Tuesday 18 February 2014

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு:
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய முவரின் சீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் அடங்கிய அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர்.
இருப்பினும், இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ஐ பயன்படுத்தி 3 பேரையும் சிறையில் இருந்து மாநில அரசு விடுவிக்கலாம் என பரிந்துரைத்தனர்.
நீதிபதிகள் கருத்து:
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் சீராய்வு மனு மீதான விசாரணையில் மத்திய அரசு முன் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ரத்து செய்ததாக அறிவித்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்: "தூக்கு தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவரும் அறிவர்" என்றனர்.
நீதிபதிகள் நம்பிக்கை:
இனி வருங்காலங்களில் கருணை மனுக்கள் மீதான முடிவு காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அது மட்டும் அல்லாது, கருணை மனுக்கள் மீதான முடிவை தேவையில்லாமல் காலம் தாழ்த்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு அவ்வப்போது மத்திய அரசும் அறிவுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.
கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment