ஏதோ ஆப்பிரிக்க நாட்டில் பரவும் நோய் என்று அலட்சியமாக நாம் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் கட்டுரை.
எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக்காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?”
இவை இரண்டுமே தவறான கருத்துகள்.
முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற சில தொற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்து இல்லை. அவை, மிக வேகமாகப் பரவக் கூடியவை. இந்தக் கொடூர நோய்களில் ஒன்றான கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல், சமீபத்தில் அகமதாபாதின் அருகே தோன்றியது என்றால், நம்மில் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
அகமதாபாத் அதிர்ச்சி!
டிசம்பர் 31, 2010 அன்று, அகமதாபாதின் ஷேல்பி மருத்துவமனையில் ஒரு பெண் தீவிரக் காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்டாள். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் தலைவலியும் மூச்சுத் திணறலுமாக இருந்த அந்தப் பெண், அதற்கு முன் மற்றொரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தவள். ஒரு சிகிச்சையும் பயனளிக்காமல் இறந்துபோனாள். 7 நாட்கள் கழித்து, ஷேல்பி மருத்துவமனையின் ஒரு செவிலி, அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிரக் காய்ச்சல், தலைவலி, வாந்தி என அறிகுறிகள் பதிவாயின. இறந்துபோன பெண்ணுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிப்பு செய்துவந்ததால், மருத்துவர்களுக்குச் சந்தேகம் தோன்ற, அவரது ரத்த மாதிரியை, புணேவில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு (என்.ஐ.வி.) அனுப்பி வைத்தனர்.
இந்தியாவில் வைரஸ் குறித்த ஆய்வுகளில் என்.ஐ.வி. முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் அதற்கு உயிரிய பாதுகாப்பு நிலை 4 என்ற அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது. உலகிலேயே மிகக் குறைவான ஆய்வகங்களே இந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அவற்றில் , மிக அபாயகரமான தொற்றுநோய்க் கிருமிகள் பராமரிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரியம்மை, எபோலா, சி.சி.ஹெச்.எஃப்., லிஸ்ஸா போன்ற தொற்றுநோய்களை உருவாக்கும் கொடிய நுண்ணுயிரிகள் இங்கு பாது காப்பாக வைக்கப்படுகின்றன. அத்துடன், எங் காவது இந்த நோய்கள் தோன்றினால், அவற்றை மரபணுரீதியாகக் கண்டறியும் ஆர்.டி. பி.சி.ஆர். போன்ற நவீனக் கருவிகள் இந்த ஆய்வகங்களில் இருக்கின்றன. ஆய்வக அறிக்கையின்படி, நாட்டின் பிற ஆய்வகங்களும், மருத்துவ, சுகாதார நிலையங்களும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
தொடர் மரணங்கள்
என்.ஐ.வி., அந்தச் செவிலியின் ரத்த மாதிரியின் சி.சி.ஹெச்.எஃப். வைரஸ் இருப்பதை மரபணு ஆய்வில் கண்டறிந்தது. ஷேல்பி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். உடலின் ஒவ்வொரு துவாரத்திலும் ரத்தம் கசிய, அவரும் எந்த சிகிச்சையும் பயனளிக்காது ஐந்தாம் நாளில் இறந்துபோனார். முதலாவதாக இறந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணித்த இளம் மருத்துவர் ஒருவர், மற்றொரு மருத்துவமனையில், அவள் இறந்த 7 நாட்களில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் அதே அறிகுறிகள். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அவரும் மிகுந்த வலியுடன், ரத்தக்கசிவில், உள்உறுப்புகள் சிதைந்த நிலையில் மரணமடைந்தார். தொற்றுநோய் சந்தேகம் வராததாலும், தகவல் பரிமாறப்படாததாலும் அவரது ரத்த மாதிரிகள் ஆராயப்படவில்லை. இதே நேரத்தில் மற்றொரு ஆண், காய்ச்சல், உடல் வலி, பேதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோய் அறிகுறிகள், ரத்தக்கசிவு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கையான மருத்துவர்கள், அவரது வீட்டு நிலையை ஆராய்ந்தனர். அவரது மனைவி 9 நாட் களுக்கு முன்புதான் பெயர் அறியாத ரத்தப்போக்குக் காய்ச்சலால் மரணமடைந்திருந்தார். அந்தப் பெண் ணுக்குப் பணிவிடை செய்த செவிலி ஒருவரும், மற்றொரு மருத்துவமனையில் ரத்தப்போக்குக் காய்ச்சலில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரையும் உடனடியாகத் தனி அறையில் வைத்துத் தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். அவரது ரத்த மாதிரியை என்.ஐ.வி. பரிசோதித்து சி.சி.ஹெச்.வி இருப்பதாக உறுதிப்படுத்தியது. அவருக்கு ரிபாவிரின் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, பல நாட்களுக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறினார். அந்தச் செவிலியோ சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக இறந்துபோனார்.
