Thursday 20 February 2014

சவூதி நாளிதழின் முதல் பெண் ஆசிரியர் சவுமய்யா ஜபர்தி

சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழின் புதிய ஆசிரியராக சவுமய்யா ஜபர்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாளிதழ் ஆசிரியராக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பது சவூதி வரலாற்றில் இதுவே முதல்முறை.
இதன்மூலம் பழமைவாத கொள்கையைப் பின்பற்றும் முஸ்லிம் நாட்டில் ஊடகத் துறையின் உயர் பதவிக்கு மேலும் சில பெண்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சவூதியில் வெளியாகும் இரண்டு பிரபலமான ஆங்கில நாளிதழ்களில் ஒன்றாக விளங்கும் சவூதி கெஜட், ஜபர்தியை முதன்மை ஆசிரியராக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜபர்தி கூறுகையில், "பெண்களுக்கு எதிரான கண்ணாடியாலான உட்கூரையில் விரிசல் எற்படுத்தப்பட்டுள்ளது. கதவும் உடைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு நிகராக ஊடகத் துறையில் உள்ள மற்ற பெண்களும் என்னைப் போல, முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் கொண்ட உயர் பதவிக்கு வரும் வரை இந்த வெற்றி முழுமை அடையாது.
நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ள முதல் பெண் என்பதால் என்னுடைய பொறுப்பு இரண்டு மடங்காகி உள்ளது. என்னுடைய செயல்பாடு சக பெண்களிடமும் பிரதிபலிக்கும்" என்றார். சவூதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவரின் அனுமதியின்றி பெண்கள் பணிபுரியவும் பயணம் செய்யவும் இந்தச் சட்டம் தடை விதிக்கிறது.

No comments:

Post a Comment