Sunday 1 December 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று நடந்த "குரூப் 2 தேர்வில், நேற்று 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்வுக்கான மொத்த பணியிடங்கள், 1,064. மூன்று மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.இத்தேர்வுக்கு, தமிழகம் முழுவதும், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனையில், 6.5 லட்சம் ஏற்கப்பட்டு, தேர்வு நடந்தது.

தமிழகம் முழுவதும், 2,269 மையங்களில், காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. சென்னையில், 269 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில், பொதுப்பிரிவில், 75 கேள்விகள், திறன் அறிதலில், 25 கேள்விகள், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில், 100 கேள்விகள் என, 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட பின் நடக்கும் தேர்வு என்பதால், பரபரப்பு இருந்தது.தேர்வு குறித்து, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், "தமிழ் மொழி கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. அறிவியலில், குறிப்பாக வேதியியல் பாட கேள்விகள் மட்டும் சற்று தடுமாற வைத்தன. கடந்த தேர்வுகளுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்தது' என்றனர்.

"ஆப்சென்ட்':குரூப் 2 தேர்வுக்கு, மொத்தம், 6.64 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 25 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. "கடந்த தேர்வுகளைப் போல் இந்த முறையும் தேர்வு கடினமாக இருக்கும் என்று கருதியதால், "ஆப்சென்ட்' அதிகரித்துள்ளது' என, தேர்வர்கள் சிலர் தெரிவித்தனர். காலிப் பணியிடங்களை பொறுத்தவரை, வருவாய்த்துறை உதவியாளர்கள் பதவியில், அதிகபட்சமாக, 370 பணியிடங்கள் உள்ளன. இதற்கான போட்டி அதிகளவில் பின்பு இருக்கும் என கூறப்படுகிறது.

திருநங்கை பங்கேற்பு :டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில மையங்களில் தேர்வை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:"குருப் 2 தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும். இத்தேர்வுக்கான "கீ ஆன்சர்' ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தற்போது நடந்த, குரூப் 2 தேர்வில், திருநங்கை ஒருவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு அனுமதியளித்தால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எல்லா தேர்வுகளிலும், திருநங்கைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வுகள் ஒளிவுமறைவின்றி நடத்தப்படுவதால், விண்ணப்பதாரர்கள் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment