Monday 25 August 2014

பிரபஞ்சம் வெடித்த அந்த நொடியில்…

இந்த பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் பல கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். அவற்றில் பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கையைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பெரும் வெடிப்பு
பிரபஞ்சம் ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தது. மிக வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்தது.
பிறகு அதில் ஒரு சமச்சீரின்மை ஏற்பட்டது. அதன் காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்தது. அதன் போக்கில் பல பொருட்களை அது தோற்றுவித்தது. இன்னமும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
காலத்தின் பிறப்பு
வெடித்த கணமே காலமும் விண்வெளியும் தோன்றியது. பிரபஞ்சமும் காலமும் இணைந்து பிறந்த முதல் விநாடியை பிளாங்க் நேரம் என்று சொல்லப் படுகின்ற முறையால் அளக்கிறார்கள்.
ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் நீளத்தைக் கடக்க ஆகும் நேரம் . (இந்த நீளத்தை தொலைவு அல்லது தூரம் என அனுமானித்துக்கொள்ளுங்கள்.) அதை 1.616252(81)×1035 மீட்டர் என மதிப்பிட்டுள்ளார்கள்.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் விநாடிக்கு 29 கோடியே 97 லட்சத்து 92ஆயிரத்து 458 மீட்டர்களாகும் (சுமாராக வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்).
அந்த நொடியில்…
பிரபஞ்சம் வெடித்தபோது அதிவேகமான ஒளி மிக நுண்ணிய தூரத்தைக் கடக்கிற மிக நுண்ணிய காலத்தில் என்னவெல்லாம் நடந்து இருக்கலாம் என நமது விஞ்ஞானிகள் விவாதித்துள்ளார்கள்.
ஒரு நானோவினாடி என்றால் ஒரு வினாடியை 100 கோடியாகப் பிரித்து அதில் ஒரு பங்கு என அர்த்தம். அதற்கும் பல மடங்குகள் குறைவான ஒரு நுண்ணிய காலத்தை 10-43 விநாடி நேரம் என அறிவித்துள்ளார்கள்.
அந்தக் காலகட்டம் வரை பிரபஞ்சத்தின் தோற்றத்தில் என்ன நடந்திருக்கும் என விஞ்ஞானிகள் விவாதித்துள்ளனர். (அதேபோல நுண்ணியமான வெப்ப அளவுகளும் கெல்வின் என்ற அளவால் அளக்கப்படுகின்றன.)
10-43 விநாடி நேரத்தில்
வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 10 -32 கெல்வினாக இருந்தது.
10 -12 விநாடி நேரத்தில்
பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிடத்தின் ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது. பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 10 -12 கெல்வின்.
10 -11 விநாடி நேரத்தில்
பிரபஞ்சம் கதிர் வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்தக் கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும்போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளைவிட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
10 -10 விநாடி நேரத்தில்
பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்பட்ட வெப்பக் குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக் குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்குக் குறைந்தது. போஸான்கள் உருவாயின. அவை வலுக் குறைந்த அணுக்கரு விசையைக் கடத்துபவையாக மாறின.
10 -4 விநாடி நேரத்தில்
பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டான், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 30000 கெல்வின் (29,727 செல்சியஸ்).
1 விநாடி நேரத்தில்
புரோட்டான்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரினோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டான் என்ற விகிதத்தில் நிலைபெற்றன. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.
100 விநாடி நேரத்தில்
இந்தத் தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டான்களும், நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் உருவாயின. புரோட்டான்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும். அதிக தொலைவில் அவற்றால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும்.
இது அதிக வெப்ப நிலையில் உள்ளபோது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாகச் செல்லும்போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
5 லட்சம் வருடங்களில்
இந்தக் காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாயின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 3000 கெல்வின்.
நூறு கோடி வருடங்களில்
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
200 கோடிகள் முதல் 1300 கோடி வருடங்களில்
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாயின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 3000 கெல்வினுக்கும் குறைவு. இதன் பின் கோள்கள் உருவாயின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாயின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாயின.
அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாயின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாகக் காரணமாயின. பின், பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்சப் பெருவெடியில் தோன்றிய அந்தத் தனிமங்களே.

No comments:

Post a Comment