இந்தப் பாலத்தின் பெயர் சீனாப் பாலம். ரியாசி என்ற மாவட்டத்தில் கவுரி - பக்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. முழுவதும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால், தரை மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்தில், 1,315 மீட்டர் நீளத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்படுகிறது.
அதுவும் இந்தப் பாலம் கட்டப்படும் பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதி. சில சமயங்களில் இங்கு மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில்கூட காற்று பலமாக வீசுமாம். இயற்கைச் சீற்றங்களால் பாலம் பாதிக்கப்படாமல் இருக்க அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கவனத்துடன் பாலத்தை அமைத்து வருகிறார்கள்.
இரு மலைகளுக்கு இடையே பாலம் 480 மீட்டர் அகலத்தில் இரும்பு வளைவுகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள குதூப்மினாரைவிட இப்பாலம் 5 மடங்கு உயரம். உலகிலேயே உயரமான பாலமாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் மில்லவ் பாலத்தைவிட 17 மீட்டர் உயரம் அதிகம். இப்பாலத்தின் உயரம் 342 மீட்டர்.