Sunday 17 August 2014

வாக்கு ரகசியத்தைக் காக்க நவீன மின்னணு இயந்திரங்கள்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குகளின் ரகசியத்தைக் காக்க நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்வதற்கு அனுமதி கோரி, சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கருத்துரு அனுப்பியுள்ளது.
தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரத் தின் கீழ் அதிகபட்சம் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்ற அடிப்படையில் செயல்படுகின்றன.
இதனால், ஒரே பொத்தானை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட நான்கு வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளின் விவரம் தெரிய வருகிறது. இதனால், எந்த வாக்குச்சாவடியில் எந்த வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பதிவாகின என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த முறையில் மாற்றம் செய்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறிப்பிட்ட வேட்பாளருக்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தனித்தனியாக குறிப்பிடாமல், குறிப்பிட்ட தொகுதி முழுவதிலும் யாருக்கு எவ்வளவு வாக்குகள் என்பதை அறிவிக்கும் ’டோட்டலைசர்’ எனும் ஒற்றைக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம், குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியிருப்பது பற்றிய விவரம் வெளிவராது.
ஆகவே, நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இருப்பினும் இந்த திட்டத்தை சட்ட அமைச்சகம் இதுவரை பரிசீலிக்கவில்லை.
கடந்த வாரம் மாநிலங்களவையில் வாக்குப்பதிவு தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “வாக்கின் ரகசியம் காப்பது, இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் நவீன இயந்திரங்களை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, வாக்குகளின் ரகசியம் காக்கப்படும் என்பது நிச்சயம் உறுதிப்படுத்தப்படும்” என தெரிவித்திருந்தார்.
புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இதுதவிர, புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை வாங்குவதற்கும் தேர்தல் ஆணையம் கருத்துரு அனுப்பியுள்ளது.
புதிதாக 9 லட்சத்து 30 ஆயிரத்து 430 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 13 லட்சத்து 95 ஆயிரத்து 647 வாக்குப்பதிவு இயந்திரங்களை 2018-19ம் நிதியாண்டுக்குள் வாங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கொள் முதல் செய்வதற்கு, சட்ட அமைச்சகம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகாலம். அதற்குப் பின், பழைய இயந்திரங்கள் திரும்பப்பெறப்பட்டு புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
இந்நடைமுறையின்படி, 2000-2001ம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 631 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 2015-16ம் நிதியாண்டில் காலாவதியாகிவிடும். அவற்றுக்குப் பதில் புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
அதைப்போலவே, 2004-05ம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 681 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2019-20ம் ஆண்டில் மாற்றப்பட்டு, புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

No comments:

Post a Comment