Monday 11 August 2014

நெல்லையில் வன உயிரினச் சரணாலயம், விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயம்: முதல்வர் அறிவிப்பு

நடப்பு ஆண்டில் உயிர்ப்பன்மை பாதுகாப்பு, அடிப்படை இயற்கை வளங்களை பெருக்க தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல் மற்றும் ஆளுமைத் திறன் மேம்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டப்பணிகள் 110 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
குறிப்பாக, நெல்லையில் வன உயிரினச் சரணாயலயமும், விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயமும் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:
பசுமைப் பரப்பு அதிகரிக்கப்படும்:
"வளமான சூழல் அமைப்பினை உறுதி செய்யும் வகையில், உயிர்ப்பன்மை பாதுகாப்பு, வனப் பணியாளர்கள் திறம்பட வனங்களைப் பாதுகாத்து மேம்படுத்திட உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பினை அதிகரித்தல், காடு வளர்ப்பு போன்ற பணிகள் 35 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு ஆண்டு மேற்கொள்ளப்படும்.
தோட்டக் காவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் படி உயர்வு:
வனத் துறை களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு முதல் அவர்களுக்கு மாதந்தோறும் 400 ரூபாய் இடர்படியினை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. இயற்கை வளத்தின் சின்னமாக விளங்கும் வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் பணியில் முறையான பீட் பணியாளர்களுக்கு உறுதுணையாக மிகைப் பணியிடத் தோட்டக் காவலர்களும், மிகைப் பணியிட வேட்டைத்தடுப்புக் காவலர்களும் பணிபுரிந்து வருவதால், வனத் துறையின் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடர்படியின் பயன் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 76 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும். இதன் மூலம் மிகைப் பணியிடத்தில் பணிபுரிந்து வரும் 1,439 தோட்டக் காவலர்களும், 137 வேட்டைத் தடுப்புக் காவலர்களும் பயனடைவார்கள்.
நெல்லையில் வன உயிரினச் சரணாலயம்:
உயிரியல் முக்கியத்துவம் நிறைந்த பகுதிகளை வன உயிரின சரணாலயமாக ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 15 ஆவது வன உயிரினச் சரணாலயமாக ‘நெல்லை வன உயிரினச் சரணாலயம்' ஏற்படுத்தப்படும்.
விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயம்
இடம் பெயர்ந்து வரும் பல்வேறு பறவையினங்களின் குளிர்கால புகலிடமாக மட்டுமின்றி, உயிர்ப் பன்மை செறிந்ததாகவும் விளங்கும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒசூடு ஏரிப் பகுதி தமிழ்நாட்டின் 15 ஆவது பறவைகள் சரணாலயமாக ஆக்கப்படும்.
பயிற்சி மையங்கள் தர உயர்வு
வனத் துறையின் களப் பணியாளர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, மனித-வன உயிரின மோதல்களைத் தடுத்தல், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் திறம்பட பயிற்சி அளிக்கும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அட்டகட்டி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு பகுதிகளிலுள்ள அடிப்படைப் பயிற்சி மையங்கள் 2 கோடி ரூபாய் செலவில் ‘மேம்படுத்தப்பட்ட வன உயிரின மேலாண்மைப் பயிற்சி மையங்களாக’ தரம் உயர்த்தப்படும். இப்பயிற்சி மையங்களை நிர்வகிக்க இரண்டு உதவி வனப் பாதுகாவலர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
650 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
வனத் துறை மற்றும் அதைச் சார்ந்த மூன்று வனக் கழகங்களில் வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் மற்றும் வனக் காவலர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள சுமார் 650 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நடப்பாண்டில் நிரப்பப்படும். முதன் முறையாக வனத் துறையில் இப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் மகளிரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அரசின் மேற்காணும் திட்டங்கள் விலங்குகள் பாதுகாப்பிற்கும்; வருங்கால சந்ததியினரின் வளமான வாழ்விற்கும் வழி வகுக்கும்" என முதல்வர் அறிவித்தார்.

No comments:

Post a Comment