Saturday 13 September 2014

ஜீவ நதியின் கோர தாண்டவம்

'காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஜீவ ஆதாரம்' இத்தனை நாட்களாக ஜீலம் நதி இப்படித்தான் அறியப்பட்டது. ஆனால் கடந்த 15 நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் சீறிப் பாய்ந்த ஜீலம் நதி கோரமுகியாக மாறிவிட்டது.
காஷ்மீர் பெருவெள்ளம் மிகப் பெரிய இயற்கை சீற்றம்தான். ஆனால் ஜீலம் நதி சீற்றத்திற்கு இயற்கை மட்டும்தானா காரணம். வல்லுநர்கள் சொல்வது என்ன? நீர் நிலைகள் ஆக்கரமிப்பு, திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு, வெள்ளச் சூழலை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் இல்லாததே ஜீலம் நதி பல ஜீவன்களைப் பறிக்க காரணமாக அமைந்துவிட்டது என கூறுகின்றனர்.
தெற்குக் காஷ்மீரில் உள்ள வெரிநாக் எனும் சிறு பகுதியில் உள்ள இயற்கை ஊற்றே ஜீலம் நதியின் பிறப்பிடம். ஆயிரக் கணக்கான காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் இது. இந்த நதியை, காஷ்மீர் பண்டிட்டுகள் அன்னை நதி என கொண்டாடுகின்றனர். மிகவும் அமைதியான, ஆரவாரமற்ற நதி என்ற பெருமையும் ஜீலத்திற்கு உண்டு.
இந்த நதியில் மீன் பிடி தொழில் மிகவும் பிரபலமானது. அண்மைக்காலமாக சிலர் ஜீலம் நதியில் இருந்து மணல் அள்ளுவதை பெரும் தொழிலாக செய்து வருகின்றனர். இப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜீலம் நதி காஷ்மீரிகளுடன் ஒன்றிணைந்துவிட்டது.
தற்போது காஷ்மீரில் உள்ள மூத்த நபர் கூட இப்படி ஒரு பேரழிவை பார்த்ததில்லை என்றே சொல்கிறார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய பேரழிவு ஏற்பட்டதாக தனது முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்பதாக சொல்கிறார்.
ஆனால் அப்போது இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. ஓய்வு பெற்ற வரலாற்று பேராசிரியர் முர்தசா அகமது கூறுகையில், "ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி செலுத்தியவர்கள் முன்யோசனையோடு வெள்ள வடிகால்களை ஆங்காங்கே அமைத்திருந்தனர். இதனால், நதிகளில் பெரு வெள்ளம் ஏற்படும் போது இழப்புகள் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது நகர்மயமாக்கல் என்ற பெயரில் சரியான திட்டமிடுதல் இல்லாமல் பல கட்டிடங்கள் முளைத்திருக்கின்றன. இவையே, வெள்ளத்தின் சீற்றம் அதிகமாக இருக்கக் காரணம். நீர்நிலைப் பகுதிகளைக் கூட விட்டுவைக்காமல் மக்கள் ஆக்கிரமித்து குடியேறிவிட்டனர். இப்போது வெள்ளம் புகுந்த பிறகு வாழ்வளித்த நதி இன்று வாழ்வை கெடுத்து பீதி அளிக்கிறது என குமுறுகின்றனர். இயற்கை ஆர்வலர்கள் பலர் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரை சமாளிக்க முன்னேற்பாடுகளை வகுக்குமாறு வலியுறுத்தி இருக்கின்றனர். முன்னாள் மத்திய நீர்வளத் துறை அமைச்சர்கூட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். அவருக்கு தெரியும் காஷ்மீர் மக்கள் ஒரு டைம் பாம் மேலே அமர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது. ஆனால், அவரும் செயல்பட தவறி விட்டார்" என்றார்.
முன்பு உத்தரகண்டில் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியான போதும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களும், நிர்வாக அலட்சியமுமே காரணமாக சொல்லப்பட்டது. இப்போது ஜீலம் நதி சீற்றத்தின் தாக்கம் கொடூரமாக அமைந்ததற்கும் அதே காரணம்தான். காரணங்கள் தெளிவாக தெரிகின்றன. காரணமாக இருப்பவர்கள் உணர வேண்டுமே?

No comments:

Post a Comment