Saturday 15 February 2014

ஆம்புலன்ஸ்
 என்னும்
 நவீன ரட்சகர்

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கோ வேறு ஏதோ நிகழ்ச்சிக்கோ உற்சாகமாக வாகனத்தில் அல்லது பேருந்தில் திரும்பும்போது, சைரன் சத்தத்துடன் கடந்து போகும் ஆம்புலன்ஸைப் பார்த்ததும் திடீர் என ஒரு அமைதி நம்மைச் சூழ்ந்துவிடும். பலதரப்பட்ட சிந்தனைகள், வீட்டில் இருக்கிற நம் பெரியவர்களும் துடுக்குத்தனமாக ஓடும் நம் குழந்தைகளும் நினைவுக்கு வருவார்கள். நாமே ஆம்புலன்ஸில் போக நேரிட்ட நாள் நினைவுக்கு வரும். ஆம்புலன்ஸ் ஒரு அபசகுனத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆம்புலன்ஸ் நமக்குப் பல நன்மைகளைத் தந்திருக்கிறது. அதனால் எத்தனையோ இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.
இன்று பெரும்பாலும் மக்கள் பயன்பாட்டுக்காகத்தான் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தொடக்க காலத்தில் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது ராணுவப் பிரிவுக்காக மட்டும்தான். அதுபோல் குதிரை வண்டி, மோட்டார் வண்டி, ஆட்டோமொபைல், ஹெலிகாப்டார் என இன்று ஆம்புலன்ஸ் நிறைய வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் ஆம்புலன்ஸ் சேவை, முதலில் ஸ்ட்ரெக்சரில் இருந்துதான் தொடங்குகிறது. போரில் காயம் அடையும் வீரர்களுக்கு முதல்உதவி கொடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும் வாகனமாகத்தான் ஆம்புலன்ஸ் இருந்துள்ளது. ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலாகப் பிரிட்டனில் இருக்கும் ஆங்கிலோ - சாக்ஸன் (Anglo-Saxons) என்னும் இனக்குழுவால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அது கி.பி.900ஆம் வருஷத்தில். ஆம்புலன்ஸ் ஊழியர்களாக முதன்முதலில் பணியாற்றியவர்கள் புனித வீரர்கள்தாம் (Knights of St John). 11ஆம் நூற்றாண்டில் நடந்த முதல் சிலுவைப் போரின்போது இவர்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இவர்கள் கிரேக்கர்களிடம் இருந்து ஆம்புலன்ஸ் சேவைக்காகப் பயிற்சி பெற்றிருந்தார்கள் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது.
பறக்கும் ஆம்புலன்ஸ்
1487ஆம் ஆண்டில் ஸ்பெயின் ராஜ தம்பதியர் பெர்டினார்ட் இசபெல்லா (King Ferdinand - Queen Isabella) ஸ்பெயின் ராணுவத்திற்காகப் போர்க்களத்தில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால் இன்றைக்கு ஆம்புலன்ஸுக்கான முன்மாதிரி வடிவமான ஆம்புலன்ஸ் 18ஆம் நூற்றாண்டில்தான் உருவாகியது. நெப்போலியன் ராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர் டொம்னிக் ஜீன் லாரேதான் (Dominique-Jean Larrey) இந்த முன்மாதிரி ஆம்புலன்ஸைக் கண்டுபிடித்தது. கி.பி. 1792இல் முதல் ஆம்புலன்ஸ் சேவை பிரஞ்சு ராணுவத்திற்காக டொம்னிக் ஜீன் லாரேயால் அறிமுகப்படுத்தப்பட்டது. குதிரை வண்டிகள்தாம் அப்போது ஆம்புலன்ஸ் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் முகாமிட்டிருந்த ராணுவத்தினருக்காக 16 குதிரை வண்டிகள் ஆம்புலன்ஸ்காகப் பயன்பட்டன. இவற்றை அவர் பறக்கும் ஆம்புலன்ஸ் (Flying Ambulance) என்றழைத்துள்ளார். ஒவ்வொரு ஆம்புலன்ஸ்க்கும் தனி மருத்துவர்கள் உட்பட 340 பேர் ஆம்புலன்ஸ் சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் இத்தாலி முகாமில் மட்டும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து நெப்போலியன் பிரஞ்சு ராணுவம் முழுக்கவும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். 