Thursday 21 August 2014

அர்ஜுனா விருதில் பாரபட்சமா?: போராடத் தயாராகும் மனோஜ் குமார்

விளையாட்டுத் துறையில் சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த விருது வழங்குவதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது இப்போது குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் விஷயத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம், 2007, 2013 ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை மற்றும் செக்.குடியரசில் நடைபெற்ற கிராண்ட்ப்ரீ ஆகியவற்றில் வெண்கலப் பதக்கங்களை வென்றதோடு தேசிய அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் மனோஜ் குமார். ஆனால் அவருக்கு அர்ஜுனா விருதுவழங்காமல் அதே 2010 காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மற்றொரு குத்துச்
சண்டை வீரர் ஜெய் பகவானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதன் மூலம் இந்த விருது விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.நீதிமன்ற படியேறும் மனோஜ்தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள மனோஜ்குமார், நியாயம் கேட்டு நீதிமன்ற படியேற ஆயத்தமாகி வருகிறார். முதல் நடவடிக்கையாக தேர்வுக்குழு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்கியது என்பது தொடர்பான விவரத்தை தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறவிருப்பதாக மனோஜ் குமாரின் சகோதரரும், பயிற்சியாளருமான ராஜேஷ் குமார் கூறியிருக்கிறார்.
தேவராஜன் சாடல்
2009, 2012 ஆகிய ஆண்டுகளில் அர்ஜுனா விருது கமிட்டியில் இடம்பெற்றிருந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான தமிழகத்தின் தேவராஜன் வெங்கடேசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
வாலிபால், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் இந்தியா பெரிய அளவில் சாதிக்காதபோதும் அந்த விளையாட்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு இப்போது அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை விருது பெறவுள்ள சிலர், கடந்த சில ஆண்டுகளாக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. 2012 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்திய பயிற்சி முகாமில் ஜெய்பகவான் இல்லை. எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவரை அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.
சர்ச்சைக்கு காரணம் என்ன?
அர்ஜுனா விருது பெறுவதற்கு குறைந்தபட்சம் தேசிய அளவிலான போட்டியிலாவது பதக்கம் வென்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது விதிமுறைகள் எல்லாம் வளைக்கப்பட்டுவிட்டன. விருது விவகாரத்தில் சர்ச்சைகள்
ஏற்படுவதற்கு பாரபட்சம் ஒரு காரணம் என்றால், தகுதியற்றவர்கள் விருது கமிட்டிக்கு தலைவராக நியமிக்கப்படுவது மற்றொரு காரணம்.
நான் 2-வது முறையாக தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியும் இருந்தார். அவருக்கு ஒலிம்பிக்கிற்கும், பாரா ஒலிம்பிக்கிற்குமான வித்தியாசமே தெரியவில்லை! இந்த முறை விருதுக் கமிட்டியின் தலைவராக கபில்தேவ் இருக்கிறார்.
வருத்தமளிக்கிறது
மனோஜ் குமாருக்கும் மற்றொரு குத்துச்சண்டை வீரரான பரம்ஜீத் சமோட்டாவுக்கும் விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது. சமோட்டா, கடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். 7 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அதிக பதக்கங்களை வென்றிருக்கும் சமோட்டாவையும் மனோஜ் குமாரையும் நிராகரித்துவிட்டு ஜெய்பகவானுக்கு விருது வழங்குவதை எப்படி ஏற்க முடியும்?
சாய் தலையீடு
இந்திய விளையாட்டு ஆணையத்தினர் (SAI) தாங்கள் விரும்புகிறவர்களுக்கே விருது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். விருது தேர்வுக்குழு கூட்டத்துக்கு முன்னதாகவே அவர்கள் ஒரு பட்டியலை தயார் செய்துவிடுகிறார்கள். விருது தேர்வுக்குழு கூட்டம் மீன் சந்தையை போன்றுதான் நடக்கிறது. விருதுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விருதைப் பெறுவதற்காக கூச்சல் போடுகிறார்கள். ஒருவருக்கு சாதகமாக 4 பேர் குரல் கொடுத்துவிட்டாலே அவருக்கு விருது உறுதியாகிவிடுகிறது. இந்த முறை ஜெய்பகவானுக்கு விருது வழங்கப்படுமானால் அது நிச்சயம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றார்.
பொது நல வழக்கு
விருதுகள் வழங்கப்படுவதில் தொடர்ந்து பாரபட்சம் பார்க்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து இப்போது மனோஜ் குமார் சாட்டையை எடுத்திருக்கிறார். அவர் மூலம் பல உண்மைகள் வெளிவரலாம். மனோஜ் குமார் நீதிமன்ற படியேறும்போது இந்த வழக்கை அவருக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வீரர்களின் நலனையும் கருத்தில் கொண்டு பொது நல வழக்காக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
அப்படி விசாரிக்கப்பட்டால் இதுவரை தகுதியற்ற எத்தனைபேர் விருது பெற்றிருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகும். அப்போது தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருதை பறிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் தகுதியானவர்களுக்கு விருது வழங்கப்படுவதையும், முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதையும் உறுதி செய்ய முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம்!

No comments:

Post a Comment