Tuesday 3 December 2013

'தமிழகத்தில், ஒன்பது ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் புதிதாக செயல்பாட்டிற்கு வர உள்ளன. எனவே, காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்' என, கோரிக்கை வலுத்துள்ளது.

ஓட்டுனர் உரிமம் வழங்குதல், புதிய வாகனம் பதிவு செய்தல், வாகன வரி பெறுதல், தகுதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும், 70 வட்டார போக்குவரத்து அலுவலகம், 54 பகுதி அலுவலகம் செயல்படுகின்றன. இருப்பினும், வாகன அனுமதி சீட்டு, வாகன மறுபதிவு, தடையில்லா சான்று, பன்னாட்டு ஓட்டுனர் உரிமத்தை, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மட்டுமே பெற முடியும்.

தரம் உயர்த்துதல்:

பகுதி அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள், இவற்றை பெற வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய, ஐந்து பகுதி அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதே போல, அதிக வாகனங்கள் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணிகளை விரைவாக முடிக்க, கூடுதலாக ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், கோவை மேற்கு, சேலம் தெற்கு, ஈரோடு மேற்கு, சென்னை குன்றத்தூர் ஆகிய, நான்கு புதிய ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உருவாக்கபட்டன. இந்த, ஒன்பது ஆர்.டி.ஓ., அலுவலகங்களும் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன. ஆர்.டி.ஓ., மோட்டார் வாகன ஆய்வாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், தட்டச்சர் என, ஒரு அலுவலகத்துக்கு, 19 பேர் என, ஒன்பது ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, மொத்தமாக, 171 ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே, 26 ஆர்.டி.ஓ., பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ஒரே ஆர்.டி.ஓ.,வே ஒன்றுக்கும் மேற்பட்ட அலுவலக பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், பணிகளை விரைவாக முடிப்பதில் சிரமம் நீடிக்கிறது. மூன்று ஆண்டுகளாக, ஆர்.டி.ஓ., பணியிடம் முழுமையாக நிரப்பப்படவில்லை. போக்குவரத்து துறையில், அனைத்து நிலைகளிலும், 30 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.

No comments:

Post a Comment