Wednesday 10 December 2014

புதிதாய் பிறந்த 'நியூ'சிலாந்து 1

நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம்.
எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன.
தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு மிகப் பெரிய எரிமலை நியூசிலாந்து பகுதியில் வெடித்தது. இதன் காரணமாகத்தான் அங்கு ‘டாப்போ ஏரி’ உருவானது.உலகின் மிகப் பெரிய பூச்சி இனம் (Giant Weta) நியூசிலாந்தில்தான் உள்ளது. ஒரு குருவியைவிட அதிக கனம் கொண்டதாக இந்தப் பூச்சி இருக்கும். நாட்டில் மூன்றில் ஒரு பங்கு பூங்காக்களால் ஆனது. ஏதோ திறந்த வெளிப் பூங்காக்கள் அல்ல. வேலியிடப்பட்டு நன்கு பாதுகாக்கப்படும் பூங்காக்கள்.
உலகிலேயே இரண்டு நாடுகள்தான் மருந்து நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய அனுமதிக்கின்றன. அவற்றில் ஒன்று அமெரிக்கா. மற்றொன்று? உங்களுக்கே இந்நேரம் யூகிக்க முடிந்திருக்கும்.நியூசிலாந்து ஒரு தீவு நாடு. தென்மேற்குப் பசிபிக் கடலில் உள்ளது. இரண்டு நிலப்பகுதிகள் இணைந்த பகுதி. ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்காக 1500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வளவு தனிமையாக இருப்பதாலோ என்னவோ அங்கு மக்கள் குடியேற்றம் மிகவும் மெதுவாக நிகழ்ந்தது. இங்கு மக்கள் குடியேறி 800 வருடங்கள்தான் ஆகின்றன. அந்த விதத்தில் நியூசிலாந்து ஒரு ‘நியூ’ நாடுதான்.
இப்போது கூட அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் குறைவான மக்கள் தொகைதான். தலைநகரம் வெலிங்டன். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக பிஸியான நகரம் ஆக்லாந்துதான். எக்கச்சக்கமான செம்மறி ஆடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. சுமார் நான்கு கோடி செம்மறி ஆடுகள். கணக்கிட்டால் ஒவ்வொருவருக்கும் ஒன்பது செம்மறி ஆடுகள்.
கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள் நியூசிலாந்து வீரர்களை ‘கிவிக்கள்’ என்று அழைப்பதை அறிந்திருப்பார்கள். கிவி என்பது பறக்க முடியாத ஒரு பறவை. நியூசிலாந்தில் அதிக அளவில் காணப்படுகிறது. நியூசிலாந்தின் நாணயத்தின் பெயர்கூட கிவி டாலர்தான். ஒரு டாலர் 100 சென்ட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் விமானப்படையின் லோகோகூட கிவி பறவைதான்.
ரேடியோ கார்பன் டேட்டிங் எனும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்தபோது நியூசிலாந்தில் கி.பி. 1250ல்தான் முதல் குடியேற்றம் நடந்திருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அப்படிக் குடியேறியவர்களின் கலாச்சாரத்தை மவோரி என்கிறார்கள். ஒருவித நாடோடிகளின் கலாச்சாரம் இது.
இவர்களிடையே உடு (Utu) என்ற பொருளாதாரப் பரிமாற்றம் இருந்தது. இதற்கு மூன்று கொள்கைகள் அடிப்படையாக இருந்தன. ஒன்று, கொடுப்பவர் மனப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் அவருக்கு இருக்கக் கூடாது. இரண்டு,
வாங்கிக் கொள்பவர் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். சொல்லப் போனால் அதைவிட அதிக மதிப்புள்ள பொருளை திருப்பிக் கொடுக்க வேண்டும். மூன்றாவது, இதுபோன்ற பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
கேட்கவே இன்பமாக இருக்கிறதில்லையா? ஆனால் இந்தக் கலாச்சாரத்தில் இன்னொரு சுவாரசியமான கோணமும் உண்டு. மேற்படி விதிகள் அவமானம் என்பதற்கும் பொருந்தும். அதாவது அவமானப்படுபவர் அந்த அவமானத்தை அதிக அளவில் எதிராளிக்குத் திருப்பித்தர வேண்டும். இப்படி ஒருவரையொருவர் அவமானப்படுத்திக் கொள்வது தொடர்ந்து நடைபெற வேண்டும்!
இவர்களுடைய நாடோடிக் கதைகளில் ஒரு தனித்துவம் உண்டு. ஒருவர் வர்ணிப்பதுபோலத்தான் இந்தக் கதைகள் இருக்கும். தான் வாழ்வதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அவர் கூறுவார். ஆனால் அவர் கண் எதிரே அவை நடப்பதுபோல நிகழ்கால வர்ணனைகளாகதான் அவை இருக்கும். கலாச்சாரத்தை மீறியதால் கிடைக்கும் தண்டனைதான் நோய்கள் என்று நம்பினார்கள். யாராவது நோய்வாய்ப்பட்டால் அவரை உடனே தனி இடத்திற்கு மாற்றிவிடுவார்கள். மாந்திரீகம் நடைபெறும். ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு தீயசக்தியின் வேலை. உதாரணத்திற்கு காசநோயை உண்டாக்கும் தீயசக்தியின் பெயர் டோக். கழுத்துப் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் காரணம் ஹுரா.
சிப்பிகள், மீன்கள், வாத்துகள் போன்றவை இவர்களின் முக்கிய உணவுகள்.இரண்டுக்கு மூன்று மீட்டர் அளவிலான குடிசைதான் இருப்பிடம். ஜன்னல் கிடையாது, சிம்னி கிடையாது. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே எட்டிப் பார்க்க, மவோரி கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்தது. அந்த மாற்றம் நியூசிலாந்தின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டது. இன்றுவரை பல சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.
(இன்னும் வரும்..)

No comments:

Post a Comment