Monday 18 August 2014

5 கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள ரூ.5,23,897 கோடி: இந்திய கோடீஸ்வரர்களின் சொத்தில் பாதியளவு

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களிடம் உள்ள மொத்த சொத்தில் பாதியளவு 5 கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ளது. இந்த ஐந்து கோடீஸ்வரர்களின் தனி நபர் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 5,23,897 கோடியாகும்.
இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை வெல்த்-எக்ஸ் எனும் நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் முகேஷ் அம்பானி கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1,49,474 கோடியாகும்.
இவருக்கு அடுத்தபடியாக லட்சுமி மிட்டல், சன் பார்மா தலைவர் திலிப் சாங்வி, விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி, டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரி (டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் தந்தை) ஆகியோர் உள்ளனர்.
இந்த 5 கோடீஸ்வரர்களிடம் உள்ள தொகை 8,550 கோடி டாலராகும். இது இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரின் சொத்து மதிப்பில் 47.5 சதவீதமாகும் என்று வெல்த் எக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த 5 கோடீஸ்வரர்களும் தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டு உயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு, உருக்கு மற்றும் மருந்து பொருள் தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ளனர். அஸிம் பிரேம்ஜி நுகர்வோர் பொருள் தயாரிப்பு தவிர தகவல் தொழில்நுட்பத் துறையிலும் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பணக்கார நடிகர்களில் முதலிடத்தில் ஷாருக்கான் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 60 கோடி டாலராகும். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு 16 கோடி டாலராகும்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மும்பை இன்டியன்ஸ் என்ற கிரிக்கெட் அணியை சொந்தமாக வைத்துள்ளது. இந்த அணியின் மதிப்பு 11 கோடி டாலராகும்.
இரண்டாம் இடத்தில் உள்ள லட்சுமி மிட்டல் சொத்து மதிப்பு 1,720 கோடி டாலராகும். 64 வயதாகும் லட்சுமி மிட்டல் ஆர்சிலர் ஸ்டீல் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அத்துடன் குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் எனும் கால்பந்து கிளப்பும் இவருக்குச் சொந்தமாக உள்ளது.சன் பார்மா அதிபர் திலிப் சாங்வியின் சொத்து மதிப்பு 15,630 கோடி டாலராகும். அஸிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 1,490 கோடி டாலராகும். டாடா சன்ஸ் பங்குதாரர் பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரியின் சொத்து மதிப்பு 1,270 கோடி டாலராகும்.
ஐந்து தொழிலதிபர்களும் சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளனர். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் காப்பு, சமுதாய மேம்பாட்டு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment