Thursday 25 September 2014

ஹோவர்டு ஃப்ளோரே 10

மனித உயிரைக் காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங். ஆனால், அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுசென்றவர் ஹோவர்டு ஃப்ளோரே. அவரது பிறந்த நாள் செப்டம்பர் 24. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தம்பதியின் வாரிசு ஹோவர்டு ஃப்ளோரே. பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது லைசோசைம். எச்சில், கண்ணீரில் அது அதிகம் காணப்படுகிறது. அதைக் குறித்தே முதலில் ஆய்வுகள் செய்தார்.

• பெனிசிலினை மருத்துவப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஃப்ளெமிங், ஹோவர்டு, போரிஸ் செயின் ஆகிய 3 பேரும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில் மனிதர்களிடம் பெனிசிலின் ஏற்படுத்தும் தாக்கங்களை ஹோவர்டு கண்டறிந்தார்.

• பெனிசிலினை முதலில் எலிகள் மீது பரிசோதிக்க பரிந்துரைத்தவர் ஹோவர்டு. 8 எலிகளுக்கு, உயிரைக் கொல்லும் பாக்டீரியா செலுத்தப்பட்டு, பின்பு பெனிசிலின் செலுத்தினார்கள். 4 பிழைத்தன. பெனிசிலின் காத்த முதல் உயிர்கள் அவை!

• ரோஜா முள் குத்தியதால் ஆல்பர்ட் அலெக்சாண்டர் என்பவருக்கு முகம் வீங்கி அழுகி, ஒரு கண் நீக்கப்பட்டது. அவருக்கு பெனிசிலின் செலுத்தினார் ஹோவர்டு. வேகமாக முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் போதிய அளவு பெனிசிலின் இல்லாததால் முழுமையாகக் குணம் பெறமுடியாமல் அவர் இறந்தார். பெனிசிலின் செலுத்தப்பட்ட முதல் நபர் அவர்.

• ஆரம்ப காலத்தில் பெனிசிலின் பற்றாக்குறை இருந்ததால், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் மட்டும் ஆய்வு செய்யலாம் என்றார் ஹோவர்டு.

• இரண்டாம் உலகப் போர் நடந்ததால் ஆய்வுகள் நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பால் கறக்கும் பழைய கருவிகள், மருத்துவமனை படுக்கைகள், புத்தக அலமாரியின் பிளாஸ்டிக் விரிப்புகள் இவற்றை எல்லாம் கொண்டு ஆய்வுகளைச் செய்தார்கள்.

• உள்நாட்டு நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் இருந்து ரகசியமாக அமெரிக்காவுக்குச் சென்றது ஹோவர்டு குழு. அங்கு விவசாய ஆய்வகம் ஒன்றின் ஒத்துழைப்பில் பெரிய அளவில் பெனிசிலினை உற்பத்தி செய்தனர்.

• வட ஆப்ரிக்காவில் போரின்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அந்த பகுதியை வெட்டி, காயத்தை ஆறவிடுவார்கள். அங்கு சென்ற ஹோவர்டு குழுவினர் காயங்களைத் தைத்து பென்சிலின் செலுத்தினர். காயங்கள் வேகமாக ஆறியதை அப்பகுதியினர் அற்புதம் எனக் கருதினார்கள்.

• ஹோவர்டை ஆஸ்திரேலிய அரசு பல வகைகளில் கவுரவப்படுத்தியது. ஆஸ்திரேலிய கரன்சியிலும் அவர் படம் அச்சிடப்பட்டது. ‘‘இது பல்வேறு நபர்களின் உயிர்த் தியாகம் மற்றும் சாதனை’’ என்றார் ஹோவர்டு தன்னடக்கத்துடன்!

• பலரது உயிரையும் பெனிசிலின் காப்பாற்றியதால் ஒருகட்டத்தில் மக்கள் பெருக்கம் அதிகமானது. இதன் பிறகு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மக்கள்தொகையைக் குறைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார் ஹோவர்டு. ஆனால், அது மட்டும் அவரால் கடைசிவரை முடியவே இல்லை!

No comments:

Post a Comment