Monday 1 December 2014

இன்று அன்று | 1965, டிசம்பர் 1 - தொடங்கப்பட்டது எல்லைப் பாதுகாப்புப் படை

எல்லையில் பாதுகாப்புப் பணி, பேரழிவு நிகழ்வுகளின்போது மீட்புப் பணி என்று நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் வீரர்கள் அடங்கிய ‘எல்லைப் பாதுகாப்புப் படை’ (பி.எஸ்.எஃப்.) 49 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில் தொடங்கப்பட்டது. ‘சாகும்வரை கடமையாற்றுவது’ என்ற கொள்கையுடன் ரத்தம், வியர்வை சிந்தி உழைக்கும் அசாத்தியத் துணிச்சல் கொண்ட வீரர்கள் இப்படையில் இடம்பெற்றுள்ளார்கள்.
அண்டை நாடுகள், குறிப்பாக பாகிஸ்தான், நடத்தும் ராணுவத் தாக்குதல்களையும், பயங்கரவாதிகளின் ஊடுருவலையும் தடுத்து நிறுத்துவது இந்தப் படையின் தலையாய பணி. இப்படை தொடங்கப்பட்டதற்கும் பாகிஸ்தானின் அத்துமீறல்தான் காரணம். 1965 ஏப்ரல் 9-ல் குஜராத்தின் சர்தார் போஸ்ட், சார் பெட் மற்றும் பெரியா பெட் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. அதன் பின்னர் தொடங்கிய இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வென்றது தனி வரலாறு.
ஆனால், எல்லையைப் பாதுகாக்க, பிரத்யேகமான ஒரு படை இல்லாததை இந்திய அரசு உணர்ந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள நில எல்லையைப் பாதுகாப்பதற்காக, அரசுச் செயலாளர்கள் குழு பரிந்துரையின் பேரில், 1965 டிசம்பர் 1-ல் இந்தப் படை தொடங்கப்பட்டது. இதன் தலைவராக, குஸ்ரோ ஃபாராமர்ஜ் ருஸ்தம்ஜி நியமிக்கப்பட்டார். பிரதமர் நேருவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக 6 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ருஸ்தம்ஜி.
1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போர், வங்கதேச உருவாக்கம் போன்ற நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றியது எல்லைப் பாதுகாப்புப் படை. பல ஆண்டுகளாக ஆண்களே பணியாற்றி வந்த இந்தப் படையில், தற்போது வீராங்கனைகளும் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐநா சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள பி.எஸ்.எஃப். வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
1999-ல் நடைபெற்ற கார்கில் யுத்தத்தின்போது, உயர்ந்த மலைப்பகுதிகளில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்தது இப்படை. 2001-ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, மீட்புப் பணிகளுக்காக முதலில் அங்கு சென்றதும் இப்படைதான். 2002-ல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தை ஒடுக்கியதிலும் இப்படைக்குப் பங்கு உண்டு.
- சரித்திரன்

No comments:

Post a Comment