Tuesday 19 August 2014

இந்தியப் பெருங்கடலின் கீழ் ஒரு பண்டைய கண்டம்

இந்தியப் பெருங்கடலின் அடியில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரொடீனியா கண்டம் புதிய உலகம் தோன்றி தற்போதைய வடிவம் எடுக்கும் முன்னர் இருந்த பெரும் நிலத் துண்டு காலப்போக்கில் சிதறி கடலுக்கடியில் சென்றுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலத்துண்டுக்கு அவர்கள் மொரீசியா (Mauritia) எனப் பெயரிட்டுள்ளனர்.
இது குறித்த ஆய்வு முடிவுகள் நேச்சர் ஜியோசயன்சு இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 75 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியின் நிலப்பகுதி ரொடீனியா எனப்படும் ஒரு பெரும் கண்டமாக உருவெடுத்திருந்தது. தற்போது அது பல துண்டுகளாகப் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் கடல்பரப்பினால் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கருக்கு அருகிலேயே அமைந்திருந்தது. தற்போது சுமார் 5600 கி.மீ. விலகி உள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரும் நிலத்துண்டு - குறுங்கண்டம் - ஒன்று இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மொரீசியஸ் நாட்டின் கடற்கரைகளில் கிடைக்கக்கூடிய மண் மாதிரிகளை ஆராய்ந்த அறிவியலாளர் குழுவே மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளது.
90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த எரிமலை வெடிப்புக்கு முன்னர் இருந்த சிர்க்கான் எனப்படும் கனிமம் அந்த கடற்கரை மண்ணில் அறியப்பட்டுள்ளது. அதன் காலம் மேலும் பழைமையானது எனக் கூறப்படுகிறது. நோர்வேயின் ஒசுலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ட்ரொண்ட் தோர்சுவிக் என்பவர் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மொரீசியாவின் சிதறிய துண்டுகள் மொரீசியசின் கீழ் 10 கிமீ ஆழத்தில் இருப்பதாகத் தாம் நம்புவதாக பேராசிரியர் தோர்சுவிக் தெரிவித்துள்ளார். எட்டரைக்கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மடகாஸ்க்கரில் இருந்து இந்தியா பிரிந்த போது குறுங்கண்டம் துண்டுகளாகச் சிதறி கடலுக்கடியில் சென்றிருக்கலாம் என தோர்சுவிக் தெரிவித்தார். தொலைந்த இந்தக் கண்டத்தின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்கு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment