Monday 4 August 2014

இந்தியாவை உயர்த்திப் பிடித்த சதீஷ்

இந்தியர்களுக்குச் சுதந்திர வேட்கையை விதைத்தது வேலூரில் நடந்த புரட்சி. வேலூருக்கான சிறப்புகளின் பட்டியலில் தன்னையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார் 23 வயது இளம் விளையாட்டு வீரரான சதீஷ் குமார் சிவலிங்கம்.
நடந்து முடிந்திருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ உடல் எடை கொண்ட இளம் ஆடவர் பிரிவில் 149 கிலோ எடையைத் தலைக்கு மேல் தூக்கித் தங்கப் பதக்கம் வென்று உலகைத் தமிழகம் நோக்கிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய வீரரின் முந்தைய சாதனையை முறியடித்திருக்கும் சதீஷ், தற்போது பணியாற்றுவது தெற்கு ரயில்வேயில். இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியதன் பின்னணியில் ஒளிந்திருக்கிறது ஓர் ஏழைத் தந்தையின் கனமான கனவு.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரிதான் இவரது சொந்த ஊர். இவரது தாத்தா ஒரு பீடித்தொழிலாளி. தாத்தாவின் உழைப்பும், அப்பாவின் கனவும்தான் தன்னை வெற்றியின் சிகரத்தில் அமரவைத்திருப்பதாக நெகிழ்வுடன் தனது நினைவுகளை மீட்டினார் சதீஷ். “ பீடி சுற்றும் தொழில், தனது தலைமுறையோடு ஒழிந்துவிட வேண்டும் என்று உழைத்து, எனது அப்பா சிவலிங்கத்தைப் படிக்க வைத்திருக்கிறார் தாத்தா. அப்பாவுக்குப் பள்ளியில் படிக்கும்போதே பளு தூக்குவதில் ஆர்வம் இருந்திருக்கிறது.
இந்த விளையாட்டுக்கான தினசரித் தேவை புரதமும் கொழுப்பும் நிறைந்த உணவு. ஆனால் தாத்தா வீட்டில் அதற்கு வழியில்லை. என்றாலும் எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து தாத்தாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்த அப்பா, பளு தூக்கும் பயிற்சியை இடைவிடாமல் செய்துகொண்டே இருந்தார். இதனால் அவரது உடல் கட்டுக்கோப்பாக இருந்தது.
அதற்குக் கைமேல் பலனும் கிடைத்தது. ராணுவத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு 1985 முதல் 2001 வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்தபோது 1986 -ல் தேசிய அளவில் நடந்த பளு தூக்கும் போட்டியில் முதலிடம் பெற்றார். ஆனால் ராணுவப் பணிச் சூழல் காரணமாகப் பளு தூக்கும் போட்டிகளில் அடுத்தடுத்த கட்டங்களை அப்பாவால் எட்ட முடியவில்லை.
இதனால் தனது கனவை என்னைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார். ஒரு மகனாக அவரது கனவுகளை நான் இப்போது மினி ஒலிம்பிக்கில் (காமன் வெல்த்) நனவாக்கியிருக்கிறேன். ஒலிம்பிக்கிலும் வெல்ல வேண்டும் என்பதுதான் என் கனவு” என்று வெற்றிப் பெருமிதத்துடன் சொல்கிறார் சதீஷ்.
சதீஷ், எளிதாக இந்தச் சாதனையை நெருங்க முடிந்ததா? இதை விவரிக்கிறார், சதீஷை உருவாக்கியிருக்கும் அவரது அப்பா முன்னாள் ராணுவவீரரான சிவலிங்கம்.
“அவன் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பளு தூக்குதல் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்துல பளு தூக்குற விளையாட்டெல்லாம் கிடையாதுப்பா என்பான். 12 வயது முதல் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். 12 வயதில் 15 கிலோ தூக்குவான். சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் மாலை மிக உற்சாகமாக வீட்டுக்கு ஓடி வந்தான். மாவட்ட அளவில் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலையும் அரசாங்கம் சேர்த்துவிட்டது என உடற்பயிற்சி ஆசிரியர் சொல்கிறார். நீங்கள் வந்து கேளுங்கள் என்றான். ஆச்சரியம்தான். 2006, 2007 ஆண்டுகளில் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் 50 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்றான். இப்படித்தான் சதீஷின் பயணம் தொடங்கியது” என்று சொல்லும் சிவலிங்கம் பிறகு 22 வயதிற்குள் மாநில அளவில், தென்னிந்திய அளவில் தேசிய அளவில் என்று வளர்ந்து, 77 கிலோ எடைப் பிரிவில் சதீஷ் தேசிய சாம்பியன் ஆகி வென்று குவித்த பதக்கங்களை நம் கண் முன்னால் பரப்புகிறார். சதீஷின் சிறிய வீடு கோப்பைகளாலும் பதக்கங்களாலும் நிறைந்திருக்கின்றன.
“77 கிலோ வெயிட்டைத் தாண்டிட்டா போட்டியில கலந்துக்க முடியாது. அதுக்காக ரொம்ப கவனமா சாப்பிடுவான். முட்டையில இருக்கிற மஞ்சள் கரு சாப்பிட மாட்டான். வாழைப்பழம் சாப்பிட ஆசையா இருக்கும்மா என்பான் ஆனால் சாப்பிட மாட்டான். வாரத்தில 4 நான்கு நாட்கள் கொழுப்பு இல்லாத சிக்கன் (250 கிராம்), வேக வைத்த காய்கறிகள், இரவு ஒரு கப் பால். இது மட்டும்தான் அவன் சாப்பாடு. நீங்க வேற என்ன கொடுத்தாலும் சாப்பிட மாட்டான். அவனோட உணவுக் கட்டுப்பாடும், ஒரு நாள்கூட நிறுத்தாத பயிற்சியும்தான். அவனுக்கு வெற்றியக் கொடுத்திருக்கு” என்று நெகிழ்ந்துபோகிறார் சதீஷின் தாய்.

No comments:

Post a Comment