Thursday 11 September 2014

கிரானைட், கனிம மணல் கொள்ளை: சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கனிம மணல் கொள்ளை மற்றும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், அவர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கிரானைட் முறைகேட்டை விசாரிக்க, சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்,
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பியது.
அத்துடன், கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
நேர்மையாக விசாரிப்பேன்: சகாயம்
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரி சகாயம், "சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விவரத்தை முழுமையாகப் பெற்றதும், அதன் அடிப்படையில் நேர்மையான முறையில் முழுமையான விசாரணையை மேற்கொள்வேன். என் கடமையைச் சிறப்பாக செய்வேன்" என்றார்.
அதேவேளையில், தான் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
மதுரையில் ஆட்சியராக இருந்தபோது, ரூ.16,000 கோடி கல் குவாரி கொள்ளையை சகாயம் அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment