Tuesday 9 December 2014

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு புதிய ஆதாரம்: கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரத்தை அங்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி ரோபோ உலவி கண்டுபிடித்துள்ளதாக நாசா (அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் செவ்வாய் கிரகமும் ஏறக்குறைய பூமியைப் போன்றதுதான். அதில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கியூரியாசிட்டி அனுப்பியுள்ள புதிய படங்கள், சேகரித்துள்ள புதிய தகவல்கள் மூலம் அங்கு பல ஆறுகள் ஓடியிருப்பது தெரியவந்துள்ளது. இவை தவிர நீர் தேங்கும் வகையில் செவ்வாய் கிரகத்தின் பல இடங்களில் ஏரிகளும் இருந்துள்ளன. இவை எப்படியும் பல கோடி ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும். முன்பு செவ்வாயில் இருந்த கூழாங்கற்கள் மூலம் அங்கு தண்ணீர் ஓடியது உறுதி செய்யப்பட்டது.

அங்கு புயலால் நிலத்தில் பெரும் குழிவு ஏற்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னொரு காலத்தில் செவ்வாயில் பருவ நிலை மாறுபாடுகள் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

“செவ்வாயில் மிகக்குறுகிய காலம்தான் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்ற முந்தைய கணிப்புகளை இப்போதைய புதிய கண்டுபிடிப்புகள் பொய்யாக்கிவிட்டன. நிலத்துக்கு மேல் அல்லது நிலத்துக்கு கீழ் அங்கு பல ஆயிரம் ஆண்டுகள் தண்ணீர் இருந்துள்ளது” இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாஸவதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment