Wednesday 12 November 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 3 நாளில் 5,672 விண்ணப்பம் விற்பனை

அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1,780 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், 27 உடற்கல்வி இயக்குநர்களும் (மொத்தம் 1,807 காலியிடங்கள்) போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடத்தப்படுகிறது. தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கடந்த திங்கள்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தின் விலை ரூ.50.
சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் போட்டிபோட்டு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கிறார்கள்.
முதல்நாளில் 2,003 படிவங்களும், 2-ம் நாளில் 1,763 படிவங்கள் விற்பனையாகின. மூன்றாம் நாளான நேற்று 1,906 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. முதல் 3 நாட்களில் 5,672 விண்ணப்பங்கள் விற்பனையானதாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா தெரிவித்தார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய தேர்வுக் கட்டணத்துடன் நவம்பர் 26-ம் தேதிக்குள், விண்ணப்பம் வாங்கிய இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த படிவங்களை எக்காரணம் கொண்டும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக அனுப்பக் கூடாது என்று விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment