Thursday 20 February 2014

இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை

வரலாறு இதுதான். இந்திய அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு “சட்டம் அனுமதிக்கும் வழிகளில் அல்லாது – எந்த ஒரு மனிதனின் வாழ்வுரிமையும் பறிக்கப்படக் கூடாது” என்றே கூறுகிறது.
பிரிட்டனின் காலனி நாடாக இந்தியா இருந்த காலத்தில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 1860-வது பிரிவின்படி, மரண தண்டனையும் தண்டனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் மரண தண்டனை இந்திய சட்டப் புத்தகத்தில் அப்படியே இடம்பெற்றது.
எந்தெந்தக் குற்றங்களுக்கு?
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, கிரிமினல் சதிச்செயலில் ஈடுபட்டால்; இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்பது, போர் தொடுக்க முயற்சிப்பது, போரைத் தொடுப்பவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் ஈடுபட்டால், அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டினால், பொய் சாட்சி கூறி அப்பாவியின் மரண தண்டனைக்குக் காரணமாக இருந்தால், கொலை செய்தால், பணத்துக்காக ஆள்களைக் கடத்தினால், கொள்ளை, கொலை ஆகியவற்றை ஒருசேரச் செய்தால், ஐந்து பேரோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ கொள்ளை அடிக்கும்போது கொலை செய்திருந்தால் - அந்த கும்பலிலிருந்த ஒவ்வொருவருக்கும், பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டால் அல்லது அப்போது பெண்ணைத் தாக்கிச் செயலிழக்கச் செய்தால் அல்லது கொன்றால், சாதி – மத வெறியில் காதலர்களைக் கொன்றால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இன்னும், உயிரிழந்த கணவனுடன் மனைவியையும் சிதையில் ஏற்றி உயிரோடு கொளுத்தும் ‘சதி' என்னும் கொடூரத்தை அரங்கேற்றுவோருக்கு, பழங்குடிகள், பட்டியல் இனத்தவருக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சியம் சொல்லி அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தருகிறவருக்கு, போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு, பொது இடங்களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
காவல் துறையினர் விசாரணைக்காகப் பிடித்துவருகிறவர்களிடம் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளுவது, ‘போலி மோதல்' களில் மக்களைச் சுட்டுக்கொல்வது போன்றவற்றில் ஈடுபட்டாலும், மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இதுவரை எத்தனை பேர்?
1947-ல் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரையில் எத்தனை பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதில் இன்னமும் சர்ச்சை நிலவுகிறது. அரசு தரும் அதிகாரபூர்வத் தகவல் 52 பேர் மட்டுமே மரண தண்டனைக்கு உள்ளானதாகத் தெரிவிக்கிறது. 1953 முதல் 1963 வரையிலான பத்தாண்டு காலத்திலேயே 16 இந்திய மாநிலங்களில் மொத்தம் 1,422 பேர் மரண தண்டனைக்கு ஆளானதாக 1967-ல் வெளியான இந்திய சட்ட ஆணையத்தின் 34-வது இணைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) தெரிவிக்கிறது.
அரிதினும் அரிதான…
மரண தண்டனைக்கு எதிரான தீவிரமான போராட்டங்களாலும் இயக்கங்களாலும் இந்தியா 1983-ல், ‘மிகவும் அரிதினும் அரிதான' குற்ற வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கும் முடிவை எடுத்தது.
ஆனாலும் எதிர்ப்புதான்
இப்படி ஒரு முடிவை எடுத்தபின் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கையிலேயே இந்தியா மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது என்றாலும், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் சர்வதேச முயற்சிக்கு இன்னும் இந்தியா முட்டுக்கட்டையாகவே நிற்கிறது. மரண தண்டனைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 2007, 2012-ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. எப்போதும் மரண தண்டனை ஒழிப்புக்கு எதிராகவே இந்தியா நிற்கிறது.​

No comments:

Post a Comment