மனிதர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளையும், நெகிழ்வான தருணங்களையும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்னவர் சார்லி சாப்ளின்.
பிரிட்டனைச் சேர்ந்த அவர், தனது கலைவாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் அவ்வப்போது அமெரிக்காவுக்குச் சென்றுவருவார். 1913-ல் அவர் நடித்த ‘மேக்கிங் எ லிவிங்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் புயலாக நுழைந்தார். ‘தி கோல்டு ரஷ்’, ‘மாடர்ன் டைம்ஸ்’, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்று பல படங்களை உருவாக்கி, ஹாலிவுட்டின் சிறந்த கலைஞரானார்.
அவரது படங்கள் ஏழைகளின் பரிதாப வாழ்வைச் சித்தரித்ததுடன், முதலாளி வர்க்கத்தின் பேராசையையும் விமர்சித்தன. எனவே, ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதி அமெரிக்க அரசு அவரை வெறுத்தது. 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தும், அவர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முயலவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், 1952 செப்டம்பர் 18-ல், தனது ‘லைம்லைட்’ படத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு அடுத்த நாள், அவர் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்க அரசு. கப்பலில் இருந்த அவருக்கு இந்தத் தகவல் கிடைத்தது. “நான் அரசியல்வாதி அல்ல; தனிமனிதன். அதேசமயம், நான் அதீத தேசபக்தன் அல்ல. அதீத தேசபக்தி ஹிட்லரிசத்தைத்தான் உருவாக்கும்” என்றார் சாப்ளின்.
அதன் பிறகு, பல ஆண்டுகள் அவர் பிரிட்டனிலேயே தங்கி, திரைப்படங்களை உருவாக்கினார். 1972-ல் அவரை அழைத்து, ஆஸ்கர் விருது வழங்கி, வரலாற்றுத் தவறைச் சரிசெய்துகொண்டது அமெரிக்கா.- சரித்திரன்