சுறாக்கள் என்றாலே கொடூரமானவை; மனிதரைப் பார்த்தவுடன் கடித்துத் தின்றுவிடும். படகுகளை, கட்டுமரங்களை மூர்க்கத்தனமாகத் தாக்கும் என்றெல்லாம் தகவல்கள் உலவுகின்றன. ஆனால், சுறாக்கள் மட்டுமல்ல... எந்த ஓர் உயிரினமும் கொடூரமானது அல்ல. ஓர் உயிரினம் விரும்பியோ, திட்டமிட்டோ, அடிக்கடியோ மனிதர்களைத் தாக்குவது, கொல்வது, உண்பது இல்லை. அதேநேரம் எந்த ஓர் உயிரினமும் எந்த நேரத்தில் என்ன செய்யும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடியாது. அவற்றின் பொதுவான குணாம்சங்களை மட்டுமே சொல்ல முடியும். சுறாக்களைப் பற்றி நிலவும் வதந்திகளுக்கான பதில்கள் இங்கே...
சுறாக்கள் ஆட்கொல்லிகளா?
மனிதர்கள் சுறாக்களுக்கான உணவு அல்ல. அவை 99 சதவீதம் மீன்கள், கணவாய் மீன்கள், முதுகெலும்பு இல்லாத மெல்லுடலிகள் ஆகியவற்றை உண்ணும். பெரிய உடல் கொண்ட திமிங்கிலச் சுறா (Whale shark) போன்றவை கடலில் மிதக்கும் அழுகிய, அழுகாத இறந்துபோன மீன்கள், திமிங்கிலங்களை உண்ணும். தெரியாமல் விபத்துபோல மனித ரத்தத்தைச் சுவைத்து, பின்பு ஆட்கொல்லியாகும் தன்மை எல்லா விலங்குகளைப் போலவே சுறாக்களுக்கும் உண்டு.
சுறாக்கள் மனிதர்களைத் தாக்குமா?
ஒருவர் தண்ணீரில் நீந்தும்போது, மற்ற மீன்களைப் போலத்தான் சுறாக்களும் அவரைக் கடந்து செல்கின்றன. சுறாக்களின் வலசைப் பாதையில் கூட்டமாக மனிதர்கள் நீந்தும்போதும், மனிதர்களிடம் மின்விளக்கு அல்லது மினுமினுக்கும் தன்மை கொண்ட பொருட்கள் இருக்கும்பட்சத்தில், இரை உயிரினம் என்று நினைத்தோ அல்லது பயத்தினாலோ சுறாக்கள் தாக்க வாய்ப்பு உண்டு. பொதுவாகச் சுறாக்களை மனிதர்கள் வேட்டையாடும்போதுதான் மனித - சுறா மோதல்கள் அதிகம் ஏற்படுகின்றன. இதிலும் மனிதர்களின் இறப்பு சதவீதம் குறைவே. 2012-ம் ஆண்டில் 7.3 கோடி சுறாக்கள் வேட்டையாடப்பட்டுள்ள நிலையில், ஏழு மனிதர்கள் மட்டுமே இறந்துள்ளனர்.
சுறாக்கள் எல்லாமே பிரம்மாண்டமானவையா?
சினிமாக்களில் காட்டுவதுபோல அனைத்துச் சுறா வகைகளும் பிரம்மாண்டமாகவும், வாய் முழுவதும் கூரிய கோரைப் பற்கள் கொண்டவையும் அல்ல. உலகில் உள்ள சுமார் 400 சுறா வகைகளில் நான்கு அங்குல நீளம் கொண்ட நாய்ச் சுறாவும் உண்டு; 40 அடி நீளமுள்ள திமிங்கிலச் சுறாவும் உண்டு. பாஸ்கிங் சுறாவுக்கு (Basking shark) சொற்ப எண்ணிக்கையில் மிகச் சிறிய பற்களே இருக்கின்றன. சாப்பிடும்போதுகூட அது பற்களைப் பயன்படுத்துவது இல்லை. பயந்த சுபாவம் கொண்ட கொம்பன் சுறாவுக்கு (Horn shark) பால் பற்கள் எனப்படும் முளைப் பற்கள் மட்டுமே உண்டு.
சுறாக்களின் தற்போதைய நிலை என்ன?
கவலைக்குரிய வகையில் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இயல்பிலேயே மெதுவாக வளர்ச்சியடையும் தன்மை கொண்ட இவை, இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடையவே பல ஆண்டுகளாகும். அதற்குள்ளாகவே இறைச்சிக்காகவும், சூப்புகளுக்காக அதன் துடுப்புகளும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றன. மீனவர்களின் பிரம்மாண்டமான இழுவை வலைகளில் (Trawl net) சிக்கி, அடிபட்டும் இறந்து போகின்றன.
சுறாக்கள் ஏன் அவசியம்?
கடலின் சுற்றுச்சூழலைச் சமநிலையில் வைத்திருப்பதில் சுறாக்களின் பங்கு அதிகம். தேவை இல்லாத இறந்த உயிரினங்களின் உடல்களைச் சாப்பிடுவதன் மூலம், கடலின் தூய்மையை அவை காக்கின்றன. குறிப்பிட்ட கடல் உயிரினங்கள் அதிகளவில் பெருகினால் மற்ற உயிரினங்கள் அழிந்து போகும். அவற்றைச் சுறாக்கள் இரையாகக் கொள்வதன் மூலம், கடலின் உணவுச் சங்கிலி சமநிலையில் பராமரிக்கப்படுகிறது. பெரும்பாலான சுறா வகைகள், வணிக ரீதியில் முக்கியத்துவமற்ற மீன்களையே சாப்பிடுகின்றன என்பதால், நாம் சாப்பிடும் கடல் மீன் வளம் காக்கப்படுகிறது.
(ஆகஸ்ட் 10 - 16 உலகச் சுறாக்கள் வாரம்)