Tuesday 18 February 2014

விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை: உணவுத் துறை அமைச்சர் உத்தரவு

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய அட்டைகள் உரிய விசாரணைக்குப் பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் ரா.காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ளதாவது:
சென்னை எழிலகம் வளாக கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் அலுவலர்களின், மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் ரா.காமராஜ் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 3 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் தரமான அரிசி 1 கோடியே 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் ஒவ்வொரு மாதமும் சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை ஆகியனவும் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
பொது விநியோகத் திட்ட தேவைக்கென தமிழ்நாட்டில் உள்ள அரசு கிடங்குகள் மற்றும் இந்திய உணவுக் கழக கிடங்குகளில் சுமார் 12 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
அனைத்து அங்காடிகளிலும் வேலை நேரம், விடுமுறை நாட்கள், பகுதிநேரக் கடைகளுக்கு ஊழியர்கள் செல்லும் நாட்கள், புகார் பிரிவு தொலைபேசி எண்
044-28 59 28 28 ஆகியன தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
2011 ஜூன் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வரையில் 9 லட்சத்து 4 ஆயிரத்து 232 புதிய குடும்ப அட்டைகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 64 ஆயிரத்து 290 போலிக் குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி தங்களுக்குரிய ஒதுக்கீட்டின்படி அத்தியாவசியப் பொருள்களைப் பெறும் வகையில் கடந்த இரண்டரை வருடங்களில் 431 முழுநேரக் கடைகளும் 832 பகுதி நேரக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய அட்டைகள் உரிய விசாரணைக்குப் பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். தகுதியற்ற மனுக்களை நிராகரிக்கும் போது அந்த விவரங்களையும் மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை களுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.’’ என்றார்.

No comments:

Post a Comment