Tuesday 18 November 2014

அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும்

மழை, உலகுக்கு உயிரூட்டும் அமுது. ஆனால், அது அமில மழையாகவோ அல்லது விஷவாயுக்களின் மழையாகவோ இருந்தால், அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்?
போபாலில் (1984) ஏற்பட்ட விஷவாயுக் கசிவு, ரஷ்யாவின் செர்னோபில் (1986) ஆண்டு ஏற்பட்ட அணுஉலை வெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து மிகப் பெரிய பரப்பைப் பாதித்த, இன்றும் தொடர்கிற சேதங்களும் உலகளாவிய பண்பாடு என்று இன்றைக்கு முன்வைக்கப் படுவதன் மற்றொரு முகத்தைக் காட்டுகின்றன.
பொருளாதாரம், ஊடகம், நுண்பொறியியல் முதலிய துறைகளின் கூட்டு முயற்சி ஈன்றெடுத்த உலகமயமாக்கல் சூழலில், இயற்கையாக வான் கொடுக்கும் மழையைவிட மனிதன் உருவாக்கிய விஞ்ஞான விஷங்களின் மழை மறுக்க முடியாத பகுதியாகிவிட்டது. இதனால், எப்போது, எங்கே என்ன மாதிரி மழை பெய்யும் என்ற அச்சம் தொழிற்சாலைகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு உண்டு.
ஆழ் சூழலியல்
நார்வேயைச் சேர்ந்த ஆர்னி நெஸ் (Arne Dekke Eide Ness, 1912-2000) என்னும் சிந்தனையாளர் ஆழ் சூழலியல் (Deep ecology) என்ற தத்துவத்தை முன் வைத்தார். இந்த ஆழ் சூழலியல் என்ற புதிய தத்துவம், பொறுப்பான சீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்துவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆழ் சூழலியல் என்றால் என்ன? இயற்கை வளங்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொணர்ந்து, பின்னர் அவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்தும் விஞ்ஞானம் சார்ந்த மேலைப் பண்பாட்டை இது மறுக்கிறது.
உருமாறாத நீர்
மனித இனமும், இயற்கையும் சமத்துவத்துடன் இருக்கும் அமைப்பில் நீரே அனைத்து உயிரினங்களையும் இணைக்கும் சரடாக இருக்கிறது. நாம் வாழும் நிலம், சுவாசிக்கும் காற்று, செடிகள், உணவு வகைகள் ஆகிய எல்லாவற்றிலுமே நீர் ஊடுருவி உள்ளது.
வெப்பமும் காற்றும் முடிவில் நீராக மாறும்போதுதான் உயிர் உண்டாகிறது. நீர் எப்போதுமே உருமாறுகிறதே தவிர, அழிவதில்லை. ஆக இயற்கை வழிபாடு தொடங்கி, பசுமை இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் தொடங்கி ஆழ் சூழலியல் என்று மேலை நாட்டுத் தத்துவம்வரை அனைத்துக் கொள்கைகளும் நீரையே மையம் என்று சுட்டிக்காட்டுகின்றன.
குறளும் சூழலியலும்
வாழ்க்கை நெறிமுறைகளை ஏழு சொற்களில் திரட்டிக் கொடுத்த திருவள்ளுவர், கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்த பாயிரவியலில் வான் சிறப்பை முன் வைக்கிறார். உலகை வாழவைப்பது மழை என்பதால், குறளில் அது அமிழ்தம் எனப்படுகிறது.
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானழிழ்தம் என்றுணரற் பாற்று. (அறம், அதிகாரம் 2, குறள் 11)
வள்ளுவர் கூறுவது ஒரு முழுமையான சூழலியல் கோட்பாடு. ஏனென்றால் மனித இனத்தை மையமாகக் கருதாமல், உயிரை மையமாகக் கருதி, அறத்தை உள்ளார்ந்ததாகக் கொண்ட உயிரை, அனைத்து உயிர்களுக்கும் சமமான மதிப்புடையதாகக் கருதுகிறார் வள்ளுவர்.
ஆக, வள்ளுவர் மழையென்று சுட்டுவது உலகுக்கு உயிரூட்டும் ஈரத்தைப் பற்றியது மட்டுமல்ல. அறம் என்னும் ஈரத்தால் பண்பட்ட வாழ்க்கை, இயற்கை வளத்தையும் வான் சிறப்பையும் பெறும்.
சூழலியல் அறம்
அற வாழ்க்கையே மனிதனுக்கும் இயற்கை வளத்துக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும். அற வாழ்வின் விளைவாகக் கிடைக்கும் செழுமையே உலகின் வளம். அறம் நிறைந்த உலகில் நீர்நிலைகள் வற்றாது, காடுகள் அழியாது, நஞ்சை நிலம் வறண்டு கட்டுமானப் பகுதியாக மாறாது.
அறத்தைத் தொடர்ந்து வரும் செழிப்பும் பொருளுமே, மனிதனுக்கு மன அமைதியையும், சூட்சுமமானதொரு இனிமையையும் தருகின்றன.ஆக அறம், பொருள், மேன்மையான இனிமை - ஆகிய அனைத்தையுமே, பாயிரவியலின் வான் சிறப்பில் சிறுகோட்டுப் பெரும் பழமாக வள்ளுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது ஆழ் சூழலியலையும் வெளிப்படுத்துகிறது.
கட்டுரையாளர், 
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்

No comments:

Post a Comment