Tuesday 11 February 2014

மூழ்கடிக்காத ஒரு கடல்

பிரபஞ்சத்தில் உள்ள வேறு எந்தக் கோளிலும் கடல்கள் இல்லை. தண்ணீரும் இது வரை கண்டறியப்படவில்லை. தண்ணீர் இருக்கலாம் என்பதற்கான தடங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
கடலில்தான் உலகின் முதல் உயிரான ஒற்றை செல் பாக்டீரியா தோன்றியது. மின்னல் அடித்தபோது, அமினோ அமிலங்களின் வேதிவினையால் அந்த உயிர் தோன்றியிருக்கலாம். அந்த வகையில் கடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உப்புத்தன்மை மிகுந்த கடல் நீரில்தான் இன்றும் உலகின் பெரும்பாலான உயிரினங்கள் வாழ்கின்றன.
கடல் நீரில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்தால், அதில் 35 சதவீதம் உப்பு இருக்கும். உலகிலுள்ள கடல் நீர் முழுவதையும் காய வைத்தால் அதிலிருந்து கிடைக்கும் மொத்த உப்பை அனைத்துக் கண்டங்களிலும் பரப்புகிறோம் என்று வைத்துக்கொண்டால், அதுவே 1.5 மீட்டர் உயரத்துக்கு வருமாம். அவ்வளவு உப்பு இருக்கிறது.
உலகில் உயிரினங்களே இல்லாத கடல் என்று சாக்கடலை (டெட் சீ) கூறலாம். 67 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் கடல் ஆழமானது, அதிகளவு உப்புத்தன்மை கொண்டது. அளவு கடந்த உப்புத்தன்மையால் அக்கடலில் எந்த உயிரினமும் வாழ முடியாது. உப்புத்தன்மையை சகித்துக்கொள்ளும் சிற்சில உயிரினங்கள் மட்டும் இந்தக் கடலில் பிழைத்திருக்கின்றன.
வெளியே எங்கும் பரவ முடியாத அளவு நிலத்தால் சூழப்பட்டுள்ள சாக்கடல், ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதிகளவு உப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. இந்தக் கடலில் ஒரு கிலோ கடல் நீரை எடுத்தால் அதில் 300 கிராம் முதல் 332 கிராம் வரை உப்பு கிடைக்கும்.
கடல் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரிக்கத் அதிகரிக்க தண்ணீரின் அடர்த்தியும் அதிகரிக்கும். அதனால், சாக்கடலில் உள்ள தண்ணீர், அடர்த்தி மிகுந்ததாக இருக்கிறது. இதன் காரணமாக, இந்தக் கடலுக்குள் நீச்சல் தெரியாதவர்கள்கூடத் தைரியமாகக் குதிக்கலாம். பயப்பட வேண்டாம். மூழ்கிப் போக மாட்டோம், இந்தக் கடலில் நாம் ஒன்றும் செய்யாமலேயே மிதக்க முடியும். அந்த அளவுக்கு இந்தக் கடலின் தண்ணீர் அடர்த்தி மிகுந்து இருக்கிறது.
எது பெரியது?
உலகில் ஐந்து பெருங்கடல்கள் இருக்கின்றன. இவற்றில் ஆர்டிக் பெருங்கடல்தான் மிகச் சிறியது. அதன் பரப்பு 94 லட்சம் சதுர கிலோ மீட்டர். பசிபிக் பெருங்கடல்தான் மிகப் பெரியது. 16 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. உலகிலுள்ள பெருங்கடல்களில் 45.9 சதவீதத்தை இதுவே ஆக்கிரமித்துக்கொள்கிறது. எஞ்சிய நான்கு பெருங்கடல்களும் வெறும் 44 சதவீதம்தான்.
பெருங்கடல்கள் 5 மட்டுமே இருந்தாலும், கடல்கள் என்று வரையறுக்கப்பட்டவை உலகில் 54 உள்ளன. அவற்றில் பெரியவை தெற்கு சீனக் கடல், கரீபியக் கடல், மத்திய தரைக் கடல்.

No comments:

Post a Comment