Tuesday 9 December 2014

ஏரின்றி அமையாது உலகு

ஏர் என்பதற்குக் கலப்பை, அழகு முதலான பத்துச் சொற்களைக் கொண்டு பொருள் கூறுகிறது கழக அகராதி.
நில அளவைக்கு இன்று பயன்படுத்தக் கூடிய ஏக்கர், ஹெக்டேர் என்பவை தமிழில் இருந்து மருவியிருக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அதை ‘பிரெஞ்சு மூலம்' என்று ஆங்கில அகராதிகள் குறிப்பிடுகின்றன. எப்படியாகிலும் ஏர் என்பதை ஒரு விரிவான பொருண்மையில், வேளாண்மையின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஏர் ஏரை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழ்க்கை முறை, அதை நம்பியே வாழும் எண்ணற்ற மக்கள் இன்றைக்குப் பட்டுவரும் இன்னல்கள் எண்ணற்றவை. ஒரு காலத்தில் மிக உயர்வாகப் போற்றப்பட்ட வேளாண் வாழ்க்கை முறை இன்றைக்கு இளைஞர்களால் வெறுக்கப்படும் துறையாக, ஏன் உழவர்களாலேயே வெறுக்கப்படும் துறையாக மாறிவிட்டது.
விவசாயமே வேர்
ஆனாலும் இன்னும் மக்கள் உணவுக்கு வேளாண்மையையே நம்பியாக வேண்டி உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
மக்களுக்கு உணவு தேவைப்படும்வரை வேளாண்மை இருந்துதான் ஆக வேண்டும். அதனால்தான் பல நாடுகள் நாட்டின் உணவு தற்சார்புக்காக எதையும் கொடுத்து வேளாண்மையைக் காக்கின்றன. ஆனால், நம் இந்தியத் திருநாட்டில் நிலைமை வேறு வகையாக உள்ளது. ‘நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருக தட்டோரம்ம இவண் தட்டோரே என்று புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் குடபுலவியனார், நீர்நிலைகளின் முதன்மையையும், உணவின் தேவையையும் கூறுகிறார். இத்தகைய நியாயங்கள் இருந்தும் வேளாண்மை ஒரு நலிந்த துறையாகவே உள்ளது.
தள்ளாதார் இவண் தள்ளாதோரே' இன்றைக்கு உழவின் மீதும் உழவர்கள் மீதும் கொடுமையான போர் நடத்தப்படுவதை யாரும் மறுக்க முடியாது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் களத்தில் இல்லை என்றாலும், அதைவிடக் கொடுமையான பொருளியல் படைக்கலங்களைக் கொண்டு உழவர்கள் வீழ்த்தப்படுகின்றனர். குறிப்பாக இந்திய உழவர்களின் மீது, ஆயுதம் ஏதுமற்ற நிராயுதபாணிகளான அவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் எண்ணற்ற உழவர்களைக் காவு வாங்கியுள்ளது.
உழவர் சிக்கல்கள்
இந்திய உழவர்களின் சிக்கல்களை நான்கு முறைகளாகப் பகுக்கலாம். உழவர்களின் முதன்மையான நெருக்கடி, தற்சார்பை இழந்ததுதான். அவர்களது தற்சார்பு திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டது. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இந்திய உழவர்கள் பல நூற்றாண்டுகளாக விடாது உழைத்து வருபவர்கள்.
மன்னராட்சிக் காலத்தில் இருந்து உழவர்களின் வருமானத்தை நம்பியே, அரசுகள் இயங்கி வந்துள்ளன. அதனால்தான் பண்டை இலக்கியப் பதிவுகளில் உழவர்களின் சிறப்பு பதிவாகியுள்ளது. முற்றிலும் வேளாண்மையை மட்டும் நம்பி வாழும் உழவர்கள், நீண்டகாலமாகத் தொழில்நுட்ப முறையிலும், விதை, உரம் போன்ற இடுபொருள்கள் என அனைத்திலும் வெளியாட்களை நம்பியிராமல் தற்சார்பு உள்ளவர்களாக இருந்துள்ளார்கள்.
பசுமைப் புரட்சி எனப்படும் ரசாயன வேளாண்மை வந்த பின்னரே, உழவர்களின் தற்சார்பு சிதைவுற்றது. பறிபோன விதைகள் உழவர்களின் கைகளில் இருந்த பாரம்பரியப் பன்மய விதைகள், ‘வீரிய விதை அறிமுகம்' என்ற பெயரில் பறிக்கப்பட்டன, வேதி உரங்களின் பெயரால் கால்நடைக் கழிவை மேலாண்மை செய்யும் உத்திகள் மறக்கடிக்கப்பட்டன, டிராக்டர்களின் வருகையால் உழவு மாடுகள் மறைந்தன, தொடர்ச்சியாக டீசலுக்குக் கையேந்தும் நிலை ஏற்பட்டது, தொழில்நுட்பத்துக்கும் வெளியாட்கள் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
மரபார்ந்த நுட்பங்களைப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா போன்றவர்கள் மேம்படுத்தியதைப் போன்று எந்த வேளாண் பல்கலைக்கழகமும் செய்யவில்லை. மேலை நாடுகளின் பெரும் பண்ணைகளுக்கு ஏற்ற எந்திரங்களை, இங்கு இறக்குமதி செய்தார்களே தவிர நமக்கேற்ற முறையைக் கையாளவில்லை.
இதனால்தான் குமரப்பா 1956-களிலேயே வேளாண்மைப் பல்கலைக்கழகங்களைக் கண்டித்து எழுதினார். இன்றைக்கும் நமது ‘வல்லுநர்கள்' வேளாண்மையில் இந்திய - அமெரிக்கக் கூட்டு ஆய்வுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இப்படியாக அனைத்து நுட்பங்களுக்கும் இடுபொருள்களுக்கும் அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டிய தற்சார்பற்ற நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டுரையாசிரியர், சுற்றுச்சூழல் எழுத்தாளர் மற்றும் இயற்கை விவசாயி தொடர்புக்கு: adisilmail@gmail.com
ஓவியம்: முத்து

No comments:

Post a Comment