தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைதளம் (http://tndipr.gov.in) கடந்த 2 மாதங்களாக முடங்கியுள்ளது.இந்த முடக்கத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? சர்வரில் பிரச்சினையா? அல்லது ஹேக்கர்களின் அத்து,மீறலா? என்பன உள்ளிட்ட சந்தேகக் கேள்விகள் எழுகின்றன.
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், அரசின் முக்கிய அறிவிப்புகள் இந்த வலைதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள் எப்போதும் தங்களுக்கு தேவையான அரசு திட்டங்கள், சலுகைகள், அறிவிப்புகள், ஆணைகள், உத்தரவுகள் என்ன என்பதை இந்தத் தளத்தில் எளிதாக தெரிந்துகொள்ள முடிந்தது. மேலும், அரசு விழாக்கள் புகைப்படங்களும் இந்தத் தளத்தில் இடம் பெற்றுவந்தன.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அன்று முதல் அரசு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைதளம் செயல்படாததால், எவ்வித தகவல்களும் வலைதளம் மூலமாக பகிரப்படவில்லை.
அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
ஆனால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போதுகூட அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைதளம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பது சரியா? என்ற கேள்வி எழுகிறது
.