழற்சியில் பல கட்டங்கள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதல்கட்டமாக அணுசக்தி உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படும் யுரேனியத்தை பூமியிலிருந்து பிரித்தெடுக்கும் மைனிங் (Mining) எனப்படும் சுரங்கவியல் நடைமுறை. (யுரேனியம் தவிர தோரியம் மற்றும் புளுடோனியமும் எரிபொருட்ளாக பயன்படுத்தப்படுகின்றன). இந்த மைனிங்கிலேயே பல பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்கள் அணுசக்தி எதிர்ப்பாளர்கள். பூமியிலிருந்து யுரேனியத்தை பிரித்தெடுக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.
ஆனால் யுரேனியச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு கடுமையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது பரவலாக சொல்லப்படும் குற்றச்சாட்டு. சுரங்கப்பணியின்போது வெளிப்படும் ரேடன் எனப்படும் நச்சு வாயு சுவாசப்பையில் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தவிர சுரங்கப்பணியின்போது மிக அதிக அளவில் அசுத்தமான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்றும், இது சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். சுரங்கப்பணியின்போதே கதிர்வீச்சு தூசு வெளியிடப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இதனால் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமன்றி சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கும் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றன.
இந்தப் பின்னணியில், 1970களில் யுரேனியம் சுரங்கப்பணி என்பதே மிகப்பெரிய அரசியல் பிரச்சினையாக உருவானது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இது மிகவும் வலிமையாக இருந்தது. 1976ல் யுரேனியம் சுரங்கப்பணிக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்டு பல ஆர்ப்பாட்டங்கள் அங்கு நிகழ்ந்தன. 1992ல் யுரேனியம் சுரங்கத்தோண்டல் குறித்த கருத்து கேட்புக் கூட்டமும் நடந்திருக்கிறது.
பல நாடுகளிலிருந்து பூர்வக்குடியினர் கலந்து கொண்ட இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் அவர்கள் வெளியிட்ட குறிப்பில், யுரேனியம் சுரங்கப்பணி, கழிவு சேகரித்து வைத்தல் மற்றும் அணுசக்தி சோதனை மூலம் இனி அவர்களது நிலங்களையோ மக்களையோ சுரண்டக் கூடாது என்பதும், அவர்களுடைய நிலங்களை சுத்தப்படுத்தி மீட்டுத்தர வேண்டும் என்பதுமே அவர்களது முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.
இன்று சுரங்கப்பணி பல வித பாதுகாப்பு அம்சங்களுடன் நடப்பதாக அணுசக்தி அமைப்புகள் சொன்னாலும், தொடர்ந்து பல இடங்களில் யுரேனியத்துக்கு எதிர்ப்பு இருந்து வந்திருக்கிறது. புகுஷிமா விபத்திற்கு பிறகு யுரேனியத்தின் விலை கணிசமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்க