1832இல் லண்டனில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வாகனங்கள் பயன்ப்படுத்தப்பட்டுள்ளன. 1887இல் செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் (St. John Ambulance) என்னும் நிறுவனம் லண்டனில் தொடங்கப்படுகிறது. இது மிகவும் வெற்றிகரமான மக்கள் சேவைக்கான ஆம்புலன்ஸாகத் திகழ்ந்தது. லண்டன் முழுவதும் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்தியாவில் முதல் ஆம்புலன்ஸ் சேவையும் இந்த அமைப்புதான் 1914இல் தொடங்கியிருக்கிறது. இக்காலகட்டத்திற்கு முன்பு 1869இல் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவின் பெல்லேவ்யூ மருத்துவமனை (Bellevue Hospital) இதை அறிமுகப்படுத்தியது. இவ்வகை ஆம்புலன்ஸ்களில் விபத்து நடந்த இடத்திலே சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் மருந்துகளும் உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்தன.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் 1899ஆம் ஆண்டில்தான் ஆட்டோமொபைல் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்காகோவில் உள்ள மைக்கல் ரீசீ மருத்துவமனைக்காக (Michael Reese Hospital) இவ்வகை ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்குவந்தது. 1950ஆம் ஆண்டு கொரியப் போரின்போதுதான் அமெரிக்கா ஹெலிக்காப்டர் ஆம்புலன்ஸைப் பயன்படுத்தியது. மகாத்மா காந்திகூட ஒரு ஆம்புலன்ஸ் சேவை அமைப்பைத் தொடங்கி நடத்தியிருக்கார். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது 1899ஆம் ஆண்டு இந்தியன் ஆம்புலன்ஸ் கார்ப்ஸைத் (Indian Ambulance Corps) தொடங்கிச் சேவையாற்றியிருக்கிறார். இரண்டாம் ஆங்கிலோ போயர் (Anglo-Boer War) போரின்போது பிரிட்டிஷ் துருப்புகளுக்கு இந்தியன் ஆம்புலன்ஸ் கார்ப்ஸ் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.
பெரிய விபத்துகளைச் சமாளிக்க துபாய் அரசு உலகத்தின் பெரிய ஆம்புலன்ஸை உருவாக்கியுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் மூன்று வருஷம் முன்பு 2009இல் உருவாக்கப்பட்டுள்ளது. 80 நோயளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையிலான மிகப் பிரம்மாண்ட ஆம்புலன்ஸ் இது.
இந்தியாவில், ஆம்புலன்ஸ் சேவையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது 108 திட்டம்தான். முதலில் 2005ஆம் ஆண்டு 108 ஆம்புல்ன்ஸ் சேவை முதன்முதலாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசு, Emergency Management and Research Institute(EMRI) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு EMRI நிறுவனம் இந்தியாவின் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியது. இன்று ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், உத்ரகாண்ட், கோவா, கர்நாடகா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இச்சேவை நடைமுறையில் உள்ளது. இப்போது நாடு முழுவதும் உள்ள 108ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 4535. இதன் மூலம் ஆண்டுக்குப் பத்து லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15இல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் 629 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளதாக EMRIஇன் அறிக்கை சொல்கிறது. இச்சேவை தொடங்கப்பட்ட 2ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4,11,288 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன எனத் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. முக்கியமாக இச்சேவை பிரசவ இறப்பு விகிதத்தைப் பெருமளவில் குறைத்துள்ளது. 1,10,480 பிரசவத்திற்குச் சேவையாற்றியுள்ளது. முன்பெல்லாம் உயிருக்கு ஆபத்தான தருணங்களில் வேண்டி, அற்புதங்களை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறோம். ஆனால் ஆம்புலன்ஸ், இன்று நம் கண் முன்னால் நிகழும் அற்புதம். அறிவியல் வளர்ச்சியின் அற்புதம்.

No comments:

Post a Comment