கால்நடை உண்ணிகள்
குஜராத் அரசுக்கு இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தொற்றுநோய் மையம் முடுக்கிவிடப்பட்டது. சி.சி.ஹெச்.எஃப். நோய், பொதுவாக உண்ணிகள் மூலம் பரவுகிறது. கால்நடை உண்ணிகள் இந்த வைரஸின் தாங்கிகள். அந்த உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இவை மனிதர்களுக்குப் பரவுகின்றன.
முதலில் இறந்துபோன பெண்ணின் வரலாற்றை ஆராய்ந்த அரசு அதிகாரிகள், அவள் சானந்த் என்ற இடத்தினருகே ஒரு கிராமத்திலிருந்து வந்தவள் எனவும், ஆடு மாடு மேய்ப்பில் ஈடுபட்டிருந்தவள் எனவும் அறிந்தனர். அங்கு உண்ணிகள் பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், மாநில அளவிலும், தேச அளவிலும் எச்சரிக்கை விடுக் கப்படவில்லை. அதற்குப் பின் வேறு நிகழ்வுகள் நடந்த தாகத் தெரியவில்லை.
ஒரு வருடம் கழித்து, 2012 மே மாதம், மற்றொரு மருத்துவர், அகமதாபாதின் வாடிலால் மருத்துவ மனையில், இதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார். மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, பத்து நாட்களுக்கு முன், அகமதாபாதை அடுத்த பாவ்லா கிராமத்திலிருந்து அதீதக் காய்ச்சல், ரத்தக்கசிவுடன் வந்த ஒரு பெண்ணுக்கு அவர் மருத்துவம் செய்திருக்கிறார் என்பதும், அவள் மூச்சுத் திணறியபோது, வாயில் குழாய் இட்டபோது ரத்தம் பீய்ச்சியடித்து அவரது கண்களில் தெறித்தது எனவும் அறிந்தனர். கண்களின் வழியே அந்த வைரஸ் அவருக்குள் புகுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணும் மரணமடைந்திருந்தாள்.
குஜராத் தொற்றுநோய்ப் பிரிவு மையத்தினரும், மாநில சுகாதார அதிகாரிகளும் பாவ்லா கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன், அங்கு தொழுவத்தில் இருந்த கால்நடைகளின் ரத்த மாதிரிகளையும் உண்ணிகளையும் சேகரித்து என்.ஐ.வி-க்கு அனுப்பிவைத்தனர். அவற்றை ஆராய்ந்த என்.ஐ.வி. ஒரு கன்றின் ரத்தத்திலும், சில உண்ணிகளிலும் சி.சி.ஹெச்.எஃப். நுண்ணுயிரி இருப்பதாகக் கண்டறிந்தது.
எங்கிருந்து?
எங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கக் கூடும்? 90-களில் பாகிஸ்தானில் சி.சி.ஹெச்.எஃப். பரவியது. அங்கிருந்து உண்ணிகள் காற்றிலோ, கால்நடைகள் மூலமாகவோ எல்லைப் பகுதிகள் வழியாக வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார்கள். 1940-களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரிலும் தென்னக மாநிலங்களிலும் சி.சி.ஹெச்.எஃப். இருந்ததாக ஆவணப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. சி.சி.ஹெச்.எஃப். எப்படி இந் நாட்டில் வந்தது என்பது புதிராகவே உள்ளது, அந்தக் காய்ச்சல்போலவே.
சி.சி.ஹெச்.எஃப். நோய்ப் பரவலைத் தடுக்க, குஜராத் மாநிலம் மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்ப நிலையிலானவை. பெரிய அளவில் அது பரவியிருந்தால், அந்த நடவடிக்கைகள் போதாது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்களின் தொற்று நோய்ப் பிரிவுகள் இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்ந்திருக்கின்றன என்பது தெரியவில்லை. அப்படி உணர்ந்த மாநிலங்களில், மிக வேகமாகப் பரவும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முன் தயாரிப்புடன் இருக்கின்றன என்பது தெரியவில்லை (கர்நாடகம் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உள்கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முன்னணியில் இருக்கிறது). ஒருங்கிணைந்த தகவல்தொடர்பையும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளையும், பேரிடர் தடுப்புக் காப்பு முறைகளையும் மாநில அரசுகள் முக்கியமாகக் கருதிச் செயல்படுத்தும்வரை… நாம் ஒரு தீப்பற்றிய வெடிகுண்டின் மேல்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்!
- சுதாகர் கஸ்தூரி, அறிவியல் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர், ‘6174' என்னும் அறிவியல் புனைகதை நாவலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kasturi.sudhakar@gmail.com