Tuesday 30 September 2014

மங்கள்யான் பெருமை தந்த தமிழ் விஞ்ஞானிகள்

செவ்வாய் கோளை மங்கள்யான் வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், அந்தத் திட்டத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் என்பதும், அவர்கள் தமிழ் வழியில் படித்து உலகம் வியக்கும் இந்த முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது.
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் வெற்றி கரமாகத் நிறுத்தப்பட்டுவிட்டது. புகைப்படங்களை எடுத்து செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்யும் பணியையும் மங்கள்யான் தொடங்கிவிட்டது. முதல் முயற்சியிலேயே இந்த விண்கலம் வெற்றியை அடைந்திருப்பது, சாதாரண விஷயமல்ல.
செவ்வாய்க்கு விண்கலத்தைச் செலுத்தி இருக்கும் நான்காவது நாடு இந்தியா; அதுவும் ஒரு வளரும் நாடு. உலக நாடுகளுக்கெல்லாம் இது ஆச்சரியமூட்டும் தலைப்புச் செய்தி. அதேநேரம், நமக்கு இது வெறும் செய்தி மட்டுமல்ல. நாட்டை பெருமிதத்தில் ஆழ்த்தும் உணர்வு.
இந்த வேளையில் இந்த வெற்றிக்குப் பின்னாலுள்ள விஞ்ஞானிகள் நினைவுகூரத்தக்கவர்கள். அவர்களில் மயில்சாமி அண்ணாதுரை, சுப்பையா அருணன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல சிறப்பு. இருவரும் தங்கள் பள்ளிக் கல்வியை தாய்மொழியில் பயின்றவர்கள். தாய்மொழியான தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இவர்களின் வெற்றியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியம் ஆகிறது.
மயில்சாமி அண்ணாதுரை
2008 விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் - 1 விண்கலத் திட்டத்தின் இயக்குநர் இவர்தான். இந்த வெற்றியின் மூலம் மயில்சாமி அண்ணாதுரைக்கு இந்திய அளவிலான கவனம் கிடைத்தது. இவர், கோவை மாவட்டத்திலுள்ள கோதாவடி கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஓர் ஆசிரியர். தனது பள்ளிக் கல்வியைத் தாய்மொழியான தமிழிலேயே படித்தார்.
பொறியியல் இளநிலைப் பட்டப் படிப்பை அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும், பொறியியல் முதுநிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியிலும் படித்தார். பொறியியல் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவில் 1982-ல்அடிப்படை ஆய்வாளராகப் பணிக்குச் சேர்ந்தார். தனது தனிப்பட்ட திறமையால் படிப்படியாக உயர்ந்தார். அவரது அயராத உழைப்பால் சந்திரயான் -1 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்து, இந்தியாவின் முதல் நிலவு விண்கலனை வெற்றிகரமாகச் செலுத்தி நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்தார். அவரது வெற்றியின் தொடர்ச்சிதான் இந்த மங்கள்யான்.
மயில்சாமி அண்ணாதுரை தமிழ் மொழிப் புலமையும் கொண்டவர். பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரை எழுதிவருகிறார். வளரும் அறிவியல் என்ற அறிவியல் இதழின் கெளரவ ஆசிரியராக இருக்கிறார். தமிழ் மொழிக்கு அறிவியல் கலைச் செல்வங்களைக் கொண்டுவந்தால்தான் தமிழ் மொழி பிழைக்கும் என்றார் பாரதியார். இவரைப் போன்ற சிலரால் அது சாத்தியமாகிவருகிறது.
அருணன் சுப்பையா
அருணன் சுப்பையா, நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தில் பிறந்தவர். இவர் மங்கள்யான் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு அந்த வெற்றிக் கூட்டணியில் தன் பெயரையும் இணைத்துக்கொண்டவர். இவரது தந்தை சுப்பையா, தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். அருணன், தன் பள்ளிக் கல்வியை திருக்குறுங்குடி என்னும் சிறிய கிராமத்தில் தமிழ் வழியில்தான் பயின்றுள்ளார்.
கோவையில் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984-ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து பணியைத் தொடங்கினார். இன்று மங்கள்யான் திட்ட இயக்குநர் பதவிவரை தொடர்ச்சியாக முன்னேறி இருக்கிறார்.
இவர்கள் இருவரையும் தவிர சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 14 பேர், இந்த வெற்றிக் கூட்டணியின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். எண்ணற்ற பலரின் உழைப்பாலும், இவர்களது தலைமைத்துவத்தாலும் நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவருகிறது.

No comments:

Post a Comment