Wednesday 12 February 2014

பறவை ஆராய்ச்சி: உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ அவற்றைக் கணக்கிடுவதற்கும் உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், திட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.
சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும்.
குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். எல்லாப் பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களால் கண்டுபிடிக்க முடிந்த பறவை வகைகளைப் பதிவு செய்தால் போதும்.
இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் புரிந்துகொள்ளலாம். வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 111 நாடுகள் பங்கேற்றன. 3.5 கோடி பறவை நோக்கர்கள் 4,000 பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு.
உங்கள் பதிவுகளை www.BirdCount.org இல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பாருங்கள்: gbbc.birdcount.org

No comments:

Post a Comment