Wednesday 24 September 2014

மணிப்பூர்: இந்தியாவின் கிழக்கு வாசல்

மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு மாநிலம். மணிப்பூர் என்ற பெயருக்கு முன்பாக 20க்கும் மேற்பட்ட வேறு பல பெயர்களில் அது அழைக்கப்பட்டு வந்துள்ளது. நாகலாந்து, மிஜோரம், அஸ்ஸாம் ஆகிய இந்திய மாநிலங்கள் மணிப்பூரின் வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகளாக உள்ளன.

பக்கத்து நாடான மியான்மர் எனப்படும் பர்மாவுக்கும் இந்தியாவுக்குமான தரைவழிப்பாதை மணிப்பூரின் கிழக்குப் பகுதியின் வழியாகச் செல்கிறது. அதன் வழியாக சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியாபோன்ற கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லலாம். ஆசிய நாடுகளுக்கு இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேறினால் மணிப்பூரின் வழியாக நாம் பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் செல்லலாம்.

கற்காலத்திலும்..

மணிப்பூரில் 35 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். மணிப்பூரில் நீண்டகாலம் மன்னராட்சி இருந்தது. 1891- ல் மணிப்பூர் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசியாவை வென்று, மணிப்பூர் வரை முன்னேறினார்கள் .மணிப்பூரின் தலைநகரான இம்பால் நகரைக் கைப்பற்றுகையில் தோல்வியடைந்தனர்.

இந்தியா 1947- ல் சுதந்திரம் அடைந்தபோது மணிப்பூர் தனியாக இருந்தது.

அரசரைத் தலைவராகக் கொண்ட ஒரு அரசியல் சாசனத்தை மணிப்பூர் உருவாக்கிக்கொண்டது. அதன்பிறகு அக்டோபர் 1949ல் இந்தியாவுடன் இணைந்தது. 1956 முதல் 1972 வரை மத்திய அரசின் நேரடி ஆட்சி நடந்த யூனியன் பிரதேசமாக மணிப்பூர் இருந்தது. 1972 - ல் தனி மாநிலமானது.

மணிப்பூரிகள்

மணிப்பூரில் ஏறத்தாழ 26 லட்சம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூரி எனப்படும் மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இது திபெத்- பர்மியன் மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி. இதற்கு 29 வட்டார வழக்குகள் உள்ளன. அதில் ஆறு வட்டார வழக்குகளில் பாடநூல்களை அரசு வெளியிட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மொழிகளில் ஒன்றாக மணிப்பூரி மொழி சேர்க்கப்பட்டது.

மணிப்பூரிகளில் நாகா பழங்குடிகள் உள்ளிட்டு 41 சதவீதம் பேர் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மணிப்பூரிகளிடையே சனாமகிஷம் எனும் தொன்மையான மதம் உள்ளது. அதில் இந்துமத தாக்கம் ஏற்பட்டுள்ளது. வைணவம் 1700 -களில் அரசு மதமாக இருந்துள்ளது. தற்போது 46 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். 24 சதவீதம் பேர் கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் ஒன்பது சதவீதம் பேர் உள்ளனர்.

மணிப்பூரில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ 80 சதவீதத்தினர்.

இந்தியாவின் மூங்கில் தொட்டி

இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் மணிப்பூருக்கு உள்ளே செல்ல டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.

இந்தச் சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்கும் கூட பொருந்தும். இந்தச் சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயணத் திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும்.

அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாக மட்டுமே இம்பால் நகரில் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

விவசாயமும் வனத்தின் மூலம் வருமானமுமே மாநிலத்தின் முக்கியமானப் பொருளாதாரம். மாநிலத்தில் பெரும் மூங்கில்காடுகள் உள்ளன. இந்தியாவுக்குத் தேவையான மூங்கிலை அள்ளித்தரும் மாநிலமாக மணிப்பூர் உள்ளது.வடகிழக்கு இந்தியாவிலேயே அதிகமான அளவில் கைவினைப்பொருள்கள் உற்பத்தி மணிப்பூரில்தான் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment