Friday 19 September 2014

ஆசியப் போட்டிகள் இன்று தொடக்கம்: பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்

தென் கொரியாவின் இன்சியானில் வெள்ளிக்கிழமை 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு தொடக்க விழா நடைபெறவுள்ளது.
கிளாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வென்ற பதக்கங்களை (64) விட, இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் காமன்வெல்த்தை விட ஆசியப் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பதக்க வேட்டைக்குத் தடையாக இருக்கும்.
சீனாவின் குவாங்சூ நகரில் 2010-இல் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்களை வென்று, ஆறாவது இடம் பிடித்தது. இதுவே, ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் மெச்சத்தகுந்த செயல்பாடு. ஆனால், போட்டியை நடத்திய சீனா 199 தங்கப் பதக்கங்களை அறுவடை செய்தது.
நீண்ட இழுபறிக்குப் பின் இந்திய ஒலிம்பிக் சங்கம் பரிந்துரைத்த 942 பேர் அடங்கிய பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் 679-ஆகக் குறைத்தது. இதனால், 516 வீரர், வீராங்கனைகள் மட்டுமே இன்சியானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இருப்பினும், இந்தியா இந்த முறை 70 பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணைய பொதுச் செயலாளர் ஜிஜி தாம்சன் கூறுகையில், "காமன்வெல்த்தில் 64 பதக்கங்கள் கிடைத்தது. இது திருப்தி அளிக்கும் செயல்பாடே. ஆசியப் போட்டிகளில் 70 பதக்கங்கள் வரை கிடைக்கும்' என்றார்.
துப்பாக்கி சுடுதலில் 10 முதல் 14 பதக்கங்களும், தடகளத்தில் 12 முதல் 16 பதக்கங்களும் கிடைக்கும் என்பது சாய் அமைப்பின் எதிர்பார்ப்பு. குத்துச்சண்டை, பாட்மிண்டன், கபடி, மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இருந்தும் கணிசமான அளவு பதக்கங்கள் கிடைக்கும்.

பதக்கம் கிடைக்கும் ஆட்டங்கள் குறித்து ஒரு பார்வை

ஹாக்கி
ஆசியப் போட்டிகளில் தங்கம் வெல்லும் அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். எனவே, கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி, எப்படியும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் சமீப காலமாக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காதது இந்தியாவுக்கு சாதகம். 60 நிமிட ஆட்டத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து ஆடும் வகையில் திருத்தப்பட்ட புதிய விதிமுறை, இந்திய வீரர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயம்தான்.
எனவே, கடந்தமுறை அரையிறுதியில் மலேசியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த முறை 1998-ம் ஆண்டுக்குப் பின் ஹாக்கியில் இந்தியா தங்கம் வென்றதில்லை என்ற ஏக்கத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப் போராடும்.
தேசியக் கொடி ஏந்திச் செல்கிறார் சர்தார் சிங்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங், தேசியக் கொடியை ஏந்திச் செல்வார். அவரைத் தொடர்ந்து இந்திய வீரர், வீராங்கனைகள் தொடக்க விழாவில் வலம் வருவர்.
இந்த கெளரவம் குறித்து சர்தார் சிங் கூறுகையில், "ஆசியப் போட்டி போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும் பெரிய அளவிலான போட்டியில், தேசியக் கொடியை ஏந்தி அணிவகுத்துச் செல்வது என்பது, எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம்' என்றார்.
இதற்கிடையே, போட்டி நடைபெறும் கிராமத்தில் வியாழக்கிழமை இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
குத்துச்சண்டை
நீண்ட போராட்டத்துக்குப் பின் இந்திய குத்துச்சண்டை அமைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் வீரர்கள் நிம்மதியுடன் தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியும். விஜேந்தர் சிங் இல்லாததால், நீண்ட இடைவெளிக்குப் பின் களம்புகுந்துள்ள 2006 காமன்வெல்த் சாம்பியனான 33 வயது அகில் குமார் தலைமையில் இந்திய அணி களம்காண்கிறது. மகளிர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான மேரி கோம், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காத ஏக்கத்தை இந்த முறை நிவர்த்தி செய்யக் காத்திருக்கிறார்.
டென்னிஸ்
தொடக்கத்தில் இருந்தே டென்னிஸ் அணித் தேர்வில் குழப்பம் நிலவியது. முதலில் தமிழக வீரர்களை இந்திய டென்னிஸ் சங்கம் புறக்கணித்து விட்டதாக சர்ச்சை எழுந்தது.
அடுத்ததாக, தரவரிசையில் ஏற்றம் காண்பதற்காக முன்னணி வீரர்களான சோம்தேவ், லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர். பின்னர், மகளிர் பிரிவில் சிநேகாதேவி ரெட்டியின் பெயரை நீக்கியது அடுத்த குழப்பத்துக்கு வழிவகுத்தது.
முன்னணி வீரர்கள் விலகியதால் யூகி பாம்ப்ரி, சனம் சிங், சாகேத் மைனேனி உள்ளிட்ட இரண்டாம் நிலை வீரர்களுடன் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மகளிர் பிரிவில் சானியா மிர்ஸா பங்கேற்க சம்மதித்திருந்தாலும், இந்திய அணியினரிடம் இருந்து அதிக அளவில் பதக்கங்களை எதிர்பார்க்க முடியாது.
மல்யுத்தம்
சியோலில் 1986-இல் நடைபெற்ற ஆசியப் போட்டிகளின் ஆடவருக்கான மல்யுத்தம் 100 கிலோ எடைப் பிரிவில், பாகிஸ்தானின் ஷாஹித் பர்வேஸ் பட்டை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்தியாவின் கர்தார் சிங். ஆசியப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த கடைசி தங்கம் அதுவே. அதனால், 28 ஆண்டுகளுக்குப் பின் மல்யுத்தத்தில் மீண்டும் தங்கம் வெல்ல ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அடுத்தடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் காயம் காரணமாக விலகி இருப்பதால், முழுக்க முழுக்க யோகேஷ்வர் தத் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தாஷ்கென்ட்டில் கடந்த மாதம் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பைப் புறக்கணித்து வீரர், வீராங்கனைகள் ஆசியப் போட்டிக்குத் தயாராகி உள்ளதால், கடந்தமுறையை (3 பதக்கங்கள்) விட அதிக பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
யோகேஷ்வர் தத் தவிர்த்து அமித் குமார், பவன் குமார், சத்யவர்த் காதியான், வீராங்கனைகள் வினேஷ் பொகட், பபிதா குமாரி, கீதிகா ஜாகர் ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதல்
இந்த பிரிவில் இந்தியாவுக்கு கணிசமான பதக்கங்களை எடுத்து வைக்கலாம். கடந்தமுறை தங்கம் வென்ற ரஞ்சன் சோதி இந்தமுறை பங்கேற்கவில்லை எனினும், ஒலிம்பிக் தங்க மகன் அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ஜிது ராய் ஆகியோரிடம் இருந்து நிச்சயம் பதக்கம் கிடைக்கும்.
ஆசியப் போட்டியில் தங்கம் வெல்ல அபினவ் பிந்த்ராவுக்கு கடைசி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யார் ஏமாற்றினாலும், காமன்வெல்த்தில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றதோடு, சமீபத்தில் முடிந்த உலக துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று, துப்பாக்கி சுடுதலில் புதிய நாயகனாக அவதாரம் எடுத்துள்ள ஜிது ராய் பதக்கம் இல்லாமல் திரும்ப வாய்ப்பில்லை.
அத்துடன், காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளான பள்ளி மாணவி மலைகோ கோயல், அயோனிகா பால், அபூர்வி சந்தேலா ஆகியோரும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர காரணாகத் திகழ்வர்.
