Sunday 26 January 2014

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.35%- ஐக்கிய நாடுகள் சபை தகவல்

நடப்பாண்டில் (2014) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.35 சதவீதமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் 2014-ல் வளர்ச்சி நிலை பற்றி ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் பொருளாதார வளர்ச்சி மிக மெதுவாக இருக்கும் என்றும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய பொருளாதாரத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
2013-ல் உள்ள அளவை விட குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நுகர்வு குறைவாகவும் முதலீடுகள் குறைந்தும் காணப்படும் என்று அறிக்கை கூறுகிறது.
2013-ம் ஆண்டில் வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும். 2012-ம் ஆண்டில் இது 5.1 சதவீதமாக இருந்தது.
வெளிப்புற காரணிகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயமாக உள்ளது என்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவால் முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது எதிர்பார்த்ததைவிட மெதுவாகவே நடைபெறும் என்று கூறப்பட்டு ள்ளது.
2014-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5.3 சதவீத வளர்ச்சியையும், 2015-ம் ஆண்டில் 5.7 சதவீத வளர்ச்சியையும் எட்டும் என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சியானது நாட்டின் பருவமழை சீராக பெய்வது, முதலீடுகள் அதிகரிப்பது, ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியதாக அமையும்.
சர்வதேச அளவில் தற்போது நிலவி வரும் தேக்க நிலை மாறி அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சியை எட்டும் என்றும் அதன் பிறகு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதா வளர்ச்சி 2014-ல் 3 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் இது 2015-ல் 3.3 சதவீத அளவுக்கு உயரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013-ல் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவீதமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலவும் தேக்க நிலை மாறும். அமெரிக்க பொருளாதாரம் ஸ்திரமடைவதோடு பெரிய பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த தேக்க சூழல் மாறி லேசான முன்னேற்றம் காணப்படும். இதனால் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி உயர வழிபிறக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு 2013-14ம் நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை 4.8 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. வளர்ச்சி விகிதம் குறைவாகவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் காணப்படும் ஸ்திரமற்ற நிலை மற்றும் மானிய பளு ஆகியன பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014-ம் ஆண்டு நுகர்பொருள் விலை அடிப்படையிலான பணவீக்கம் 9 சதவீதமாகக் குறையும் என்றும் 2015-ல் இது 8.1 சதவீத அளவுக்கு குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிக்கை சுட்டுகிறது.
2012-ம் ஆண்டில் பணவீக்கம் 9.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து வதில் தொடர்ந்து ரிசர்வ் வங்கி முன்னுரிமை காட்டுவதாகக் குறிப்பிட்ட அறிக்கை, முதலீடு களை ஈர்க்கவும், வளர்ச்சிக்கு வழியேற்படுத்தவும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment