Tuesday 11 November 2014

விபின் சந்திர பால் 10

சுதேசி இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களை செயல்படுத்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் விபின் சந்திர பால் .....

 வங்கதேசத்தின் போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தவர். பட்டப்படிப்பு முடிக்காதவர். ஆனாலும் ஆசிரியர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், நூலகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர். ‘வந்தே மாதரம்’ என்ற பத்திரிகை நடத்தினார்.

 அந்நிய துணி எரிப்பு, அந்நியப் பொருள் புறக்கணிப்பு, சுதேசி இயக்கம் ஆகியவை இவரது சிந்தனையில் விளைந்தவை. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை உணர்ந்த இவர், நாடு முழுவதும் எழுச்சிமிகு உரை நிகழ்த்தி வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார். சுதேசி பொருட்களைப் பயன்படுத்துவதால் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்கலாம் என்றார்.

 தீவிர முற்போக்குவாதி. கணவனை இழந்த பெண்ணை மணப்பதற்காக குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தார். இவரது எழுத்துகள் நாடு முழுவதும் சுதந்திர வேட்கையைப் பரப்பும் அக்னிப் பூக்களாக வலம் வந்தன. பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

 ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் இவர், காங்கிரஸ் கட்சியின் விட்டுக்கொடுக்கும் கொள்கைகள் பிடிக்காமல் போனதால் அரசியலை விட்டு விலகினார்.

 விடுதலை இயக்கத்தின் மும்மூர்த்திகள் ‘லால், பால், பால்’ என்பார்கள். அது லாலா லஜபதிராய், பாலகங்காதரத் திலகர், பிபின் சந்திர பால் ஆகியோரையே குறிக்கும்.

‘அந்நிய பொருள்களைப் புறக்கணித்து உள்நாட்டுத் தொழில்களை ஆதரிக்க வேண்டும். புதிய தொழில்களை நம் நாட்டவரே தொடங்க வேண்டும். நமது கலாச்சாரம், வரலாறு, தத்துவம், கணிதம், அறிவியல் ஆகியவற்றைக் கற்பிக்கும் தேசியக் கல்வி முறைக்கான பள்ளிகள் நிறுவப்பட வேண்டும்’ என்பவை விபின் சந்திர பாலின் பிரதான மேடை முழக்கங்கள்.

 1908-ம் ஆண்டுமுதல் 1911 வரை நாடு கடத்தப்பட்டார். லண்டன் இந்தியா ஹவுஸில் தலைமறைவாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வ.வே.சுப்பிரமணியம், வீர சாவர்க்கர், மதன்லால் திங்ரா ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். அங்கிருந்தபடியே ஸ்வராஜ் இதழை வெளியிட்டார்.

 இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கீதை, உபநிடதங்களை ஆழ்ந்து கற்றார். இந்திய தேசியம், இந்தியாவின் ஆன்மா உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

 ஆங்கிலேயரின் பொருளாதார வலிமை ஆட்டம் கண்டால், ஆட்சி தானாகவே முடிவுக்கு வரும் என வலியுறுத்தினார். தேசியக் கல்வி மூலம் இளம் உள்ளங்களில் மிக எளிதாக நாட்டுப்பற்றைப் பதியச் செய்யலாம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

 பாரதியாரின் அழைப்பை ஏற்று, சென்னையில் 1907-ம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட பிரச்சாரம் செய்தார். இந்த சுதந்திரப் போராளி 74-வது வயதில் காலமானார்.

No comments:

Post a Comment