இருப்பினும், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு சீனா, தென் கொரியாவினர் சவால் அளிப்பர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தடகளம்
காமன்வெல்த்தில் ஆடவருக்கான வட்டு எறிதலில் தங்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த விகாஸ் கெளடா, இதுவரையிலும் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றதில்லை என்ற குறையைப் போக்கக் காத்திருக்கிறார். மகளிர் பிரிவில் காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற சீமா புனியா, முன்னணி வீராங்கனை கிருஷ்ணா புனியா இருவரிடம் இருந்தும் தலா ஒரு பதக்கத்தை எதிர்பார்க்கலாம்.
பி.டி. உஷாவிடம் பயிற்சி பெற்று வரும் டின்டு லூகா 800 மீட்டர் ஓட்டத்தில் ஒரு பதக்கத்தைப் பெற்றுத் தருவார் என்பது தடகள ரசிகர்களின் எதிர்பார்ப்பு. தவிர, காமன்வெல்த்தில் மும்முறை தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) வெண்கலம் வென்ற அர்பிந்தர் சிங், கடந்த மாதம் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பையில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் வெற்ற பெற்ற சித்தாந்த் திங்கலையா ஆகியோரும், பதக்க தாகத்துடன் உள்ளனர்.
கடந்தமுறை தடகளத்தில் ஐந்து தங்கம் உள்பட 12 பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஜானி, ரஞ்சித் தகுதி
பஞ்சாபின் பாட்டியாலாவில் நடைபெற்ற ஆசியப் போட்டிக்கான தகுதிச் சுற்றில், டிரிபிள் ஜம்ப் வீரர் ரஞ்சித் மகேஷ்வரி, மயூகா ஜானி ஆகியோர் வெற்றி பெற்று ஆசியப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
ஆனால், ஆடவருக்கான 4ஷ்400 மீட்டர் தடை ஓட்ட வீரர்கள் இலக்கை எட்ட முடியாமல், இன்சியான் செல்லும் வாய்ப்பை நழுவ விட்டனர்.
பாட்மிண்டன்
காமன்வெல்த் போட்டிக்கும், ஆசியப் போட்டிக்கும் இடையே இந்திய பாட்மிண்டனில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தோல்வியடைந்த சாய்னா நெவால், பயிற்சியாளர் கோபி சந்திடம் இருந்து பிரிந்து பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி மேற்கொண்டார். மாறாக, உலக சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து வெண்கலம், காமன்வெல்த்தில் வெண்கலம் வென்ற உற்சாகத்தில் உள்ளார் சிந்து. இருவருக்கும் இடையே மறைமுக போட்டி நிலவுகிறது.
ஜுவாலா கட்டா காயம் காரணமாக விலகியது, இரட்டையர் பிரிவில் அஸ்வினிக்கு ஜோடி யார் என்ற சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஆடவர் பிரிவில் காஷ்யப் காமன்வெல்த்தில் தங்கம் வென்றாலும், ஆசியப் போட்டியில் அவர் சீனா, இந்தோனேஷியா, மலேசியா, தென் கொரியா வீரர்களிடம் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும்.
கடைசியாக ஆசியப் போட்டியில் பாட்மிண்டனில் 1982-ம் ஆண்டு சையத் மோடி ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். அணிகள் பிரிவில் 1986-ம் ஆண்டு இந்திய அணி வெண்கலம் வென்றது.
பளுதூக்குதல்
பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவில் இருந்து நான்கு வீரர்கள், மூன்று வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவில் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் மீண்டும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, மற்ற வீரர்கள் சுகன் தே, விகாஸ் தாக்குர், வீராங்கனைகள் மீராபாய், சஞ்சிதா சானு மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஸ்குவாஷ்
காமன்வெல்த்தில் முதன்முறையாக மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த தமிழகத்தின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா இருவரும், ஆசியப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளனர். விதிமுறைகளை மீறி ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் குரூப் சுற்றில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆசியப் போட்டியில் இருந்து விலக தீபிகா நினைத்திருந்தார்.
இருப்பினும், நாட்டுக்கு முன்னுரிமை அளித்து, ஆசியப் போட்டியில் அவர் பங்கேற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் மீண்டும் தமிழக ஜோடி தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
வாலிபால்
கடந்த மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்திய வாலிபால் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. தற்போதுள்ள இந்திய அணி, ஆசியப் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு தகுதி வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. தமிழகத்தின் நவீன்ராஜா ஜேக்கப், உக்கிர பாண்டியன், கனகராஜ், பிரபாகரன் உள்ளிட்ட இளம் வீரர்கள் பதக்க ஏக்கத்துக்கு விடை கொடுப்பர் என்பது வாலிபால் ரசிகர்களின் நம்பிக்கை.
இவை தவிர்த்து, காமன்வெல்த்தில் டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ பிரிவுகளில் பதக்கம் கிடைத்ததால், ஆசியப் போட்டியிலும் இந்தப் பிரிவுகளில் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பயோ டேட்டா
போட்டி நடக்கும் இடம் : இன்சியான், தென் கொரியா
போட்டி வாசகம் : இங்கே வேற்றுமை மிளிர்கிறது
பங்கேற்கும் நாடுகள் : 45
வீரர், வீராங்கனைகள் : 9,429
விளையாட்டு : 36 விளையாட்டுகள்,
439 உட்பிரிவுகள்
தொடக்க விழா : செப்டம்பர் 19
நிறைவு விழா : அக்டோபர் 4

No comments:

Post a Comment