Sunday 7 December 2014

நோம் சாம்ஸ்கி 10

மொழியியல் வல்லுநர், எழுத்தாளர், அரசியல் தத்துவவாதி என பன்முகத் தன்மை கொண்ட நோம் சாம்ஸ்கி பிறந்தநாள்  டிசம்பர் 7
. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 அமெரிக்காவில் பிறந்தவர். பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பயின்றார். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பல மொழியியல் அறிஞர்களிடம் பயிற்சி பெற்றார். தத்துவம், கணிதமும் பயின்றார்.
 புத்தகம் வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். எண்ணிலடங்கா புத்தகங்கள் படித்துள்ளார். இவர் எழுதிய சொற்றொடர் இயல் அமைப்புகள் (Syntactic Structures) என்ற புத்தகம் முக்கிய மொழியியல் புத்தகமாகக் கருதப்படுகிறது.
 பார்சிலோனா நகரம் வீழ்ச்சியுற்றதைக் கேள்விப்பட்டு, பாசிசக் கொள்கைகள் பரவும் ஆபத்து இருப்பதாக இவர் எழுதிய கட்டுரை பள்ளி பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 10.
 மாமாவின் பொறுப்பில் இருந்த செய்தித்தாள் கடையில் மாலை நேரங்களில் வேலை பார்த்தார். பெரிதாக லாபம் இல்லை என்றாலும், பலரும் பல கருத்துகளையும் விவாதிக்கும் களமாக இருந்தது அந்த இடம். தனது அரசியல் அறிவு அங்குதான் விரிவடைந்தது என்கிறார் சாம்ஸ்கி.
 மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) உட்பட பல கல்வி நிறுவனங்களில் 50 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலகின் மனிதவியல் வல்லுநர்களில் மிகச் சிறந்த 10 பேரில் ஒருவராக கருதப்படுகிறார்.
 மொழியியல் துறை பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுபவர். உள்ளம், அறிவுத் திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் ஆகியவற்றைத் தொடர்புகொள்ளும் அறிதிறன் அறிவியல் (Cognitive Science) துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர்.
 அமெரிக்கா உட்பட பல நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள், செயல்பாடுகளைத் திறனாய்வு செய்து அவற்றின் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அரசியல், மொழியியல் குறித்து சுமார் 90 புத்தகங்கள் எழுதியுள்ளார். கணினியியலிலும் புத்தகம் எழுதியுள்ளார்.
 உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் உரையாற்றியுள்ளார். உலக அளவில் கலை, இலக்கிய வட்டாரத்தில் அதிகம் சுட்டிக்காட்டப்படும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்குகிறார். உலகப் புகழ்பெற்ற அரசியல் தத்துவவாதியாகப் போற்றப்படுகிறார்.
 எல்லா மனிதர்களும் சமூக, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து ஒரே மொழியியல் வடிவத்தைத்தான் பகிர்ந்துகொண்டுள்ளனர் என்று கூறும் இவர், மனித மொழி மற்ற உயிரினங்களின் தகவல்தொடர்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்கிறார்.
 வாழ்நாளின் பெரும்பகுதியில் இடதுசாரிக் கருத்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. நோபல் பரிசுக்கு இணையான ஜப்பான் நாட்டு கியோட்டோ விருது உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், பட்டங்கள் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment