Monday 11 August 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வில் கட்டணம் இல்லை

ரயில் பயணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் சலுகைகள், அரசு போட்டித் தேர்வு சலுகைகள், கதர் கிராம ஆணையம் வழங்கும் மானியம் குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.
ரயிலில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள் உண்டா?
மாற்றுத் திறனாளிகள் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் நாடு முழுவதும் ரயிலில் பயணிக்கலாம். அதுபோல் மாற்றுத் திறனாளிகள் தங்களின் உதவிக்காக உடன் அழைத்து வரும் நபர்களையும், நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகையுடன் அழைத்துச் செல்லலாம். இந்தக் கட்டணச் சலுகையைப் பெற புகைப்படத்துடன் கூடிய ஆங்கில விண்ணப்ப படிவத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவரிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு, ஒவ்வொரு முறை ரயில் பயணத்தின்போதும் விண்ணப்ப படிவ நகலை கொடுத்து சலுகையுடன் கூடிய பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை உண்டா?
போட்டித் தேர்வுக்கான கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. வயதிலும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பத்துடன் மருத்துவச் சான்றிழையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தில் மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்க உதவி வழங்கப்படுகிறதா?
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் மூலம் கிராமப்புறங்களில் மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 30 சதவீதம் மானியம் ஆகும். இதற்கு 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இதுகுறித்த முழு விவரம் அறிய மாநில இயக்குநர், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம், சென்னை-86 என்ற முகவரியில் அணுகலாம்.
அவர்களுக்கு என்னென்ன உதவி உபகரணம் மாற்றுத் திறனாளிகள் துறை மூலம் வழங்கப்படுகிறது?
செயல் இழந்த கால்களுக்கு உறுதுணையான உபகரணம், துண்டிக்கப்பட்ட உறுப்புகளுக்கு (கை, கால்) செயற்கை உபகரணம் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி முட்டியின் கீழ், கால் செயல் இழந்தவர்களுக்கு பிலோ நீ காலிபர் (Below knee caliper) போன்ற முடநீக்கு சாதனம், செயற்கை உபகரணமாக நவீன செயற்கை கால் போன்ற உபகரணம் மற்றும் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர் போன்றவை வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment